October 26, 2021, 5:43 pm
More

  ARTICLE - SECTIONS

  மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் : மக்களவையில் இன்று விவாதம்

  03 July19 Parliment - 1நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டம் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் தொடங்கியது. அவை தொடங்கியதுமே, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக தெலுங்கு தேசம் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர். இவற்றின் மீது நாளை முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.

  நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இது ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. மக்களவை நேற்று காலை தொடங்குவதற்கு முன், பிரதமர் மோடி அவைக்கு வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்த ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். சிலரிடம் கைகுலுக்கி பேசினார். அவர் நுழைந்தபோது பாரதீய ஜனதா கட்சி எம்.பிக்கள் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

  மக்களவையில் ஐ.மு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். மக்களவை தொடங்கியதும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள் யஷ்வந்த்ரா (தேசியவாத காங்கரஸ்), கவித் ராஜேந்திரா தேட்யா (பாஜ), டோகேஹோ (என்டிபிபி), தபசும் பேகம் (ஆர்எல்டி) ஆகிய 4 பேர் பதவி ஏற்றனர். அதன்பின் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 3 பேருக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் அறிக்கை வாசித்தார். உலகளவில் மற்றும் தேசியளவில் நடந்த பல்வேறு சோக சம்பவங்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

  மக்களவையில் கேள்வி நேரத்தை சபாநாயகர் நேற்று காலை தொடங்கியதும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு பதாகைகளுடன் சென்று, ‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும்’ என கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, சமாஜ்வாடி எம்.பிக்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது நடந்த அமளியால் அவர்களின் கோரிக்கை யாருக்கும் கேட்கவில்லை. காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் இருக்கையில் நின்றபடியே தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை, எஸ்.சி சட்டத்தை நீர்த்து போகச் செய்தது உட்பட பல பிரச்னைகளை எழுப்பினர். கேள்வி நேரம் முடிந்த பிறகு பிரச்னைகளை எழுப்பலாம், இப்போது அனுமதிக்க மாட்டேன் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார். பூஜ்ய நேரத்தில் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்பி கேசினேனி சீனிவாஸ், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதேபோல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவிப்பதால், இதைக் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த சபாநாயகர், நோட்டீஸ் கொடுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை வாசித்தார். இந்த தீர்மானம் மீதான விவாதத்தை நடத்தும் தேதியை 2 அல்லது 3 நாட்களில் ெதரிவிப்பதாக முதலில் அவர் கூறினார்.

  இந்நிலையில், மதிய உணவு இடைவெளிக்குப்பின் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், ‘‘நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெறும். இந்த விவாதம் முழுநாளும் நடக்கும். அதன் பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும். அன்றைய தினம் எந்த கேள்வி நேரமும் கிடையாது. அவையில் வேறு எந்த அலுவலும் நடக்காது’’ என்றார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய பெரிய கட்சியை முதலில் அனுமதிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், ‘‘பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற கேள்விக்கு இடமில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை யார் முதலில் கொண்டு வந்தார்களோ, அவரது பெயர் முதலில் வாசிக்கப்படும்’’ என்றார். ‘‘நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்த அனைத்து உறுப்பினர்களையும், தீர்மானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்தார். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர், ‘‘நாடாளுமன்ற விதிமுறைகளை நீங்கள் படியுங்கள். அதன்படிதான் நான் செயல்படுகிறேன்’’ என்றார்.

  கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜ கூட்டணி அரசை எதிர்த்து, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். அதுதான் மக்களவையில் இதற்கு முன்பு கடைசியாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமாகும். இப்போது, 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போதும் பாஜ தான் மத்தியில் ஆட்சியில் உள்ளது. ஆனால், அப்போது போல் இப்போதும் பாஜ.வுக்கு 272 என்ற பெரும்பான்மை பலம் உள்ளது. மேலும், அதிமுக.வின் 37 எம்.பி.க்களின் ஆதரவும் உள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-