October 26, 2021, 5:56 pm
More

  ARTICLE - SECTIONS

  கருணாநிதியின் சகாப்தம்

  கருணாநிதியின் சகாப்தம் எப்படிப்பட்டது…?

  TH23 KARUNANIDHI FASTING - 1

  திருட்டைத் தடுக்கணுமா… திருடன் கையில் சாவியைக் கொடு என்று ஒரு பழமொழி உண்டு. திராவிட, திராவிட முன்னேற்றக் கழகங்களின் நாத்திகப் பிரசாரமும் பிரிவினை கோஷமும் பெரிதாகிக்கொண்டே போனபோது தேசத்தையும் தெய்விகத்தையும் இருகண்களாகக் கொண்ட இந்துக்கள் செய்து அதைத்தான்.

  *

  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் கிளர்ந்தெழுந்த தமிழ் உணர்வுதான் திமுகவின் வெற்றிக்குக் காரணம் என்பது சரியானதல்ல.

  உண்மையில் ஹிந்தித் திணிப்பு என்பதன் உண்மையான நோக்கமே வேறு.

  நேரு லண்டனில் படித்தவர். மேற்கத்திய ஆங்கிலேய கிறிஸ்தவ நவீனத்துவத்தின் வளர்ப்பு மகன். இந்திய மொழிகள் மீது அவருக்கு என்றுமே பெரிய மரியாதை இருந்தது கிடையாது. வாழ்நாள் முழுவதும் அவர் பேசியதும் எழுதியதும் அடிமைப்படுத்திய ஆங்கிலேயரின் தாய்மொழியில்தான். சுதந்தரம் கிடைத்த நள்ளிரவில் ஆற்றிய உரையும்கூட அடிமைத்தனத்தை வெளிக்காட்டும்விதமான அலட்டல் ஆங்கிலத்தில்தான். பிரதமராகப் பதவியேற்றவர் 1950-ல் வெகு தெளிவாக 15 ஆண்டுகள் ஆங்கிலமே அதிகாரபூர்வ மொழியாக நீடிக்கும் என்றுதான் சொல்லியிருந்தார். 1963-லும் மேலும் சில வருடங்களுக்கு அதை நீட்டிக்கவே செய்தார்.

  1965-ல் ஹிந்தி அதிகாரபூர்வமொழியாக அறிவிக்கப்பட வேண்டிய நேரம் வந்தபோது மஹாராஷ்டிரா, பஞ்சாப், வங்காளம், ஆந்திரம், தமிழகம் என பல மாநிலங்கள் எதிர்த்தன.

  தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் முதலமைச்சர் பக்தவத்சலமும் காங்கிரஸ் கட்சித் தலைவர் காமராஜரும் ஹிந்தியை அதிகாரபூர்வமொழியாக ஆக்க விரும்பினார்கள். தமிழகத்தில் நடந்த கிளர்ச்சியை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்கள். சுமார் 70 போராட்டக்காரர்கள் இறந்ததாக அதிகாரபூர்வ அறிக்கைகள் தெரிவிக்க அதைவிட அதிகமானவர் இறந்திருப்பார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

  தமிழக காங்கிரஸ் அரசு இந்தக் கிளர்ச்சியை சட்ட ஒழுங்குப் பிரச்னையாகப் பார்த்து காவல் துறைக்கு அளவுகடந்த அதிகாரம் கொடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உத்தரவிட்டது. 1937-ல் ஹிந்தியைப் பள்ளிகளில் கற்றுத்தர ஏற்பாடு செய்த ராஜாஜி 1965-ல் ஹிந்தியை எதிர்த்துக் குரல் கொடுத்தார். ஆங்கிலம் எப்படி அந்நிய மொழியோ அதுபோல் ஹிந்தியும் இந்தியாவில் பலருக்கு அந்நிய மொழி என்று சொன்னார்.

  1937-ல் ராஜாஜி ஹிந்தியை கற்கச் சொன்னதால் அதை எதிர்த்த ஈ.வெ.ராமசாமி 1965-ல் அதே ராஜாஜி ஹிந்தியை எதிர்த்ததால் ஆதரித்தார். காங்கிரஸ் அரசு கட்டவிழ்த்த தாக்குதல்களை முழுமையாக ஆதரித்தார். தமிழகத்தின் உருது பேசும் இஸ்லாமியர்கள் ஹிந்தியை அதிகாரபூர்வ மொழியாக ஆக்க ஆதரவு தெரிவித்தனர்.

  மத்திய அரசு இந்தியை ஒரே அதிகாரபூர்வ மொழியாக ஆக்குவதை விடுத்து முன்புபோலவே ஆங்கிலமும் ஹிந்தியுமாக இருக்கட்டும் என்று சொன்னது. எனினும் மத்திய அரசு நிறுவனங்கள், தகவல் தொடர்புகள் ஆகியவற்றில் ஹிந்தியை முன்பு போலவே தொடர்ந்து பயன்படுத்தியும் வருகிறது.

  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் ஓரணியில் திரட்டப்பட்ட தமிழ் உணர்வின் அடிப்படையில் அண்ணாத்துரை தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தது. 1969-ல் அண்ணாத்துரை இறந்ததைத் தொடர்ந்து கருணாநிதி திடீர் முதல்வரானார். 1972-ல் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து அடுத்து  நடந்த தேர்தலில் கருணாநிதி தோற்கடிக்கப்பட்டார். அப்படியாக ஹிந்து திணிப்பு என்ற ஒன்று நடந்திராவிட்டால், அண்ணா இறந்திராவிட்டால், எம்.ஜி.ஆர். 1969-லேயே போர்க்கொடி உயர்த்தியிருந்தால் கருணாநிதி ஒரு எம்.எல்.ஏ.வாகவே நீடித்திருப்பார். சிலர் தலைவர்களாகவே பிறப்பார்கள். சிலர் மேல் தலைமை விதிவசமாகத் திணிக்கப்படும். சிலர் தலைமையை தட்டிப் பறிப்பார்கள்.

  தட்டிப் பறிக்கும் தலைமை நீடிக்காது.

  கட்சிக்குள் அவர் ஒரே தலைவராக இருந்திருக்கலாம். மக்கள் மத்தியில் அப்படியான தலைமை கிடைக்கவே இல்லை. அதிலும் மதிமுக பிரிந்து சென்றபோதான அதிருப்தியும் அழகிரி மூலமான நெருக்கடிகளும் கட்சிக்குள்ளான அந்த ஆதிக்கத்தையும் கேள்விக்கு உள்ளாகக்வே செய்கின்றன.

  *

  திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கைகள் : நாத்திகம் என்ற பெயரில் இந்து மத விரோதம்; ஜாதி எதிர்ப்பு என்ற பெயரில் பிராமண வெறுப்பு மற்றும் இடைநிலை ஜாதி ஆதிக்கம்; வடவர் எதிர்ப்பு.

  இதில் இந்து விரோதம் என்பதை இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல் இருப்பது, இந்து பண்டிகைகளை விடுமுறை தினக் கொண்டாட்டமாகக் கொண்டாடுவது, இந்து உணர்வாளர்களைச் சீண்டும் நோக்கில் நோன்புக் கஞ்சி குடிப்பது, கேக் சாப்பிடுவது என வேடிக்கை காட்டிவந்ததைத் தவிர அவர்களுடைய கொள்கை சார்ந்து எதுவும் செய்ய முடிந்திருக்கவில்லை. ஏனென்றால் என்னதான் ஈ.வெ.ரா. மண் என்று வாய்க்கு வாய் சொன்னாலும் இது இந்துக்களின் மண் என்பது தெரிந்ததால் நாத்திக சவடால்கள் பேச்சளவிலேயே நின்றுபோயின.

  ஜாதி ஒழிப்பைப் பொறுத்தவரையில் இரட்டைக்குவளையில் ஆரம்பித்து உடுமலை சங்கர் கொலைவரை எதையுமே கண்டிக்காமல் அல்லது கண்டிப்பதுபோல் கண்டித்து கண்டும் காணாமல் இருந்ததுவரை ஓர் அப்பட்டமான இடைநிலை ஜாதி ஆதிக்கத்துக்கு துணை நின்ற வரலாறுதான் கருணாநிதியினுடையது.

  வடவர் எதிர்ப்பு என்பது மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுடன் வைத்துக்கொண்ட சந்தர்ப்பவாத கூட்டணிகள் மூலம் வலுவிழந்து போனது.

  இதில் முதலாவது மற்றும் மூன்றாவது விஷயங்களில் கருணாநிதி சந்தர்ப்பவாதியாக இருந்ததென்பது தமிழக இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் நன்மையே செய்திருக்கின்றன. அந்தவகையில் இந்தக் கலகக்காரனின் மத-தேச விசுவாசம் மெச்சத் தகுந்ததே.

  *

  வர்க்கப் போரில் கீழ் வெண்மணி ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக நின்றதில் ஆரம்பித்து விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளி பெருந்தொழில்முனைவுகளுக்கு அதில் கிடைக்கும் கமிஷனை மட்டுமே கருத்தில் கொண்டு காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டதுவரை கருணாநிதி செய்தவை ஏராளம்.

  தமிழ் மொழி வளர்ச்சிக்கு என்று வரலாற்றில் நினைவுகூரத்தக்க எதையும் கருணாநிதி செய்திருக்கவில்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் ஆங்கில வழிக் கல்வி புற்றீசலாகப் பெருகியது. கருணாநிதிக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு அது. உண்மையிலேயே தமிழ் பற்று இருந்திருந்தால் அதாவது 1965 ஹிந்தி எதிர்ப்புப் போர் என்பது தமிழ் மீதான அக்கறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தால், எம்.ஜி.ஆர். தாய்மொழிக்  கல்வியை அழிக்க முற்பட்டபோது இன்னொரு போராட்டத்தை கருணாநிதி முன்னெடுத்து ஆட்சியை எளிதில் கைப்பற்றியிருக்கவும்முடியும். தமிழ் வழிக் கல்வியைப் பாதுகாத்திருக்கவும் முடியும். இரண்டையும் செய்யவில்லை கருணாநிதி. தன் பங்குக்கு நர்சரிகளைப் பெருகச் செய்தார்.

  அதுபோலவேதான் மது விஷயத்திலும். தமிழகத்தைக் குடிகார மாநிலமாக ஆக்கியதில் கருணாநிதியின் பங்கு கணிசமானது. வாக்காளர்களை இலவசத்தைக் காட்டி மயக்கும் அரசியலை அறிமுகப்படுத்தியதும் இதே கருணாநிதியே.

  முள்ளிவாய்க்கால் ஈழப் படுகொலை நேரத்தில் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு பதவி கேட்கப் போனது, காலை உணவுக்கும் மதிய உனவுக்கும் இடையில் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தது, மழைவிட்டுவிட்டது… தூவானம் நிற்கவில்லை என்று கொத்து குண்டு தாக்குதல்களை கவித்துவமாக (?) பேசியது போன்றவை நீங்கலாக வேறெதுவும் செய்திருக்கவில்லை (துவக்குகள் மவுனிக்கப்பட்டதும் 100 கோடி ரூபாயை தமிழகத்தில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமுக்குக்  கொடுக்கும்போர்வையில் தமிழகப் பிரிவினைவாத சக்திகளுக்குக் கொடுத்து வாயை மூட வைத்ததை வேண்டுமானால் சொல்ல மறந்த சாதனையாகச் சேர்த்துக்கொள்ளலாம்).

  சமத்துவபுரம், உழவர் சந்தை என தொடங்கிய எதையும் திறம்பட முன்னெடுக்க முடியாத நிர்வாகத் திறமையின்மையும் ஊழலை மட்டும் குடும்பக் கலையாகவே மிளிரச் செய்த பெருமையும் கருணாநிதிக்கே உரித்தானது.

  மொத்தத்தில், தவறான செயல்களுக்காக தவறாமல் நினைக்கப்படும் தலைவர்களில் கருணாநிதிக்கு நிச்சயம் ஓர் இடம் இருக்கும். அதை வேறு யாரும் மிஞ்சிவிடாமல் அந்தப் புகழே நீடூழி வாழட்டும். சரித்திரத்தில் அந்த கருணாநிதியின் பெயர் நீடித்து நிலைக்கட்டும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-