October 22, 2021, 3:41 pm
More

  ARTICLE - SECTIONS

  சங்கரன்கோவிலில் நடந்த ஆடித்தபசு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

  sankarankoil adithapasu - 1

  நெல்லை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற  புண்ணியத் தலமான சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதியம்மன் திருக்கோவிலில், ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

  முன்னதாகவே தொடங்கி விழா நடைபெற்றது. தபசுக் கோலத்தில் கோமதியம்மை காட்சிதர, சங்கரநயினார், கோமதியம்மன் சப்பரத்தில் வந்து அருள்காட்சி நல்கினர். இந்த வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் முழங்க சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்தனர்.

  “அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவர் வாயில் மண்ணு” என்ற மாபெரும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகவே அன்னை பார்வதி இப்பூவுலகிற்கு வந்து ஒற்றைக்காலில் ஊசி முனையில் தவம் இருந்தார். இதை இன்றைக்கும் மக்கள் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோமதியம்மாள் சன்னதியில் ஆடித்தவசு திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

  உமை ஒரு பாகனாய் காட்சி தரும் சிவன், சங்கரன் கோவிலில் புன்னை வனத்தில் பசுக்கூட்டங்களின் நடுவே அன்னை கோமதி அம்மன் ஊசி முனையில் தவம் இருந்ததை மெச்சி, நாராயணரை தனது இடது பாகத்தில் ஏற்று சங்கரநாராயணராக காட்சியளித்தனர். இந்த நிகழ்வு ஒரு ஆடி மாதத்தில் நிகழ்ந்தது.

  இன்றைக்கும் ஆடி மாதத்தில் சங்கரன்கோவிலில் தவசு திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்.

  உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்! ஆடித்தவசு புராண கதை சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்று சங்கன், பத்மன் என்ற நாக அரசர்கள். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான்.

  தான் அவர்களின் சர்ச்சைக்கு மூலகாரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர்.

  இருவருமே ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அந்த சிவனிடமே வரம் கேட்டாள். சிவபெருமானும் மனமுவந்து, ‘அகத்திய முனிவர் தவமியற்றிய பொதிகை மலைப்பகுதியில் புன்னை விருட்சமாகப் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்” என்றார்.

  சிவனை வணங்கிய பார்வதியும் புன்னைவனத்துக்குப் புறப்பட்டார். தேவியாரைப் பிரிய மனமின்றி, ‘உடன் வருவோம்” என வேண்டிய தேவர்களை, ‘நீங்கள் புன்னைவனத்தில் விருட்சமாகத் தோன்றி, தேன் மிகுந்த மலராகவும் கனியாகவும் மகிழ்விப்பீராக” எனக் கூறி உடன் அழைத்தார்.

  ‘தெய்வப் பெண்களை பசு (ஆ) வடிவெடுத்து பால் கொடுத்து மகிழ்ச்சி தாருங்கள்” என்றார் பார்வதி. ‘ஆ” வடிவெடுத்து தெய்வப் பெண்கள் உமாதேவியுடன் வந்ததால், அன்னை ‘ஆவுடையாள்” என்றும் அழைக்கப்படுகிறாள்.

  சகல வரம் தரும் சங்கர நாரயணர் புன்னைவனமாகிய சங்கரன்கோவிலில் சிவனை நோக்கி உமாதேவியார் முனிவர்கள், தேவர்கள், தெய்வப் பெண்களுடன் ஒற்றைக்காலில் தவமிருந்தார்.

  தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமியில் புன்னை வனத்தில் ‘சங்கரநாராயணராக’, உமாதேவியார் உள்ளிட்ட சகலருக்கும் காட்சிகொடுத்தார். ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம்!, ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர-மாணிக்க மகுடம்!, ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு! ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம்!, ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை! , ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்க அரிஹரனாய் காட்சி தந்தார் இறைவன்.

  அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், ‘வேண்டிய வரங்களைக் கேள்’… என்றார் சிவபெருமான். ‘இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திரு-உருவைக் கொள்ள-வேண்டும்’ என அம்பாள் வேண்ட, ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார்.

  இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு விழா சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில், கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் 9ம் திருநாளன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு இன்று நிகழ்ந்தது.

  காலை தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். மாலையில் சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் தெற்கு வீதியில் தபசுக்காக சிவபெருமான் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது தன் வலது காலை உயர்த்தி, இடக் காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்த கோலத்தில் அம்பாள் தவக்கோலத்தில் காட்சி தந்தாள். இந்தக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து அம்மன் அருள் பெற்றனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,577FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-