சிலைத் திருட்டு வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை : அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

சென்னை: சிலைத் திருட்டு வழக்கை இனி சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், தமிழகத்தில் கோவில் சிலைகள் காணாமல் போவதை கண்டு கொள்ளாமல், நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது எனவும் அது அரசை எச்சரித்துள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கில் சிலைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அரசு அளித்துவரும் ஒத்துழைப்பு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வழக்கறிஞர் உடல்நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்துக்கு வர இயலாத நிலையில், அறிக்கைகளைத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் மனுதாரர்களில் ஒருவரான நரசிம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருந்து 13 சிலைகள் திருடு போயிருப்பதாகவும், இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் முறையிட்டார்.

அவரது முறையீட்டைக் கேட்ட நீதிபதி மகாதேவன், புகார் அளித்த பின்னரும் ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் திருட்டு தொடர்பாக நடவடிக்கை எதுவும் ஏன் எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். கோவில் சிலைகள் மக்களின் நம்பிக்கைக்கு உரியவை என்பதால் அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றார் அவர்.

கோவில் சிலைகள் கடத்தப்படுவதைக் கண்டு கொள்ளாமல் நீதிமன்றம் வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்று கூறிய நீதிபதி, நிலைமை இதேபோல் மோசமாகவே தொடருமானால் இந்த வழக்குகளை சிபிஐ.,யிடம் ஒப்படைக்க உத்தரவிட நீதிமன்றம் தயங்காது என எச்சரித்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப் பட்டது.