October 29, 2021, 1:17 am
More

  ARTICLE - SECTIONS

  தமிழர்கள் இந்துக்களா..? – தமிழகத்தை வஞ்சிக்கிறதா இந்தியா..?

  mylapore temple - 1

  தமிழர்கள் இந்துக்களா..?
  தமிழகத்தை வஞ்சிக்கிறதா இந்தியா..?

  1. இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது. தமிழகத்தில் (இந்தியாவில்) ஜாதியே ஒருவருடைய அடையாளமாக இருக்கிறது. அந்தவகையில் தமிழர்கள் (இந்தியர்கள்) இந்துக்கள் அல்ல.

  2. இந்து மதத்தின் புனித மொழியான சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையிலான பனிப்போர் காலகாலமானது.

  3. திராவிடர்கள் (தமிழர்கள்) ஆரியர்களின் (வட இந்தியர்களின்) நிரந்தரப் பகைவர்களே…

  4. ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போர்தான். இந்து புராணங்களில் அரக்கர்களாகச் சொல்லப்பட்டிருப்பவர்கள் திராவிட – தமிழர்கள்தான்.

  5. இந்து மதம் என்பது வைதிக பிராமணர்களின் மதம் – தமிழர்களின் மதம் அல்ல.

  6. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்படும் தமிழர்களான சூத்திர, தலித்கள் இந்துக்களாக எப்படி இருக்க முடியும்?

  7. சாதி: இந்து மதத்தின் உருவாக்கம்; ஆதி காலத் தமிழர்களிடையே ஜாதியே கிடையாது.

  8. மனு ஸ்மிருதி இந்து மதத்தின் ஆதார நூல். தமிழர்களின் ஆதார நூல் திருக்குறள். தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் சமண – பௌத்த காப்பியங்களே. தமிழின் பெரும்பாலான பழங்கால சங்க இலக்கியங்கள் மதச் சார்பற்றவையே.

  தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்பவர்கள் பட்டியலிடும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை இவை. இவை ஒன்றைப் பற்றியும் விரிவாகப் பார்ப்பதற்கு முன்பாக முன்னுரையாக, முன்னோட்டமாக சில பின்னணித் தகவல்கள், தரவுகள், கணிப்புகளுடன் தொடங்குகிறேன்.

  யார் எதிரிகள் ?

  ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவர்களா… அரபு நாட்டவர் இஸ்லாமியர்களா என்ற கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானதோ அதுபோலவே முட்டாள்தனமானதுதான் தமிழர்கள் இந்துக்களா என்று கேட்பதும். ஆனால், சமீப சில ஆண்டுகளாக அதாவது, முள்ளிவாய்க்காலில் புலிகளுடைய துப்பாக்கிகள் மவுனமாக்கப்பட்ட பிறகு தமிழகத்திலும் நரேந்திர மோதி பிரதமரானதைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்தப் பிரசாரம் (இந்திய அளவில் இந்தியர்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்கிறார்கள்) தீவிரமாக முன்னெடுக்கப்படத் தொடங்கியிருக்கிறது. அதிலும் நரேந்திர மோதி மத்தியில் பதவி ஏற்ற பிறகு தமிழகத்தை இந்தியா வஞ்சிக்கிறது என்ற கோஷமும் அதி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இந்த இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவைதான்.

  இந்தியா, அதாவது பாரத தேசமானது இந்து மதம் — இந்து கலாசாரம் என்ற புனித நூலினால் கோக்கப்பட்டிருக்கும் நறுமணப் பூமாலை. அந்தப் புனித நூலையும் அதன் நறுமண மிக்க பூக்களையும் அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஜெபமாலையின் நைலான்கயிறையும் (கழுத்தை நெரிக்கும் அளவுக்கு வலிமையானது) உயிர்த் துடிப்பற்ற ரோசரி உருண்டைகளையும் கொண்டுவந்து கோக்க மீண்டும் பெரிய அளவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன் விளைவுதான் இந்த இரண்டு முழக்கங்கள்: தமிழர்கள் (இந்தியர்கள்) இந்துக்கள் அல்ல. தமிழகத்தை (மொழி வழித் தேசியங்களை) இந்தியா வஞ்சிக்கிறது.

  ஒருவகையில் இவை புதிய கோஷங்கள் அல்ல; இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகள், மொழியால் தமிழர்களாகவும் மதத்தால் இந்துக்களாகவும் இருந்துவரும் தமிழ் இந்துக்களிடமிருந்து இந்து அம்சத்தை அகற்றும் நோக்கில் இந்தப் பிரசாரத்தை நீண்ட காலமாகவே முன்னெடுத்துவந்திருக்கிறார்கள். நவீனம், அறிவியல் பார்வை, பகுத்தறிவு, எதிர்கால மனிதன், கடந்த கால உலகை அழித்தல் (சீர்திருத்துதல் அல்ல), முற்போக்கு என்ற பல போர்வைகளில் இந்த “இந்து நீக்கம்’ பிரிட்டிஷ் காலத்திலிருந்து தெளிவான, விரிவான திட்டமிடலுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

  இஸ்லாமைப் பொறுத்தவரையில் அப்படியான நிதானமான, “அறிவார்ந்த’ வழிமுறையில் அவர்களுக்கு என்றுமே நம்பிக்கை கிடையாது. வாளைக்கொண்டு வம்படியாக மாற்றுவது மட்டுமே அவர்களுக்குத் தெரியும்.

  இடதுசாரி சக்திகள் அறிவுப்புலத்தில் ஊடுருவி இந்து அம்சங்களை முழுமையாக நீக்கும் வகையில் மிகப் பெரிய அழிவு வேலைகளை மிக நுட்பமாக மிக ஆழமாகச் செய்துவருகிறார்கள். ஜாதி பற்றிய மிகைக் குற்றச்சாட்டுகள், இஸ்லாமிய மன்னர்களின் மத வெறியை முற்றாக மூடி மறைத்தல் என அவர்கள் எழுதிவைத்திருக்கும் வரலாற்றுப் புனைவுகள் பாரதிய வரலாற்று நதியை அடைத்துக்கொண்டு ஓடும் சாக்கடையாகப் பெருக்கெடுத்துவிட்டிருக்கின்றன.

  நாத்திகம் என்ற பெயரில் இந்து மத எதிர்ப்பை மட்டுமே மிகுதியாகப் பேசிய திராவிடக் கழக, திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு சக்திகள் இந்தக் கதையாடலில் பின்னாளில் உற்சாகமாகப் பங்கெடுத்துவந்திருக்கின்றன. திராவிட இயக்கங்களை மறுதலித்தபடி தீவிர தமிழ் தேசியம் பேசும் பிரிவினை சக்திகள் தற்போது புதிய வரவாக இந்தக் கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கின்றன (திராவிடக் கழகங்களை தமிழ் பிரிவினைவாதிகள் எதிர்ப்பது என்பது ஒருவகையான ஏமாற்றுவேலையே).

  அப்படியாக கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ, திராவிட, தமிழ்ப் பிரிவினைவாத சக்திகள் அனைத்தும் இந்து விரோதப் போக்கை உயிர் மூச்சாகக்கொண்டே இயங்குகின்றன. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்ற அவதூறு.

  தமிழர்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள் அல்ல என்றோ தமிழர்கள் ஆரியர்கள் அல்ல என்றோ தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்றோ சொல்வதைவிட தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்றே அல்லும் பகலும் அயராது முழங்கி வருவதால் கடைசி மூன்று சக்திகளும் முதல் இரண்டு சக்திகளின் கைப்பாவை என்பது எளிதில் புரியும்படியாகவே இருக்கிறது.

  தமிழர்களை கிறிஸ்தவர்களாகவும் இஸ்லாமியர்களாகவும் பங்கு போட்டுக்கொள்ளும் அந்த சர்வ தேசச் சதியில் தமிழர்களை இந்து மதத்தில் இருந்து பிய்த்தெடுப்பது மிகவும் அவசியம் (ஒரு சிறிய கிளைச் செய்தி : தமிழர்களை கிறிஸ்தவர்களாகவும் இஸ்லாமியர்களாகவும் பிரிப்பது முதல்கட்டச் செயல்பாடு மட்டுமே.

  இந்து மதத்தை அழித்த பிறகு இஸ்லாமியர்களை அழித்து இந்தியாவை கிறிஸ்தவ தேசமாக்குவதே இறுதி இலக்கு. இந்து மதத்தை அழிக்கும்வரை பரம விரோதியான இஸ்லாமியர்களை நேச சக்திகளாகப் பயன்படுத்துவது பிரிட்டிஷ் கால கட்டத்திலிருந்தே பின்பற்றப்பட்டுவரும் தற்காலிக ஏற்பாடு மட்டுமே). அந்த ஜிஹாதி, ரட்சணிய சேனைகளின் இலக்குகளைப் பூர்த்தி செய்யவே இப்போது விஷயங்கள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன.

  இலங்கையில் புலிகளின் மூலமாக ஒரு கிறிஸ்தவ கையெறி குண்டு தேசத்தை உருவாக்கும் முயற்சி தோற்றுவிட்டதாகச் சிலர் சொல்வதுண்டு (இலங்கையின் கோள வடிவம் மட்டுமல்ல யாழ்ப்பாணம் சேஃப்டி பின் இடத்தில் அமைந்திருப்பதும் எவ்வளவு பொருத்தமாக அபாய அதிசயமாக இருக்கிறது! இந்திய முத்துமாலையோடு இணைத்துப் பார்த்தால் மாலை நுனியில் கோர்த்த வைரம் போல் இருந்திருக்கும். அதுசரி… யார் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்களோ அவர்கள் விருப்பம் போல்தானே ஆகமுடியும்).

  தந்தை செல்வா அதாவது சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பள்ளை செல்வநா(ய)கம் மூலம் ஆரம்பிக்கப்பட்டு ஆண்டன் பாலசிங்கத்தால் முடுக்கிவிடப்பட்ட அந்த கிறிஸ்தவ சார்பு தேச உருவாக்கமானது அமெரிக்க – ஐரோப்பியத் தலைமைகளால் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், தாய்த் தமிழகத்தில் இருக்கும் தமிழர்களும் அந்தப் புனிதப் போரில் குருதி சிந்த வேண்டுமென்றால் சேய்த் தமிழகத்தில் ஈழம் மலராமல் இருப்பதுதான் நல்லது. மகளைக் கொல்வதன் மூலம் தாயின் கோபத்தைக் கிளர்த்தும் தந்திரம்.

  ஈழத்தை அழித்து அந்தக் கோபத்தை இந்தியா மீது திருப்பி இந்தியாவில் இருந்து தமிழகத்தையும் சேர்த்தே பிய்த்தெடுக்கும் பெரியதொரு சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே பிரபாகரன் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார். பாவம் அவர்… எந்தப் போரில் தான் முடி சூடா மன்னன் என்று இறுமாந்திருந்தாரோ அவர் ஒரு பகடைக்காயாக உருட்டப்பட்ட அற்பப் படைவீரன் மட்டுமே என்பது தெரிய வந்தபோது எப்படித் துடித்திருப்பாரோ.. அவருடைய மண்டை வெட்டிப் பிளக்கப்பட்டபோது ஏற்பட்ட வலியைவிட இது பெரிய வலியைத் தந்திருக்கும்.

  அப்படியாக முதல் அலையில் ஈழத்தை விழுங்கிய இந்த கிறிஸ்தவ சுனாமி இரண்டாம் கட்டமாக தமிழகத்தையும் இந்தியாவையும் விழுங்கக் கடலின் அடி ஆழ மண்ணையும் அள்ளிச் சுருட்டியபடி கரும் பூதமென உருக்கொண்டு வருகிறது. அதன் ஹூங்காரம்தான் தமிழர்கள் இந்துகள் அல்ல… தமிழகத்தை இந்தியா வஞ்சிக்கிறது என்ற முழக்கங்கள்.

  – பி.ஆர். மகாதேவன் (எழுத்தாளர் | பத்திரிகையாளர்)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,593FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-