spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்கன மழையால் முறிந்து விழுந்த வைத்தீஸ்வரன் கோயில் தலமரம்! பக்தர்கள் அதிர்ச்சி!

கன மழையால் முறிந்து விழுந்த வைத்தீஸ்வரன் கோயில் தலமரம்! பக்தர்கள் அதிர்ச்சி!

- Advertisement -

வைத்தீஸ்வரன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான தலவிருட்சம் (தல மரம்) மழையினால் முறிந்து விழுந்தது! பக்தர்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ளது வைத்தீஸ்வரன்கோவில். புள்ளிருக்கு வேளூர் என்று புராணப் பெருமை பெற்ற இந்தக் கோவில், செவ்வாய் தோஷத்துக்கான பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. செவ்வாய் பூமிகாரகன் என்று போற்றப்படுவதால், நிலம் வீடு மனை தொடர்பானவற்றுக்காக இந்தக் கோயிலுக்கு அதிகம் பக்தர்கள் வருகின்றனர்.

இந்தக் கோயிலில் தலவிருட்சமாகத் திகழ்வது வேம்பு. இந்நிலையில் பலத்த மழை காரணமாக ஆலயத்தின் தலவிருட்சம் முறிந்து விழுந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழைமையான மரம் என்று கூறப் படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

வைத்தீஸ்வரன் கோவில் பற்றிய பிற சிறப்பு தகவல்கள்:

வைத்தீஸ்வரன் கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள புகழ்பெற்ற செவ்வாய் பரிகார ஸ்தலமாகும்

* இவ்வூரில் நாடி ஜோதிடம் மிகவும் புகழ்பெற்றது. இது மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாதலால் அவரவர் நம்பிக்கைகேற்ப இங்கு நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது.

* வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

* செவ்வாய் தோஷம் நீங்க இங்கு அங்காரகனை வழிபடுகின்றனர்

* வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது.

* இங்குள்ள வைத்தியநாதர் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.

* ஒன்பது கிரகங்களுள் ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாதசுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.

* இக்கோயிலில் வைத்தீஸ்வர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.

* இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்னனான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலட்சுமணன் இருவரும் இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.

* இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

* நோய்தீர்ப்பதில் வல்லவரான தன்வந்திரிக்கும் இங்கு தனிச்சன்னதி உள்ளது.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.

* மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவபெருமான் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது.

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 16 வது தேவாரத்தலம் ஆகும்.

* தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர்.

* உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர்.

* தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இவரை வேண்டி உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர்.

* செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் பயன்படுத்தப்படும் சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது.

* 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு திருச்சாந்து’ எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது.

* இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

* கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.

* வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் செல்வ முத்துக்குமாரர்’ என அழைக்கப்படுகிறார்.

* முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான்.

* தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும்.

* தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலதோஷம் நீங்கும்.

* செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார். மருத்துவத்துறையில் படிப்பவர்கள் இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe