Home உள்ளூர் செய்திகள் கருவூலத்தை சூறையாடிய கஜா… புதுக்கோட்டையில் இதுவரை கண்டிராத சேதம்!

கருவூலத்தை சூறையாடிய கஜா… புதுக்கோட்டையில் இதுவரை கண்டிராத சேதம்!

தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல், பல்வேறு இடங்களில் மரங்களை வேரோடு சாய்த்தும், மின் கம்பங்களை சரித்தும் கோர தாண்டவம் ஆடியுள்ளது. கட்டடங்கள் பல சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக, கூரை வீடுகள்,ஓட்டு வீடுகள் சூறைக் காற்றில் பறந்துள்ளன.

புதுக்கோட்டை அரசுக் கருவூல அலுவலகத்தின் நிலை மிக பரிதாபமாக உள்ளது. மேற்கூரை கஜா புயல் சூறைக் காற்றின் வேகத்தில் பெயர்ந்து பறந்துள்ளன. ஓடுகள் பல காற்றின் வேகத்தில் தாங்காமல் உள்ளே விழுந்து நொறுங்கியுள்ளன. மழையும் வேறு பெய்ததால், கருவூலத்தினுள் வைக்கப்பட்டிருந்த கோப்புகள் பல சேதம் அடைந்துள்ளன.

புதுக்கோட்டை மச்சுவாடி தஞ்சை சாலை சர்ச் எதிரில் மின் கம்பங்கள் சாய்ந்தன. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பொதுப்பணித் துறை குடியிருப்பு பின்புறம் உள்ள புளியமரம் மாமரம் வேருடன் சாய்ந்தன. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

குன்றாண்டார் கோயில் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன், லேசான மழை பெய்தது. இதனால், மரக்கிளைகள் பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கஜாவின் கோர தாண்டவத்தால் இரவில் வீட்டிற்குள்ளேயே பொதுமக்கள் முடங்கி கிடந்தனர்.. சுழன்று வீசும் சூறாவளிக் காற்றால் தகர மேற்கூரைகள் பறந்தன.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான ஜெகதாப்பட்டினம் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. மேலும் அலகுகள் சூறைக்காற்றால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. மீனவர்கள் இதனால் பெருத்த சோகம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றால் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது.

புதுக்கோட்டை தஞ்சை சாலையில், கந்தர்வக்கோட்டையில் பலத்த சூறைக் காற்று வீசியது. இதனால் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வைத்த விளம்பரத் தட்டிகள் எல்லாம் நடு ரோட்டில் பறந்து விழுந்தன. இதனால் கார் பேருந்து ஒட்டுநர்கள் தடுமாற்றம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சூறைக் காற்று காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. அறாந்தாங்கி அக்னி பஜார் அருகில் (சத்திய மூர்த்தி பள்ளி )
மின் கம்பம் மரத்துடன் சரிந்து விழுந்து, சாலை துண்டிக்கப் பட்டது.

இதனிடையே, புதுக்கோட்டை புயல் பாதிப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து உதவி கோர 04322 222207 ☎ 1077 ? WhatsApp 9500589533 ஆகிய எண்களையும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பேச 04322 221658 எண்ணையும் அழைக்குமாறு தகவல் வெளியிடப் பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version