October 16, 2021, 3:25 pm
More

  ARTICLE - SECTIONS

  நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றதில் நம்பிக்கையில்லை! நாடகமாடும் நாயுடு!

  20 July20 Parliment - 1

  நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது, பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜூலை 24 ஆம் தேதி ஆந்திராவில் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

  நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், ஒட்டுமொத்த ஆந்திராவும் நீதிக்காகக் காத்திருந்தது. ஆனால் மீண்டும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. அவர்களிடம் பெரும்பான்மை இருந்தும் நீதியை மீறுகின்றனர். பிரதமரின் பேச்சு வேதனை அளிக்கிறது. அவர் என்னை ஈகோ பார்ப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவர்தான் ஈகோ பார்க்கிறார். எங்கள் போராட்டத்தின் ஓர் அங்கமாகவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தோம்.

  கடந்த 4 ஆண்டுகளில் நான் 29 முறை தில்லிக்குச் சென்றுள்ளேன். ஆனால் ஆந்திராவுக்கு நீதி வழங்குவதற்கு பதில் என் மீது அரசியல் ரீதியான தாக்குதல் நடத்துகின்றனர். நான் பொய் பேசுவதாகக் கூறுகின்றனர். தகுதியில்லாத ஒருவர் பிரதமராக இருந்து பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனையாக உள்ளது. எங்களிடம் போதிய அளவில் எம்.பி.,க்கள் இல்லாததால் மத்திய அரசு எங்களை புறக்கணிக்கிறது.

  மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு, குரல் எழுப்ப வேண்டும். பாஜக.,வை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும். 5 கோடி ஆந்திர மக்களின் உணர்வுகளும் புண்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார் சந்திரபாபு நாயுடு.

  23 July20 ragul modi - 2

  ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் போராடியதாகவும், ஆனால் மத்திய அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை என்றும் நாயுடு குற்றம் சாட்டுகிறார். இதை அடுத்து கூட்டணியில் இருந்து வெளியே வந்து, மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் கொண்டு வந்தார் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றுப் போனதன் புலம்பலாகவே சந்திரபாபு நாயுடுவின் இந்தக் கருத்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

  காரணம், காங்கிரஸ் இப்போது தலைமை சரியில்லாத கப்பலாகத் தள்ளாடுகிறது. பாஜக.,வுடன் கூட்டணியில் இருந்தால், தாம் மாநிலத்துக்குள்ளேயே குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியிருக்கும். மாறாக, தாமே தலைமை எடுக்க இது தருணம் என்று எதிர்பார்க்கிறார் சந்திரபாபு நாயுடு. மேலும், திருப்பதி கோயில் விவகாரம், ஊழல் பிரச்னைகளில் மத்திய அரசின் நியாயமான நடவடிக்கைகளில் நாயுடுவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் தன் மகன் ஆலோசனையின் பேரில், நாயுடு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறுகிறார்கள்!

  அதுபோல், ஆந்திராவில் பாஜக., வளரவேண்டுமானால் சந்திரபாபு நாயுடுவுடன் ஒட்டிக் கொண்டு அரசியல் செய்தால் தேறாது என்பதை பாஜக.,வின் தேசியத் தலைவர் அமித் ஷா புரிந்து கொண்டிருக்கிறார். எனவே, தேவையற்ற தொல்லைகளைத் தந்து கொண்டிருக்கும் நாயுடுவுடன் எப்பாடு பட்டாவது கூட்டணியை விட்டுச் சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என்ற கெஞ்சல் போக்கை அவர் கைக்கொள்ளவில்ல்லை. இருந்தால் இருங்கள், செல்லவேண்டுமெனில் சென்றுவிடுங்கள் என்ற அணுகுமுறையையே சந்திரபாபு நாயுடுவுடன் காட்டினார்.

  22 June27 Andra chandra babu naidu - 3

  சந்திரபாபு நாயுடு கேட்பது போல், சிறப்பு அந்தஸ்து ஆந்திரத்துக்குக் கொடுத்தால் தமிழகம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தாக இருந்தது. அதற்காக, மோடிக்கு கடிதம் எழுதி, நாயுடு கேட்பதற்கு அடிபணிந்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார் ஜெயலலிதா. தற்போதைய நிலையிலேயே, தமிழகத்தில் உள்ள தொழில்கள், வரவேண்டிய தொழில் வாய்ப்புகள் ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டன. தமிழகம் தொழில் வளர்ச்சி அளவில் பின் தங்கிவிட்டது. இந்நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால், அனைத்து தொழில்களையும் ஆந்திரத்துக்கு இழுத்து, தமிழகத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் நாயுடு என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரிந்த விஷயம்தான்!

  மேலும், பதிநான்காம் நிதி கமிஷன் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது என்பதை, ஏன் எதற்கு என்ற காரணங்களுடன் புட்டுப் புட்டு வைத்துவிட்டது. அந்த நிதி கமிஷன் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்களும் உறுப்பினராக இருந்தார்கள். அவர்களும் சேர்ந்துதான் அந்த அறிக்கையை ஒருமனதாக தயாரித்துள்ளனர். அப்படி இருக்கும் போது, அந்த நிதி கமிஷனின் அறிக்கையை மத்திய அரசு மீறிச் செயல்பட முடியாது என்ற உண்மையை மூடி மறைத்து அரசியல் செய்து வருகிறார் சந்திர பாபு நாயுடு!

  chandrababunaidu - 4

  காங்கிரஸ் தனது அரசியல் லாபத்துக்காக, தேர்தலை சந்திக்கும் கட்சிக் கட்டத்தில் ஏதாவது குளறுபடிகளைச் செய்யும். அப்படி முயன்றதுதான், ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா, சீமாந்திரா என இரு மாநிலங்கள் ஆக்கியது. இதனை, ஏற்கெனவே தனது நாடாளுமன்ற உரையில் மோடி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். வாஜ்பாய் நான்கு மாநிலங்களைப் பிரித்த போது , தொலை நோக்குடன் பிரித்தார். அப்போது அம்மாநிலங்களில் எந்தப் பிரச்னையும் வரவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் அரசு, அரசியல் காரணங்களுக்காக மாநிலத்தை அவசர அவசரமாகப் பிரித்தது. அதன் பலனை இப்போது தாம் அனுபவிக்க நேர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

  பாஜக.,வும் கூட தனது தேர்தல் அறிக்கையில், பிரிக்கப்பட்ட இரு மாநிலங்களுக்கும் தேவையான நிதி உதவி அளிக்கப்படும் என்று தான் கூறியதே தவிர, எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அளிப்பதாகக் கூறவில்லை. தெலுங்கு தேசம் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சீமாந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதாக வாக்களித்தது. இது பாஜக.,வின் வாக்குறுதி அல்ல!

  இப்படி இருக்கும் போது, ஏற்கெனவே 14ஆம் நிதி கமிஷனின் அறிக்கையை மீறி எந்தக் கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தாலும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கவே முடியாது எனும் போது, வேண்டுமென்றே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, அதற்கு காங்கிரஸின் தயவை நாடிய சந்திரபாபுவின் செயல் எத்தகைய மோசமான மக்கள்விரோதச் செயல் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

  சந்திரபாபு நாயுடு இப்போது ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். எனவே தான் மாநிலத்தில் செல்வாக்கைப் பெற விரும்பி இப்படி ஒரு தேவையில்லாத நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டார்.

  உண்மையில் இது பாஜக.,வுக்கே சாதகமாக அமைந்து விட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் அடுத்து கொண்டு வருவதற்குள் தேர்தலே வந்துவிடும்! இதன் மூலம் பாஜக.,வின் நியாயங்களை மோடி தேர்தல் பிரசார மேடையைப் போல் நாடாளுமன்ற அவையைப் பயன்படுத்திக் கொள்ளும் சூழலை காங்கிரஸின் ராகுலும், தெலுங்குதேச நாயுடுவும் உருவாக்கி விட்டார்கள்!

  1 COMMENT

  1. தயவு செய்து கூகுளை மொழி பெயர்ப்பு கருவி மூலம் தன்னிச்சையாக ஆங்கிலத்தில் சிறு சுருக்கம் அல்லது சம்மரி கொடுத்தால் உங்களுக்கு சர்ச் என்ஜின் ரேடுர்ன்ஸ் அதிகரிக்கும்

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,141FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-