தடி எடுத்தவன்லாம் தண்டல்காரன்ங்கிற நிலை வந்துடும்: எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்!

சென்னை: காவல் துறையினர் இல்லை என்றால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை வந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்த சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், காவல் துறையினருக்கு வாரம் ஒருநாள் விடுப்பு வழங்குவது குறித்து பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு வியாழக்கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு ஊழியர்கள் வாரத்தில் 2 நாள் விடுப்பு எடுக்கும் நிலையில், காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஏன் ஒரு நாள் விடுப்பு அளிக்கக்கூடாது என்று விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு என்பது ஆவணங்களில் மட்டுமே இருப்பதாகவும், காவலர்கள் வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் குடும்பத்துடன் செலவிட அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார்.

மேலும், காவல்துறையினர் இல்லையென்றால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை உருவாகி விடும் என்று எச்சரித்தார்.