திருநாடலங்கரித்த ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர்: வாழ்க்கைக் குறிப்பு!

ஜீயர் ஸ்வாமிகள் பூர்வாச்ரமத்தில் பற்பல நகரங்களுக்கும் வருகை தந்து, திருநகரி, பத்ரி, ஸ்ரீரங்கம், கோவை போன்ற ஊர்களில் சிறப்பான பல ஹோமங்களை நடத்தி வைத்து பொதுமக்களை நல்வழியில் ஈடுபடுத்தியுள்ளார்.

 

ஒரு சகாப்தம் நிறைவு பெற்றது. 50ஆம் பட்டம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி திருநாட்டை அலங்கரித்தார். 1989-2018, 29 ஆண்டுகள் பட்டத்தை அலங்கரித்தார். வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ ஜீயர் சுவாமியின் விமல சரம திருமேனி அவரது திருவரசில் (வட திருக்காவேரிக்கரையில் ) திருப்பள்ளிப் படுத்தப்படும்.

அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:

ஸ்ரீரங்க நாராயண ஜீயர் (50ஆவது பட்டம்) ஸ்வாமியின் பல்வேறு அறப்பணிகள்:

ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் திருவரங்க நாதனுக்கு நம் சுவாமியின் சமர்ப்பணமாகும்

நம்பெருமாளின் திருப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்ட ஜீயர்களின் வரிசையில் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துக் கொண்டு அரங்கனுக்குக் கைங்கர்யம் செய்ய வந்த ஐம்பதாவது பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமிகளின் திருப் பணிகளையும், ஈடு பாட்டையும் ஈண்டு காண்போம்.

நயினார்பாளையம் என்ற சிற்றூரில் ஒரு வைதிக குடும்பத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணமாசார்யருக்கும், சௌ பாக்கியவதி சேஷலட்சுமிக்கும் 3.12.1929-இல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் தோற்றத்தைக் கண்ட பெரியோர்கள் ஆண்டவனுக்குக் கைங்கர்யம் செய்யவே பிறந்த குழந்தை என்று ஆசிகள் வழங்கி ஸ்ரீவரதராஜன் என்று பெயர் சூட்டினர்.

இவரை அனைவரும் ஸ்ரீவரதாசார்யர் என்று அழைத்து வந்தனர். இவருக்குக் கல்வி கற்கும் பிராயம் வந்ததும் வேதத்திலும் வைதிகத்திலும் நாட்டம் அதிகமிருந்ததால் திருவரங்கத்தை அடுத்த திருவானைக்காவில் உள்ள சங்கர மடத்தில் ரிக் வேதமும், சிதம்பரத்தில் வடமொழியும் பயின்று தேர்ச்சி பெற்றார். வேதம் பயிலுகின்ற காலத்திலேயே அரங்கனை ஸேவித்து அரங்கனிடம் ஈடுபாடு கொண்டார்.

இவருடன் கல்வி பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் தம் இறைவனடி சேர்ந்த காலம் சென்ற காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஜயேந்திரர் . முறையாக வேதம் பயின்று கல்வியில் சிறந்தவராய் விளங்கிய இவர் பின் சிறிது காலம் சிதம்பரம் ஆர். எம்.எஸ். பாடசாலையில் சாஸ்திரமும், சித்ரகூட மஹாவித்வான் அஷ்டகோத்ரம் வேங்கடாசார்ய ஸ்வாமியிடத்தில் ஸம்பிரதாய க்ரந்தங்களையும், அருளிச் செயலையும் கற்றார்.

திருமண வயது வந்தவுடன் ஸ்வாமிகளுக்கு சார்வாய் என்ற ஊரிலுள்ள சௌபாக்யவதி ஆதிலக்ஷ்மி அம்மாளைத் திருமணம் செய்துவித்தனர். இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட ஸ்வாமிக்கு மூன்று பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்து சீரும் சிறப்புடனும் வளர்ந்து வந்தனர்.

கல்வி பயிலுகின்ற காலத்திலேயே அரங்கனிடம் ஈடுபாடு கொண்ட நம் ஜீயர் ஸ்வாமிகள் 1958-ஆம் வருடம் அரங்கன் கோயிலில் உள்ள ஸ்ரீபரமபதநாதன் ஸன்னிதியில் சிறிது காலம் திருவாராதன கைங்கர்யம் செய்து வந்தார். பின் 1959-ஆம் வருடம் கோவை சென்று ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள், ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் (கெரடி கோயில், கோவை) அர்ச்சக கைங்கர்யம் செய்து வந்தார்.

கோவை திருக்கோயிலில் இவர் ஆற்றிய மனப்பூர்வமான கைங்கர்யங்களினாலும், அடியார்களிடம் செலுத்திய அன்பி னாலும், இவர் முறையாக நடத்தி வைத்த ஸ்ரீசுதர்சன, அஷ்டாக்ஷர ஹோமங்களினாலும் பொதுமக்கள் ஈடுபாடு கொண்டு ஸ்வாமி களிடம் பேரன்பு கொண்டனர்.

ஜீயர் ஸ்வாமிகள் பூர்வாச்ரமத்தில் பற்பல நகரங்களுக்கும் வருகை தந்து, திருநகரி, பத்ரி, ஸ்ரீரங்கம், கோவை போன்ற ஊர்களில் சிறப்பான பல ஹோமங்களை நடத்தி வைத்து பொதுமக்களை நல்வழியில் ஈடுபடுத்தியுள்ளார்.

கோவையில் தமக்குக் கிடைத்த ஏராளமான செல்வங்களைத் துறந்து அரங்கனின் ஸேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜீயர் ஸ்வாமிகள் தமது அறுபதாவது வயது நிறைவுற்ற உடனே கோவை மாநகரிலிருந்து புறப்பட்டுத் திருவரங்கத்திற்கு வந்து தம் நெடுநாள் விருப்பப்படி உடையவர் ஸன்னிதியில் காஷாயம் ஏற்று ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்ற பட்டமேற்று ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்தின் ஐம்பதாவது ஜீயராக அலங்கரித்து வந்தார்.