பாவமன்னிப்பு பலாத்காரத்தில் போலீஸில் சரணடைந்த பாதிரியார்!

கொல்லம்: கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் சர்ச்சில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் 4 பேரில் ஒருவர் இன்று போலீஸில் சரண் அடைந்தார்.

முன்னதாக, புகாரின் பேரில் 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாதிரியார்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ, ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஜோப் மேத்யூ இன்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற பாதிரியார்களும் விரைவில் சரண் அடையக் கூடும் என்று கூறப்படுகிறது.