கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க ராகுல் காந்தி மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும்!

சென்னை: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் ராகுல் காந்தி பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வதில் தமக்கோ, குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். தில்லியில் தம்மை சந்தித்த இயக்குனர் இரஞ்சித்திடம் இவ்வாறு அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால், அந்த வழக்கில் தண்டிக்கப் பட்டவர்களுக்கு எத்தகைய சலுகைகளை வேண்டுமானாலும் வழங்க முடியும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில், அதை ரத்து செய்யும்படி ராஜிவின் மனைவியும், அப்போதைய காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி கேட்டுக் கொண்டதால் அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தமிழக ஆளுனர் ஆணையிட்டார். அதேபோல், இப்போதும் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா ஆகிய மூவரும் இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப் படுவார்கள்.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நால்வருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவரான நீதியரசர் கே.டி. தாமஸ், 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் நேரம் வந்து விட்டதாக தொடர்ந்து கூறிவருகிறார். இதுதொடர்பாக கடந்த 18.10.2017 அன்று ராஜிவின் மனைவி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய நீதிபதி கே.டி. தாமஸ்,‘‘ ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்து விட்ட நிலையில், அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்யும்படி நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவர். இந்த விஷயத்தில் நீங்கள் தான் பெரிய மனதுடன் செயல்பட்டு விடுதலை செய்ய வைக்க வேண்டும். அது உங்களால் மட்டும் தான் முடியும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அவரது கடிதத்திற்கு சோனியா பதிலளிக்கவில்லை; 7 தமிழர்களை விடுவிக்க பரிந்துரையும் செய்யவில்லை. ஆனால், இப்போது 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமது குடும்பத்துக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ள நிலையில், சோனியாவிடம் நீதிபதி தாமஸ் முன்வைத்த அதே கோரிக்கையை ராகுல் காந்தியிடம் நான் முன்வைக்கிறேன். இதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கு ராகுல்காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். – என்று கூறியுள்ளார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.