பெருமாள் சிலையில் நாகம் ஏறிய ‘பக்திப் பரவச’ வாட்ஸ்அப் வைரல் வீடியோ: உண்மை என்ன?

மயக்கும் வாட்ஸ்அப்; மயங்கும் ஊடகங்கள்! இவற்றை எல்லாம் புரிந்து கொண்டால், இப்போது வைரலாகப் பரப்பி மகிழும் வீடியோவைப் போன்று பக்தர்கள் இனி செய்ய மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி!

கடந்த சில நாட்களாக நரசிம்மர் பெருமாள் விக்ரகத்தின் மீது நாகப் பாம்பு ஏறி படம் எடுத்து, பக்தர்களுக்கு காட்சி கொடுத்த பக்திப் பரவச வீடியோ ஒன்று வாட்ஸ்அப் வாயிலாக வரைமுறையின்றி பரவி வருகிறது. இது, தமிழகத்தின் மதுரை நகருக்கு அருகில் உள்ள திருமோகூர் திருக்கோயிலில் உள்ள பெருமாள் என்று ஒரு தகவல் உடன் பரவியது.

இதை உண்மை என்று நம்பி ஆங்கில செய்தித் தளங்களில் இருந்து தமிழ்த் தளங்கள் வரை செய்தியாக்கி, பக்திப் பரவச வீடியோவை லட்சக் கணக்கானோர் பார்க்க வகை செய்தனர். வாட்ஸ்அப்பில் பரவி வரும் ஒரு தகவலை தகுந்த வகையில் உறுதி செய்யாமல், செய்தி ஆக்கக் கூடாது என்பது, ஊடக ஆசிரியர் குழுவில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப் படும் அடிப்படைப் பாடம்.

சற்று இந்து மதம் சார்ந்த விவரம் அறிந்தவர்கள் ஆக இருந்திருப்பார்களே ஆனால், இந்த வீடியோவில் வரும் திருமால் விக்ரகம் நரசிம்மர் என்றும், வடகலை பிரிவு திருமண் (நாமம்) உள்ள கோயில் என்றும் புரிந்து கொண்டிருப்பார்கள். வீடியோவில் உள்ள விக்ரகத்துக்கும் திருமோகூருக்கும் தொடர்பில்லை என்பதும் புரிந்திருக்கும். திருமோகூர் தல காளமேகப் பெருமாள் கோயில் தென்கலை பிரிவு வகையைச் சார்ந்தது. அங்கே நரசிம்மர் விக்ரகமும் இப்படி இல்லை. தவறான ஒரு செய்தி, இப்படி செய்தித் தளத்தில் பரவும் போது, அதனால் அந்தத் திருக்கோயில் பணியாளர்களுக்குத்தான் அவப் பெயர் அல்லது பிரச்னை என்பதை செய்தியாளர்கள் உணர்ந்திருக்க வேண்டும்!

இன்னும் ஒரு படி மேலே போய், இந்த வீடியோவை தங்கள் பகுதியில் ஏதோ ஒரு கோயிலில் நடந்ததாக, தெலுங்கு டிவி., இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. வீடியோவில் நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள் பக்தர்கள். அதை தெலுங்கு செய்தியாளர்கள் கவனிக்கவில்லை போலும்! இந்தச் சம்பவம் அஹோபிலத்தில் நடந்ததாக ஒரு தகவலை அந்தச் செய்தி நிறுவனங்கள் தகவலாகப் போட்டிருக்கிறார்கள்.

தமிழகமா ஆந்திரமா என்ற தடுமாற்றத்துக்கு இடையில் இந்தச் சம்பவமும் இப்போது நடந்தது அல்ல என்பது இன்னுமோர் உண்மைத் தகவல்.

சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது தாழம்பூர். இங்கே நவநரசிம்மர் கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். கடந்த வருடம் 2017 மே மாதம் இந்த ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. அஹோபிலத்தில் உள்ள நவ நரசிம்மரைப் போல் இங்கேயும் நவ நரசிம்மர் சந்நிதிகள் அமைத்து, நரசிம்மரின் திருப்பெயர்களை மட்டும் வேறாக மாற்றியிருக்கிறார்கள்.

அந்தக் குடமுழுக்கு விழாவின் போது, பசு, யானை என பூஜை செய்து, அதாவது கோபூஜை, கஜபூஜை ஆகியவற்றை செய்த போது, சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டு நாகபூஜையும் செய்திருக்கிறார்கள். அதற்காகக் கொண்டு வரப்பட்ட நாகம், பெருமாள் சந்நிதியில் பூஜை நேரத்தில் விக்ரகத்தில் ஏறியதாக, அங்கே இருந்து, அந்த நிகழ்வினைப் படம் பிடித்த நபர் நம்மிடம் தெரிவித்தார்.

பாம்பு கொண்டு வரப்பட்டு ஏற்றப் பட்டதா, அல்லது தானாக வந்து ஊர்ந்து ஏறியதா என்பதை வைத்துதான், பக்திப் பரவசத்துக்கு உரிய பரபரப்புச் செய்தியாக ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. தானாக வந்த பாம்பு என்றால் ஆலயப் பணியாளருக்கு சிக்கல் இல்லை; பூஜைக்காக கொண்டு வரப் பட்ட பாம்பு என்றால் சட்டவிரோதச் செயலாகி ஆலயப் பணியாளர்களின் நிலை ஆட்டம் கண்டு விடும்! அது விஷமுள்ள பாம்பு என்றால் பூஜைக்கு உரியது, விஷம் நீக்கப்பட்ட பாம்பு என்றால் பூஜைக்கு உகந்ததல்ல என்கிறது சாஸ்திரம்! இந்த வீடியோவில் இவ்வளவு நெருக்கத்தில் பலரும் நின்றபடி செல்போன்களில் பதிவு செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால், ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்ற பொய்யா மொழியைப் பொய் மொழி ஆக்கியிருக்கிறார்களே என்று நம்மை ஆச்சரியப் பட வைக்கிறது!

ஆனால், ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இறை விக்ரஹம் என்பதை எப்படி பூஜை செய்ய வேண்டும், எப்படி அணுக வேண்டும் என்பதற்கு திருமால் ஆலயங்களாக இருந்தால் வைகானச, பாஞ்சராத்ர ஆகம விதிகள் தெளிவாக வரையறுத்து வைத்திருக்கின்றன. நரசிம்மர் தம் சிரத்தில் நாகக் குடையின் கீழ் வீற்றிருப்பதாக புராணம் கூறுவதற்கேற்ப சிற்ப சாஸ்திரப்படி விக்ரகத்தை வடித்து பூஜை செய்கிறோம்.

ஒரு விக்ரகம் கல்லில் செதுக்கப்படும் வரை அது சிலை. அதுவே பிரதிஷ்டை என மந்திர கோஷங்களுடன் யந்திரத்தின் கீழ் மருந்து சாற்றப்பட்டு, பீடத்தில் நிறுவப் பட்ட பிறகு விக்ரகம் என உயிரோட்டமுள்ளதாக மாறி விடுகிறது. அதன் பின்னர் அந்த இறை மூர்த்தங்களை பூஜை செய்யும் அர்ச்சகர் தனி கவனத்துடன் கையாள வேண்டியிருக்கும்.

பொதுவாக கருவறையில் நிலவும் எண்ணெய்ப் பிசுக்கு, விளக்கு தீபப் புகை, இருட்டு இவற்றால் கரப்பான் பூச்சிகள், பல்லி போன்றவை இறை மூர்த்தங்களின் மேல் ஏறக் கூடும். அவற்றை அப்புறப் படுத்தி, தினந்தோறும் காலை மூர்த்தங்களுக்கு பரிகார பூஜை போல் திருமஞ்சனம் அல்லது புரோக்ஷணம் எனும் நீர் தெளிக்கும் மந்திரச் சடங்கை செய்ய வேண்டும்.

அதாவது பூஜை செய்யும் அர்ச்சகரின் கைகளைத் தவிர உடலின் வேறு எந்தப் பகுதியும் விக்ரகத்தின் மீது படக்கூடாது. காரணம் உள்ளங்கை வேர்க்காது. உடலின் மற்ற பாகங்களில் வியர்வை சுரக்கும். அர்ச்சகரின் ஒரு துளி வியர்வை அந்த விக்ரகத்தின் மீது பட்டாலும் தவறு என்கின்றன ஆகமங்கள். அதுபோல் நிவேதனப் பொருளை அர்ச்சகரே கூட மூக்கினால் வாசனை பார்க்கக் கூடாது. பேசும்போதோ மந்திரம் சொல்லும் போதோ வாயில் இருந்து வெளியாகும் இம்மியளவு எச்சிலும் பிரசாதத்தில் படக்கூடாது. அதனால்தான் துணியைப் போட்டு அதனை மூடுகிறார்கள். மடப்பள்ளியில் இருந்து எடுத்து வரும் பிரசாதத்தைக் கொண்டு வரும் நபர் தன் மூக்கினை துணியால் மூடி கட்டிக் கொண்டு வர வேண்டும் என சாஸ்திரம் விதிக்கிறது.

இப்படி எல்லாம் கருவறை விக்ரகத்தை பேணிக் காக்க வேண்டும் என்று சொல்லும் போது, வேறு ஒரு உயிரினத்தை அதன் மீது ஏற்றுவதும், ஏறச் செய்வது பரிகார பூஜைக்கு உரியதுதான்! சிவன், திருமால், அம்பிகை உள்ளிட்ட இறை அம்சங்கள் நாகத்தைக் கொண்டிருந்தாலும், உயிருள்ள ஒரு நாகத்தை அந்த மூர்த்தங்களின் வடிவத்தின் மீது ஏற்றுவது மிகத் தவறு. அப்படி ஏறினாலும் பரிகாரம் செய்தாக வேண்டும். இது பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் நிகழ்வல்ல என்பதை பக்தர்கள் உணர வேண்டும்.

நரசிம்மருக்கு பிரகலாதன் எனும் பக்தன். சிறுவனான அவனை பெருமானுக்குப் பிடிக்கும். அதற்காக, யாரோ ஒரு சிறுவனை நரசிம்மர் விக்ரகத்தில் இது போல் பக்கத்தில் ஏற்றி, கட்டியணைக்க வைத்து, இதுதான் பிரகலாத அனுபவம் என்று கூறினால் நாம் ஏற்போமா?

இதனை கதா காலட்சேபங்களிலும் உபந்யாச கூடங்களிலும் நாடக மேடைகளிலும் அடையாளப் படுத்தி செய்து காட்டலாம். ஆனால் கருவறை பெருமாளிடம் அல்ல!

இறை நம்பிக்கையை வளர்ப்பதை விட்டுவிட்டு, பிள்ளையார் பால் குடித்தார், சாய் பாபா படத்தில் இருந்து விபூதி கொட்டுகிறது, படத்தில் கண்ணன் கண் சிமிட்டினான் என்பது போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பதால்தான், வாயிலிருந்து லிங்கம் எடுத்து பக்தியையும் பக்தர்களையும் கொச்சைப் படுத்தும் போலி சாமியார்கள் உருவாகிறார்கள் என்பதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து மதத்தில் உள்ள உருவ வழிபாடு என்பது, நமது மனத்தை ஒருமுகப் படுத்தி, இறைவனை உருவகப் படுத்தி, அந்த உருவத்தில் நிலைக்கச் செய்து, மனத்தைப் பக்குவப் படுத்தி, நம்மைப் பண்படுத்தும் எளிய இனிய வழி. அந்த வழியை பெரியோர் நமக்குக் கற்றுத் தந்த வழியில் முறையாக பின்பற்றி மேன்மை அடைவது பக்தனின் லட்சணம். இயற்கையை மீறிய அமானுஷ்யங்கள் அதிசயங்கள் எல்லாம் பக்தியால் பக்குவப்பட்டு மனத்தில் இறை வெறி ஏறிய யாரோ ஒருவருக்கு தென்படுவது!

இவற்றை எல்லாம் புரிந்து கொண்டால், இப்போது வைரலாகப் பரப்பி மகிழும் வீடியோவைப் போன்று பக்தர்கள் இனி செய்ய மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி!

– செங்கோட்டை ஸ்ரீராம்