July 28, 2021, 1:31 pm
More

  ARTICLE - SECTIONS

  புஷ்கர பிரச்னை: ஆட்சியர் ஷில்பாவுக்கு சில யோசனைகள்!

  இப்படி எத்தனையோ வழிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, நெறிப்படுத்துவதுதான் நிர்வாகம் என்று பெயர். ஆபத்து இருக்கிறது என்பதற்காக ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாத் தனம் என்றே கருதப் படும்.

  maxresdefault 41 - 1

  நெல்லை: தாமிரபரணி மகாபுஷ்கரம் இப்போது சூடுபிடித்துள்ளது. சாதாரணமாக வரும் ஆன்மிக நிகழ்வு என்றால் பெரிதாக செய்திகளில் இடம்பெறாது. ஆனால், புஷ்கரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கம்யூனிஸ, கிறிஸ்துவ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையால் ஊடக வெளிச்சம் படர்ந்தது புஷ்கரத்துக்கு!

  அடுத்த பரபரப்பு கிளப்பி, மேலும் சூடுபிடித்துள்ளது புஷ்கரம். காரணமாக அமைந்தவர் கலெக்டர் பெயரில் சுற்றறிக்கை அனுப்பிய பரஞ்சோதி! நெல்லை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்!

  இதை அடுத்து விளக்கம் கொடுத்துள்ளனர் அறநிலையத்துறை அதிகாரிகள். ஆட்சியர் பெயர் சுற்றறிக்கையில் இடம் பெற்றதால், விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆட்சியரும் தள்ளப் பட்டுள்ளார். அவரது விளக்கத்தின் படி, நீர்ச் சுழல் இருக்கும், நெல்லை மாநகராட்சி எல்லையில் வரும் இரு படித்துறைகளான குறுக்குத்துறை, சிஎன் கிராமம் தைப்பூச மண்டபம் இரண்டு நீங்கலாக மற்ற படித்துறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

  அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு நாம் போதுமான கேள்விகளைக் கேட்டுவிட்டோம். ஆட்சியரின் தகவல் படி, சில கேள்விகள் நம் முன் நின்கின்றன.

  ஆட்சியர் விளக்கம் ஓரளவு நியாயமானது என்றாலும், எல்லா நியாயங்களும் எல்லா நேரங்களிலும் எல்லோராலும் ஏற்கக் கூடியதாய் இருந்துவிடுவதில்லை. காரணம், இது புதிதாக அமையவுள்ள, இதுவரை பழக்கப்படாத படித்துறைகள் அல்ல.

  ஆட்சியர் முழுவதுமாக இவற்றை பயன்படுத்துவதை தடை செய்வதை விட்டுவிட்டு, பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம்.

  இந்த இரு படித்துறைகளிலும் தினமும் உள்ளூர்வாசிகள் ஆயிரக்கணக்கில் நீராடி வருகின்றனர்.

  சொல்லப் போனால், பாபநாசம் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் பாபநாசம் கோயில் முன் இருக்கும் படித்துறைகளில்தான் அதிக வெள்ளப் பெருக்கு இருக்கும். ஆனால் அங்கே தடை எதுவும் விதிக்கப் படவில்லை.

  மேலும், ஜூன், ஜூலை மாதங்களில் பெரும் மழைப் பொழிவு இருந்தது. ஆகஸ்ட் மாதம் தணிந்து, செப்டம்பரில் மழை எதுவும் இல்லை. அக்டோபர் மாத மத்தியில், அதாவது புரட்டாசி பிறந்ததும் கன மழை இருக்கக் கூடும். இது இயல்பான மழை மாதங்கள் நம் நெல்லை மாவட்டத்தில்.

  நெல்லை மாவட்டத்தில், மலைப் பகுதியில் பெய்யும் அதிக மழையால்தான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் கரைபுரளுமே அன்றி, நெல்லை மாவட்ட உள் பகுதியில் பெய்யும் மழையால் தாமிரபரணியில் உச்ச பட்ச வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுவிடுவதில்லை! எனவே, வெள்ளம் வரும் போது, நீராட்டத்துக்கு தடை விதிக்கலாம்.

  பாபநாசத்தில் மழை பெய்து வெள்ளம் பெருகி அது நெல்லை வந்தடைய எப்படியும் 40 கி.மீ., தொலைவு உள்ளது. அங்கே வெள்ளப் பெருக்கு என்று தகவல் வந்த அடுத்த அரை மணிக்குள் கல்லிடைக்குறிச்சி தொடங்கி, நெல்லை வரையிலான அனைத்து படித்துறைகளிலுமே எச்சரிக்கை செய்யப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்த முடியும்.

  எனவே இந்த இரு படித்துறைகளிலும் எச்சரிக்கை செய்து பக்தர்களை இறங்க விடாமல் தடை செய்யலாம்.

  மேலும், ஒவ்வொரு படித்துறையிலும் தீயணைப்பு வீரர் + உயிர்காக்கும் ஜாக்கெட் சில வைத்திருக்கலாம். ஏதாவது அசம்பாவிதம் என்றால் உடனே யார் வேண்டுமானாலும் இறங்கி காப்பதற்கு வழி செய்யலாம்.

  தன்னார்வத் தொண்டர்கள் அதிகம் உள்ளார்கள். அவர்களை மாவட்ட நிர்வாகமே முறைப்படுத்தி, அவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து, போலீஸாருடன் களப் பணியில் ஈடுபட வைக்கலாம். அவர்கள் மூலம், இந்த இரு படித்துறைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க இயலும். குறிப்பிட்ட அளவு மக்களை மட்டுமே படித்துறைக்கு அனுப்பி, மற்றவர்களைத் தடுத்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக அனுப்ப இயலும்.

  ஆன்மிக சடங்குகளை இரு படித்துறைகளிலும் பலரும் அமர்ந்து செய்யாத வகையில் தவிர்க்க இயலும். சடங்குகளை வெளியே முடித்துவிட்டு, புனித நீராடுவதற்கு மட்டும் உள்ளே அனுமதிக்கலாம்.

  பாரக்கிங் – வாகன நிறுத்துமிடங்களை வெளியே வைத்துக் கொள்ளலாம். நடப்பதற்கு இயலுபவர்கள் நடந்து செல்கிறார்கள். அல்லது வாகன நெரிசல் இல்லாதவாறு அனுப்பிக் கொண்டே இருக்கலாம்.

  இப்படி எத்தனையோ வழிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, நெறிப்படுத்துவதுதான் நிர்வாகம் என்று பெயர். ஆபத்து இருக்கிறது என்பதற்காக ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாத் தனம் என்றே கருதப் படும்.

  மிக மிகச் சிறிய ஊர் மயிலாடுதுறை. அந்த மாயவரத்தில் புஷ்கரம் முதல்வரை வரவைத்து சிறப்பாகக் கொண்டாடினார்கள். கும்பகோணம், சிறிய ஊர். காவிரியில் இல்லாத நீர்ச் சுழல்கள் வேறில்லை. மணல், புதை மணல் ஆபத்து நிறைந்த ஆறு காவிரி. அங்கேயே சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

  நெல்லை பூமி, பாறைகள் நிறைந்தது. தாமிரபரணி பாயும் பகுதிகளில் பாறைகளும் கற்களும் அதிகம் வளர்ந்த மரம் செடிகளும் ஆற்றில் உள்ளன. இயல்பிலேயே வெள்ளத்தின் வேகத்தை தடுப்பவை. நீர்ச்சுழல் ஓரிரண்டு இடங்களில் இருக்கலாம் ஆனால் புதைமணல் இல்லை. எனவே ஆற்றின் இயல்பறிந்து நீராட உள்ளூர் தொண்டர்களை நியமித்து கண்காணிக்கவும் வழிகாட்டவும் வகை செய்யலாம்.

  நெல்லை மாவட்டம் அத்தகைய இயலாமை ஆட்சியர்களை இதுவரை கண்டதில்லை. அந்தப் பட்டியலில் தற்போதைய ஆட்சியரும் இடம்பெற்று, நெல்லை மாவட்டத்தின் மதிப்பு மரியாதையை, நற்பெயரை காத்துத் தருவார் என்ற நம்பிக்கை மாவட்ட மக்களுக்கு நிறையவே இருக்கிறது.

  1 COMMENT

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  26FollowersFollow
  74FollowersFollow
  1,322FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-