காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா? பெண்களுக்காக இல்லையா?: மோடியின் கேள்வி!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 23 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா, பெண்களுக்காக இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

உத்தரப் பிரதேசத்துக்கு இரு நாள் பயணமாகச் சென்றுள்ளார் மோடி. அங்கே அசம்காரில் ரூ.23 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் பூர்வாஞ்சல் அதி விரைவு சாலைத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 340 கிமீ., தொலைவுக்கு அமைக்கப்படும் இந்த அதி விரைவுச் சாலை பரபங்கி, அமேதி, சுல்தான்பூர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை உ.பி. தலைநகர் லக்னோவுடன் இணைக்கிறது.

சாலைக்கு அடிக்கல் நாட்டிய பின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த விரைவுச் சாலை மூலம் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை குறைந்த நேரத்தில் தில்லி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள கிராம மக்களின் அடையாளமே மாறும்.

பரம்பரை அரசியலில் ஈடுபடும் கட்சிகள் முஸ்லீம் பெண்கள் துயரப்படும் வகையில் முத்தலாக் முறை தொடர வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால், இந்த அரசு முத்தலாக் முறைக்கு எதிராக போராடும். முத்தலாக் தடை சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன.

காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களுக்கானது என்று அதன் தலைவர் பேசினார். அவர்களது கட்சி முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தானா அல்லது அவர்களது கட்சியில் முஸ்லீம் பெண்களுக்கும் இடம் உண்டா? என்று கேள்வி எழுப்பினார் மோடி.