பார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே! சீரும் அருவி!

திருநெல்வேலி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் திருக்குற்றாலம் அருவியில், கொட்டும் அருவி நீரைப் பார்த்துப் பரவசம் அடையும் சுற்றுலாப் பயணிகள், குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த சில தினங்களாக செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது. குற்றாலம், செங்கோட்டை மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. மேலும், தென்காசி சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தொடர் மழை காரணமாக, குற்றால அருவிகளில் தொடர்ந்து 2ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சாரல் விழா குறித்து மாவட்ட நிர்வாகம் இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை.