December 2, 2021, 6:45 pm
More

  பிரதமர் பதவியில் ‘கண்’ணாக ‘கண்’ணடித்த ராகுல்! ‘கண்’டித்த மோடி! காதைக் கடித்த ராகுலின் ரகசியம்!

  rahul modi parliament - 1

  புது தில்லி: நாடாளுமன்றத்தில் தன் பேச்சை முடித்தவுடனே, மோடியைக் கட்டிக் கொண்டு காதைக் கடித்த ராகுல் ரகசியமாகச் சொன்னது என்ன? என்பது குறித்து இப்போது பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. சமூக இணையதளங்களில் அந்த வீடியோ பதிவை வெளியிட்டு, பலரும் இது குறித்து விவாதித்து வருகின்றார்கள்.

  மக்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த எதிர்க் கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றார்.

  நேற்று நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் காலை முதலே விவாதம் களை கட்டியது. இரவு 11 மணி வரை தொடர்ந்து பதினொரு நேரம் நடைபெற்ற விவாதத்தின் போது, பிரதமர் மோடி பதில் அளித்து உரை நிகழ்த்தினார்.

  முன்னதாக, ராகுல் தனது பேச்சை முடித்ததும், இருக்கையில் இருந்து எழுந்து சென்று, பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கை நோக்கிச் சென்றார். அப்போதே பலரும் வியப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் அமர்ந்திருந்த பாஜக., உறுப்பினர்களும் ராகுல் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலுடன் காத்திருந்தார்கள்.

  ஆனால், அவை மரபுகளை மீறி, கண்ணியம் சிறிதும் இன்றி, மோடியை திடீரென்று கட்டிப் பிடித்துக் கொண்டு, காதில் ஏதோ முணுமுணுத்தார் ராகுல். அதைக் கேட்டுச் சிரித்த மோடி, ராகுலின் முதுகில் தட்டிக் கொடுத்தார். இப்போது ராகுல் என்ன சொன்னார், ஏன் மோடி தட்டிக் கொடுத்தார் என்றெல்லாம் விவாதங்கள் சமூகத் தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப் பட்டு வருகிறது.

  மோடி தனது உரையின் போது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுப்பினார்.

  பெரும்பான்மையைக் கொண்டுள்ள அரசு ஆட்சியில் இருக்கும் போது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறிய மோடி, ராகுல் தன்னைக் கட்டிப் பிடித்து, காது கடித்து, கண்ணடித்து கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதன் ரகசியத்தை வெளிப்படுத்தினார்.

  பிரதமர் ஆக விருப்பப்படும் ஒருவர், என்னை இருக்கையில் இருந்து எழுத்திருக்கச் சொன்னார் என்று ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடிய மோடி, இதற்கு ஏன் இந்த அவசரம்? யார் பிரதமராக வர வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று கூறினார்.

  இதன் மூலம், இந்த நான்கு வருடங்கள் கூட வேறு ஒருவரை பிரதமர் பதவியில் அமர விடாமல் காங்கிரஸ் தனது குயுக்தி அரசியலைச் செய்வதை வெளிப்படையாகக் காட்டி விட்டது காங்கிரஸ் கட்சி. அதனை, முதிர்ச்சியற்ற வகையில், ஒரு சிறுபிள்ளைத்தனமாகவே பல இடங்களிலும் தன் இயல்புத் தன்மையை வெளிப்படுத்தி வரும் ராகுல் காந்தியின் மூலம் வெளிப்படுத்தி விட்டது காங்கிரஸ் கட்சி.

  modi rahul - 2

  இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும் என்று மோடி கோரிக்கை விடுத்ததுடன், எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியல் இப்போது வெளிப்பட்டுள்ளது என்றார். அவரைப் பேச விடாமல் தெலுங்கு தேசம் எம்பி.,க்கள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

  தொடர்ந்து மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்ட மோடி, மக்களுக்கு செய்துள்ள நல்ல திட்டங்களால் அவையின் முன்பு தாம் தைரியமாக நிற்பதாகக் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட யாரையும் நம்பாத காங்கிரஸ் இப்போது தமது அரசின் மீதும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. இது அரசுக்கு முன்வைக்கப்பட்ட சோதனை அல்ல. காங்கிரசுக்கும் அதன் நட்புக்குரிய கட்சிகளுக்கும் வைக்கப்பட்ட சோதனை. பிரதமராக ஆசைப்படுகிற ஒருவருக்கு வைக்கப்பட்ட சோதனை, அதற்கு இதர கட்சிகளின் ஆதரவை அவர் திரட்டுவதற்கான முயற்சி. எதிர்க் கட்சியினர் சிதறிவிடாமல் ஓரணியில் இருப்பதற்காக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் இது என்று பட்டியலிட்டார் மோடி.

  இதன் மூலம், தம்மை பிரதமர் இருக்கையில் இருந்து எழுந்து போகச் சொல்கிறார் ராகுல் என்றும், தாம் எப்படி நடித்தோம் என்பதை தன் சகாக்களிடம் சொல்லி அவர்களின் வெகுமதியைப் பெறுவதற்காக கண் அடித்து கயமைத்தனம் செய்தார் ராகுல் என்றும் தெள்ளத் தெளிவாக மோடி, நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

  என் கண்ணைப் பார்த்துப் பேச நீங்கள் ஏன் பயப்ப்படுகிறீர்கள்  என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு மோடி பதிலளித்த போது,

  நான் ஏழை என்பதால் உங்களின் கண்ணை( காங்கிரஸ்) பார்க்க துணியவில்லை; உங்கள் கண்ணை பார்த்த நேதாஜியை என்ன செய்தீர்கள்? உங்கள் கண்ணை பார்த்த தேவகவுடா என்ன ஆனார்? உங்கள் கண்ணை பார்த்த  ஐ.கே.குஜ்ரால் என்ன ஆனார்? உங்கள் கண்னை பார்த்த ஜெயபிரகாஷ்நராயன் என்ன ஆனார்? உங்கள் கண்ணை பார்த்த மொராஜிதேசாய் என்ன ஆனார்? உங்கள் கண்ணை பார்த்த  சரண்சிங் என்ன ஆனார்? உங்கள் கண்ணை பார்த்த சர்தார் வல்லப பாய் பட்டேல் என்ன ஆனார்?  உங்கள் கண்ணை பார்த்த சரத்பவார் என்ன ஆனார்?  உங்கள் கண்ணை பார்த்த பிரணாப் முகர்ஜி என்ன ஆனார்?

  இதையெல்லாம் அறிந்தும் உங்கள் கண்ணை பார்த்து பேச நான் துணிவேனா?  அதனால் தான் நான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்! என்னை பிரதமர் ஆக்கியது அவர்கள் தானே! என்றார் மோடி.

  உண்மையில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாகக் கூறித்தான் மக்கள் முன் வாக்கு கேட்டார் மோடி. ஆனால், தேவகவுட, ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், வி.பி.சிங், மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸின் மாயையால் பிரதமர் ஆக்கப்பட்ட எவருமே மக்கள் முன் நின்று வாக்குக் கேட்டு பிரதமர் ஆனவர்கள் இல்லை. நேரு, இந்திரா, ராஜீவ் தவிர்த்து மற்றவர்களை எல்லாம் தங்கள் வசதிக்காக பிரதமர் ஆக்கி நெருக்குதல் கொடுத்து பொம்மையாக ஆட்டி வைத்தது காங்கிரஸ்! அடுத்து சோனியாவை பிரதமர் ஆக்க முயன்று, அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அதற்கு முட்டுக்கட்டை போட்டார் என்ற காரணத்துக்காக, அவர் மீது காழ்ப்பு உணர்வை அள்ளித் தெளித்தது காங்கிரஸ்.

  மாறாக வாஜ்பாய், மோடி ஆகியோர், மக்களிடம் தாம் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாகச் சொல்லியே வாக்குக் கேட்டார்கள் என்பதையும், தங்களைத் தவிர மற்ற எவரும் ஆட்சியில் இருந்துவிடக் கூடாது என்ற சர்வாதிகார, பரம்பரை அரசாட்சி மனோபாவத்தையும் வெளிப்படுத்தி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம், மக்களின் நம்பிக்கையை இழந்து நிற்கிறது காங்கிரஸ் கட்சி.

  ராகுலின் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ள காங்கிரஸின் முகத்திரையைக் கிழித்து எறிந்ததற்காக, ராகுலுக்கு முதுகில் தட்டி பாராட்டு தெரிவித்துள்ளார் மோடி!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,773FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-