ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் திருநாடு அலங்கரித்தார்!

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி, இன்று பிற்பகல் 3 மணி அளவில் திருநாடு அலங்கரித்தார். அவருக்கு வயது 85.

அண்மைக் காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். நேற்று மாலை முதலே அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்ததாம். இந்நிலையில் இன்று பிற்பகம் 3 மணி அளவில் அவர் திருநாடு அலங்கரித்ததாக ஜீயர் மடத்தில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஸ்ரீராமானுஜர் நிறுவிய விசிஷ்டாத்வைத வைணவ மார்க்கத்தின் தலைமைப் பீடமாகக் கருதப் படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயராக விளங்கியவர் ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மடத்தின் 50வது பட்ட ஜீயராகத் திகழ்ந்த ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி 85 வயது ஆன தள்ளாத நிலையிலும் மடத்தின் கைங்கர்யங்களைக் குறைவற நடத்தி வந்தார்.

ஸ்ரீரங்கம் வடக்கு உத்திர வீதியில், தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள வடக்கு வாசலுக்கு எதிரே உள்ளது ஜீயர் மடம். கடந்த இரு வருடங்களுக்கு முன்னர்(2016 மே) இந்த மடத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பூ பறிக்கச் சென்றார்.அப்போது, 30 அடி ஆழம் கொண்ட கிணற்றடி அருகே சென்ற அவர், மூச்சு வாங்க கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார்.

நீர் இல்லாமல் கிணறு வற்றியிருந்ததால், காயம் பட்டு உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டன. நெற்றியில் பலத்த காயமும், கை, கால்களில் சிராய்ப்பும் ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது. அதன் பின்னர் அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

மிகச் சிறந்த வித்வானாகத் திகழ்ந்தவர். தமிழ், சமஸ்க்ருதம் என இரு மொழிகளிலும் வல்லவர். உபந்யாசங்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதிலும் வல்லவர்.