மிரட்டும் வெள்ளம்; மிரண்டு அணை திறந்த கர்நாடகம்; வேகமாய் நிரம்பும் மேட்டூர்?

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், கபினி அணையைக் காப்பாற்றும் பொருட்டு, காவிரியில் நீர் திறந்துவிட மாநில முதல்வர் குமாரசாமி ஆணை பிறப்பித்தார். இதை அடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்து, தமிழகத்தின் பல ஆண்டுகால பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இதன்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் மசூத் ஹுசேனும், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் கோயல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், ஆணையத்துக்கு 4 மாநிலங்களின் சார்பில் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இருப்பினும், துவக்கம் முதலே காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவே செயல்பட்டு வரும் கர்நாடக முதல்வர் குமாரசாமி, தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து ஆணையத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார். இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.

அதுமட்டுமின்றி, முதல்வராகத் தேர்வான உடனே திருச்சி ஸ்ரீரங்கம் வந்தவர், மழை பெய்தால்தான் காவிரி நீர் தமிழகத்துக்கு வரும் என்று அதிரடியாகச் சொல்லிவிட்டு, சேதாரம் ஏதுமின்றி கர்நாடகம் சென்றார். இந்நிலையில் காவிரி நீர் திறந்து விட ஆணையம் உத்தரவிட்டும், இத்தனை நாட்கள் கால தாமதம் ஏற்படுத்தி வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, இப்போது மழை நீர் பெருகி அணை அபாயகட்டத்தை எட்டியதும், காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க இன்று உத்தரவிட்டுள்ளார். இதனால் காவிரியிலிருந்து வெளியேறும் நீரின் அளவு 35,000 கன அடியிலிருந்து 38,000 கன அடியாக உயர வாய்ப்புள்ளது.

கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் ஜூலை மாதத்துக்கான நீரை உடனடியாக திறக்க அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிக்கப் பட்டதை அடுத்து, 2-வது நாளாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க தடை நீட்டிக்கப் பட்டது!