spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்இலங்கையில் நடக்கும் கூத்துகள்; தன்னிலையை இழந்த மைத்ரி என்ற டான் குயிக்ஸாட்!

இலங்கையில் நடக்கும் கூத்துகள்; தன்னிலையை இழந்த மைத்ரி என்ற டான் குயிக்ஸாட்!

ranil wikramasenge maithrepala sirisena
வெள்ளிக்கிழமை இரவு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனே இலங்கை நாடாளுமன்றத்தை அதிகாரப்பூர்வமாக கலைத்துவிட்டு ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் என்று அறிவித்துள்ளார். இலங்கையில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்துள்ளது பலத்த கண்டனத்துக்குரியது.
மைத்ரிபால சிறிசேனே ராஜபக்சேவை பிரதமராக நியமித்தபின்பு கொழும்புவில் குதிரைபேரம் நடந்தது. எதிர்பார்த்த ஆதரவு ராஜபக்சேவுக்கு இல்லை. தீபாவளி நாளன்று ராஜபக்சே திடீர் அக்கறையோடு தமிழில் பேசி தமிழ் மக்களிடம் ஒரு போலியான அக்கறை காட்டி நாமெல்லாம் சேர்ந்து இலங்கையை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம் என்று பாசாங்கு மொழிகளை பேசினார். எந்தவொரு பாசாங்குகளும் ராஜபக்சேவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கவில்லை என்பதால் தான் வேறுவழியில்லாமல் ஆட்சிக் கலைப்பை மைத்ரிபால சிறிசேனே செய்துள்ளார்.
srilankan gazatte
இவ்வளவுக்கும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அவை நடக்கும் நேரத்தில் அவையை கலைக்கும் தார்மீக அதிகாரம் கூட மைத்ரிபால சிறிசேனேவுக்கு கிடைக்காது.
இதற்காக பல வேடங்களை அவர் போட்டார். தன்னைக் கொல்ல சதி என்றார். ரணில் விக்கிரமசிங்கேவை தேசவிரோதி என்றார். முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் ராஜபக்சேவோடு சேர்ந்து மைத்ரிபால சிறிசேனே தமிழர்களை கொன்றபின்பும் அவரை ஆதரித்ததற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அனுபவித்த ரணங்களை மறக்கமுடியுமா?
மைத்ரிபால சிறிசேனே தன்னிலையை இழந்து பைத்தியக்காரத்தனமாக, தான்தோன்றித்தனமாக ஜனநாயக நெறிமுறைகளை நாசப்படுத்தி வருகிறார். இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி யார் ஆட்சிக்கு வந்தாலும் அதை மீறுவது வாடிக்கையாகிவிட்டது. 1949இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது (சால்பரி அரசியலமைப்பு பிரிவு 29), 1956 தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சிங்களமே பிரதானம் என்று அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது, 1978லும் ஜெயவர்த்தனே காலத்தில் அதிபருக்கே எல்லா அதிகாரமும் என்று அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்றியது, 2015இல் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தம் வந்தபின்னும் ரணிலும் பிரதமராக இருக்கும்போதே, ராஜபக்சேவை பிரதமராக நியமித்து இரண்டு பிரதமர்கள் என்ற தமாசை நடத்தியவர் மைத்ரிபால சிறிசேனே. சீனாவைத் தவிர உலக நாடுகள் அனைத்தும் இத்தகைய செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்தது.
srilankan gazatte2
தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை ஆட்சிக்கு வரக்கூடாது என்று மைத்ரிபால சிறிசேனேக்கு வாக்களித்து அதிபராக்கிய தமிழர்களுக்கு நன்றி பாராட்டாமல் நயவஞ்சகமாக நடந்துகொண்டார்.
ஈழத்தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மைத்ரிபால சிறிசேனே சொன்னபடி நிறைவேற்றவில்லை. ஒன்றரை லட்சம் மக்களை கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் போரின் பின்பு, நல்லிணக்கம், வளர்ச்சி என்று கூறி பொறுப்புக்கு வந்த மைத்ரிபால சிறிசேனே தமிழர்களுக்கு சமஷ்டி அமைப்புக்கும், மாகாண கவுன்சிலுக்கும் உரிய அதிகாரங்களை வழங்காமல் தமிழர்களை பழிவாங்கினார். தமிழர்களுக்கு சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்த அவர்களுடைய விவசாய நிலங்களை முழுமையாக திருப்பித் தரவில்லை. போரின்போது காணாமல் போனவர்களையும் அரசு கண்டுபிடிக்க எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. முள்ளிவாய்க்கால் போரின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதாக அளித்த உறுதிமொழியைக் கூட காப்பாற்றவில்லை.
போர்காலத்தில் கணவர்களை இழந்த விதவைகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையாக நிறைவேற்றப்படவும் இல்லை. தன்னை பதவியில் அமர்த்திய ஈழத் தமிழர்களுக்கு விரோதமாகவும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஜபக்சேவுக்கே மகுடம் சூட்டுகிறார் என்றால் இந்த மைத்ரிபால சிறிசேனே குடிலனைவிட மோசமானவரல்லவா?
இப்படி கையாலாகாத, திறமையற்ற, நயவஞ்சகன் மைத்ரிபால சிறிசேனே ஒரு நாட்டின் அதிபராக எப்படி இருக்க முடியும். எப்படி ராஜபக்சே ராணுவத்தை நம்பியதை போல, மைத்ரிபால சிறிசேனேயும் ராணுவத்தை நம்ப ஆரம்பித்துவிட்டார். ராஜபக்சேவுக்கு கிடைத்த அதே தோல்விதான் மைத்ரிபால சிறிசேனேவுக்கும் இந்த தேர்தலில் கிடைக்கும். இதுவரை தமிழர்கள், சிங்களவர்கள் என்று தான் பிரச்சனை இருந்தது. இப்போது முதன்முறையாக சிங்களவர்களுக்கிடையே பகையும், போட்டியும் ஏற்பட்டுள்ளது. ஒருபக்கத்தில் ராஜபக்சே, மைத்ரிபால சிறிசேனே மற்றொருபுறம் ரணில் விக்கிரமசிங்கே என்ற முக்கோணத்தில் சிங்களவர்களுக்குள்ளே வன்மங்கள் நிச்சயமாக ஏற்படும். ராஜபக்சேவை மைத்ரிபால சிறிசேனே ஆதரித்தாலும், மறைமுகமாக மைத்ரிபால சிறிசேனேவுக்கு ராஜபக்சேவிடம் சில கோபங்களும் உண்டு. அதை மறுக்கமுடியாது. இன்னொரு பக்கம் தனியாக முன்னாள் அதிபர் சந்திரிகாவும் காய்களை நகர்த்தி வருகிறார்.
இலங்கை பிரச்சனை தானே என்று நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. தென்கிழக்கு ஆசியாவின் புவியரசியலும் உள்ளடங்கியுள்ளது. இந்துமகா சமுத்திரப் பிரச்சனை, சீனாவின் ஆதிக்கம், இந்தியாவின் பாதுகாப்பு போன்ற விடயங்களை மனதில் கொண்டு இலங்கையில் நடக்கும் இந்த நடவடிக்கைகளை இந்தியா கூர்ந்து கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதை மறுக்க முடியாது. ஈழத் தமிழர்களும் இனிமேல் ஏமாறாமல் சரியான உறுதிகளை பெற்று தேர்தல் காலத்தில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை விடுதலைப் பெற்ற பின் 1940களின் சேனநாயக காலத்திலிருந்து பல உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள் என்று தமிழர்களுக்கு வழங்கியும், எந்தவொரு ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்து, எந்த உறுதிமொழிகளும் நிறைவேற்றப் படவில்லை என்பது தான் வேதனையான செய்தி என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்
எனவே இது ஒரு முக்கியமான காலக்கட்டம் என்பதை உணர்ந்து இந்தியாவும் தனது கடமைகளை முறையாக ஆற்றவேண்டும்.
– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe