கூகுள் போட்டோ எடுக்கும் போது, நம்ம கோகுல் எடுக்கக் கூடாதா? மோடியின் கேள்வியால் மனம் மாறிய தொல்லியல்துறை!


  • மோடியின் அறிவுரையால் செல்ஃபி, போட்டோ எடுக்க அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை!
  • தாஜ்மஹால், அஜந்தா குகை, காஷ்மீரில் லே பகுதியை தவிர மற்ற இடங்களில் செல்ஃபி எடுக்கலாம்!
  • மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் நினைவுச் சின்னங்கள் அருகே செல்ஃபி எடுக்கலாம்!
  • புகைப்படம், செல்ஃபி எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை பிரதமர் மோடி அறிவுரையால் நீக்கியது தொல்லியல் துறை!
  • தொல்லியல் துறையின் முடிவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புது தில்லி: கூகுள் போட்டோ எடுத்திருக்கும் போது, நம்ம மக்கள் எடுக்கக் கூடாதா என்று பிரதமர் மோடி எழுப்பிய கேள்வியின் காரணமாக மனம் மாறிய தொல்லியல் துறை, பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்லியல் துறை சார்ந்த இடங்களில் புகைப்படம் எடுக்க தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுதும் 3,686 பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்லியல் சார்ந்த இடங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொல்லியல்துறை பராமரித்து வருகிறது. இந்த இடங்களில் புகைப்படம் எடுக்கவும் வீடியோ எடுக்கவும் அனுமதிக்கப் படுவதில்லை. இந்நிலையில், புகைப்பட வல்லுநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் இந்த இடங்களில் புகைப்படங்களை எடுக்க தங்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி வந்தனர்.

இந்நிலையில், நேற்று தில்லியில் தொல்லியல்துறைக்கு புதிய அலுவலகக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறை சார்ந்த இடங்களில் செயற்கைக் கோள் மூலம் புகைப்படம் எடுக்க முடியும்போது, பொது மக்களுக்கு ஏன் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை சரியானதல்ல என்று கூறியிருந்தார்.

இதை அடுத்து, பழங்கால சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறை சார்ந்த இடங்களில் புகைப்படம் எடுக்க தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், தாஜ்மஹால், அஜந்தா குகை, லே அரண்மனையில் மட்டும் தடை தொடரும் என அறிவித்துள்ளது.

தொல்லியல் துறையின் டாக்டர் மகேஷ் சர்மாவின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. தொல்லியல் துறையின் இந்த முடிவால் ஏராளமான இந்தியர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் அந்த இடங்களுக்குச் சென்று பார்த்து பாரம்பரியத்தை உணர்ந்து கொள்ளவும் இயலும் என்று குறிப்பிட்டுள்ளார்.