ஸ்டெர்லைட்டை மூடுவது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது! : கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ கூறினார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்தால், முதல்வர் அதை பரிசீலனை செய்வார் என்றார் அவர்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது குறித்துக் கூறிய போது,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கி இருந்தாலும், உற்பத்திக்கு அனுமதி அளிக்கவில்லை.

தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் தலையிட முடியாது என பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் கேட்கப்பட்டது. ஆனால், அதில் சட்டச் சிக்கல் இருந்தது. இருப்பினும், இரவோடு இரவாக அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டதால், அங்கு அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்மூலம், அந்த வழக்குகள் யார் துணையோடு தொடரப்பட்டது என்பது வெளி உலகிற்கு வெட்ட வெளிச்சமாகத் தெரியவந்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடரப்பட்ட வழக்கு மூலம் திமுகவினரே அதில் சிக்கிக் கொண்டனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு மரபுப்படிதான் நடந்துகொண்டது. ஆனால், திமுகவினர் மரபை மீறி செயல்படு கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைத்தால், அதை முதல்வர் பரிசீலனை செய்து முடிவை அறிவிப்பார் என்றார் அவர்.