Home சற்றுமுன் கஜா புயல் கற்றுக் கொடுத்த கசக்கும் உண்மைகள்! அரசு திருந்துவது எப்போது?

கஜா புயல் கற்றுக் கொடுத்த கசக்கும் உண்மைகள்! அரசு திருந்துவது எப்போது?

bus gaja cyclone

கஜா புயல் அடிக்கும். ஆனால், இந்தப் புயலால் பெரிதும் பாதிக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்காத வகையில், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பேரிழப்பை சந்தித்துள்ளன. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதி மக்கள் கஜா புயலின் தாக்கத்தால் மிரண்டு போய் நிற்கின்றனர்.

கஜா புயல் நாகை, பாம்பன் இடையே கரையை கடக்கும் என முதல் கட்ட எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்தடுத்த நாட்களில் நாகை – வேதாரண்யம் இடையே புயல் கரையைக் கடக்கும் என தெரிவித்தது. அவர்கள் கூறியதைப் போல், 16ஆம் தேதி அதிகாலையில் கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.

அப்பகுதிகளில் 100 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வேதாரண்யத்தை கடந்த கஜா புயல் தஞ்சை மாவட்டத்தின் கடலோர ஊரான அதிராம்பட்டினத்தையும் சூறையாடியது. அங்கே வீசிய காற்றின் வேகம் 111 கிலோ மீட்டர். தமிழகத்திலேயே கஜா புயல் அதிவேகத்தில் வீசியது அதிராம்பட்டினத்தில்தானாம்.

தங்கள் ஊருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் இருந்த அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு இந்த எதிர்பாராத தாக்குதல் பேரிடிதான்! கூரை வீடுகள் தொடங்கி மாடி வீடுகள் வரை அனைத்தும் சேதம் அடைந்தன.  கடலோரப் பகுதி என்பதால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின.

தென்னை விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட இப்பகுதியில் லட்சக்கணக்கான ஏக்கர் தென்னை மரங்கள் மண்ணில் வீழ்ந்தன. 4 நாட்களாக மின்சாரம், தண்ணீர், உணவு ஏதும் இன்றி மக்கள் சிரமப் பட்டு வருகின்றனர். அரசு தரப்பில் இருந்து அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ, அதிகாரிகளோ இப்பகுதியை  வந்து பார்வையிட்டு ஆறுதல் சொல்லி, நிவாரணம் வழங்கவோ, தண்ணீர் உணவு முதலியன வழங்க ஏற்பாடு செய்யவோ இல்லை என்று கூறுகின்றனர்.

பட்டுக்கோட்டையிலும் இதே நிலைதான்.  விவசாய நிலங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், வணிகத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் என கஜா புயல் அனைத்தையும் சூறையாடியது.  தென்னை விவசாயத்திற்கு புகழ்பெற்ற பேராவூரணியும் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. மீட்புப்பணிகளில் மந்த நிலை. நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. இவை போன்ற குற்றச்சாட்டுகள் பரவலாக காதில் கேட்கின்றன.  பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட கடலோர கிராமங்களான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் போன்ற பகுதிகளில் இத்தகைய பாதிப்புகளுடன் மீனவர்களும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

புதுக்கோட்டை கஜா புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இது புதுக்கோட்டைக்கு புதிதுதான் என்று சொல்ல வேண்டும்.  ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம் போன்ற பகுதிகளில் கஜா புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் வீடுகள், விவசாய நிலங்கள் முழுவதுமாக சேதமடைந்தன.

கொத்தமங்கலத்தில் அதிகாரிகள் எவரும் பாதிப்புகளை பார்வையிட வராத நிலையில், அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள், போலீசாரின் வாகனங்களை மக்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே நிவாரண உதவிகளை வழங்கி வருவதாக  செய்தி பரவியதால், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

கஜா புயலுக்கு முன்னேற்பாடுகளுடன் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம் என்று அதிகாரிகளும் அரசு இயந்திரமும் தடபுடலாக இருந்த போதும், புயல் அடித்த பின்னர் செயல்படாத நிலையில் ஒதுங்கிவிட்டதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். புயல் குறித்த அறிவிப்புகளைக் கொடுத்து, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றோம் என்று சொன்னதுடன் அரசு நிர்வாகம் நின்று விட்டதோ என்ற ஐயம் மக்களுக்கு எழுந்துள்ளது.

தமிழகம் பல புயல்களைக் கண்டுள்ளது. இந்த முறை எங்கே புயல் வீசுமென்பது துல்லியமாகத் தெரியும். அங்கே மின் கம்பங்கள், தேவையான குடிநீர் கேன்கள், பால் பொருள்கள், உணவுப் பொருள்கள், போர்வைகள், டார்ச் லைட்கள், ஜெனரேட்டர்கள் இவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு அரசுக்கு எப்போதுதான் வருமோ என்று அங்கலாய்க்கிறார்கள் பொதுமக்கள்!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version