அழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜக., சார்பில் தலைவர்கள் மரியாதை!

அதன்படி, பாஜக., தொண்டர்கள் சூழ இன்று காலை கட்டாளகுளத்திற்குச் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

சென்னை: வீரன் அழகுமுத்துக்கோன் 260வது பலிதானம் ஆன தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜக., சார்பில் அங்கங்கே உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்கள். சென்னை எழும்பூரில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழக பாஜக., மூத்த தலைவருமான இல.கணேசன், இது குறித்துக் கூறியபோது, “அடிமை வாழ்வை எதிர்த்த, கப்பம் கட்ட மறுத்த முதல் தமிழக மன்னன், ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போரில் அந்நிய சூழ்ச்சிக்குப் பலியான இளம் மாவீரன், வீர அழகுமுத்து கோன் அவர்களது 260 ஆவது பலி தான நாளான இன்று (ஜூலை 11) காலை எழும்பூரிலுள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.

பிறந்த நாள் அளவுக்கு நினைவு நாள் கொண்டாடப் படுவதில்லை. இன்றைய தினம் நினைவு நாள் அல்ல, பலிதான நாள். தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேரும் போது உயிரையும் தருவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதற்கு உதாரணம் வீர அழகுமுத்து கோன் அவர்களது பலிதானம்.” என்று கூறினார்.

அவருடன் நடிகர் எஸ்.வி.சேகர், டால்பின் ஸ்ரீதரன் உள்ளிட்ட திரளான தமிழக பாஜக., நிர்வாகிகள் சென்று மாலை அணிவித்தனர்.

அதுபோல், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தாம் தூத்துக்குடி மாவட்டத்துக்கே சென்று வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறியிருந்தார். “வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையை முன்னிட்டு இன்று (11/7/2018) கட்டாளகுளத்திற்கு சென்று அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய இருக்கிறேன். தமிழகத்தில் தோன்றிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் தலைசிறந்தவரான வீரன் அழகுமுத்துக்கோனுக்கு பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசு நினைவு தபால்தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது என்பது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை. இந்நாளில் வீரன் அழகுமுத்துக்கோன் தியாகத்தை மனதில் ஏந்தி வீரவணக்கம் செலுத்துவோம். என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, பாஜக., தொண்டர்கள் சூழ இன்று காலை கட்டாளகுளத்திற்குச் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.