Home இந்தியா மெகா கூட்டணி ‘புஸ்’ ஆனது! நாயுடுவை ஏமாற்றிய எதிர்க் கட்சித் தலைவர்கள்! சூட்சுமம் என்ன?

மெகா கூட்டணி ‘புஸ்’ ஆனது! நாயுடுவை ஏமாற்றிய எதிர்க் கட்சித் தலைவர்கள்! சூட்சுமம் என்ன?

‘மெகா’ கூட்டணி ‘புஸ்’ ஆன கதை இது…!  நாயுடுகாருவை ஏமாற்றிய தலைவர்கள் பற்றித்தான் இப்போது பேச்சு! எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஏன் தள்ளிப் போட்டார் நாயுடு!

இந்திய அரசியலில் அமித்ஷா பேச்சை எதிர்க் கட்சிகள் உன்னிப்பாக கவனிப்பார்கள். காரணம் அவர் எது பேசினாலும் அதில், ஒரு ‘சூட்சுமம்’ இருக்கும். திரைப்படத்தில் ரஜினிகாந்தின் ‘பன்ச்’ டயலாக் எப்படி பிரபலமாகுமே அது போல் அமித்ஷாவின் இரண்டுவரி செய்தி அரசியலில் முக்கியத்துவம் பெறும்.

அப்படி என்ன அமித்ஷா பேசிவிட்டார் என கேட்கிறீர்களா. இரண்டு நாட்களுக்கு முன் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று தமிழர்களின் பொன் மொழியை கூறிய அமித்ஷா, நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்குப்பின் இந்திய அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி மாற்றம் வருவதோடு பா.ஜ., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்றார்.

மேலும், மத்தியபிரசேம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ. வெற்றி பெறும் என்று கூறிய அவர். மிசோரமில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றும் என்றார். ராஜஸ்தானில் பா.ஜ., இரண்டாவது முறையாக வெற்றி பெற்று அசத்தும் என உறுதிபட தெரிவித்தார்.

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எல்லா கட்சிகளும் தயாராகி வருகின்றன. கொள்கையில் எதிராக இருக்கக்கூடியவர்கள் கூட மோடியின் பயத்தில் சேர்ந்தே தேர்தலை சந்திக்க முடிவு செய்தனர். உதாரணமாக உ.பி.,யில் அகலேஷ் & மாயாவதி, கேரளாவில் காங்கிரஸ் & கம்யூனிஸ்ட், கோல்கட்டாவில் மம்தா & கம்யூனிஸ்ட், பீகாரில் பப்பு, லாலு, தற்போது காஷ்மீரில் காங்கிரஸ், பி.டி.பி., தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி சேர்ந்துள்ளன.

ஆந்திராவில் எந்தக் கட்சியை எதிர்த்து என்.டி.ராமாராவ் தெலுங்குதேச கட்சியை தொடங்கினாரோ அந்த காங்கிரஸ் கட்சியுடன் சந்திரபாபு நாயுடு வரும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இவர்களுக்கு எல்லாம் ஒருவர் மீதுதான் பயம். அவர்தான் பிரதமர் மோடி.
எங்கே இரண்டாவது முறையும் பிரதமராக மோடி வந்துவிட்டால் பிச்சைதான் எடுக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்னர்.

முதலில் எதிர்க்கட்சியினரை ஒரு அணியாக உருவாக்க அகிலேஷ் யாதவ், அவரைத் தொடர்ந்து மம்தா இருவரும் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், அது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதைத் தொடர்ந்து தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், இந்த முயற்சியில் இறங்கி ஓரளவு சாதித்த நிலையில், திடீரென அவரும் பின்வாங்கி தெலங்கானாவில் வரும் சட்டசபை தேர்தலில் தனியாக போட்டியிடுவதாக கூறி வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.

அடுத்ததாக இந்த முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு களம் இறங்கினார். இவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நேரடியாக சென்று அங்குள்ள பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க் கட்சித் தலைவர்களை சந்தித்து ‘மெகா’ கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஓவவொரு இடத்திலும் தான் சந்திக்கும் கட்சி தலைவரிடம் நீங்கள்தான் பிரதமர், துணை பிரதமர் என ஆசை காட்டி அவர்களது ஆதரவை பெற்றார். இதில் என்ன காமெடி என்றால் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து உங்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு மற்றும் தகுதி இருக்கிறது என்று சொன்னார்.

எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நாயுடுகாருவுக்கு வெற்றி என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பா.ஜ., அல்லாத எதிர்க் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நாயுடுகாரு நேற்று கூட்டினார். பத்திரிகையாளர்களும் ஆஹா… தங்களுக்கு தீனி கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தனர்.

ஆனால், நாயுடுகாரு கூட்டிய கூட்டத்தில் தலைவர்கள் யாரும் வர மறுத்துவிட்டனர். அனைத்து கட்சிகளும் தலைவருக்கு பதில் கட்சி நிர்வாகிகளை அனுப்புவதாக தெரிவித்தனர். இதில் என்ன கொடுமை என்றால் நம்ம ஸ்டாலின் கூட அப்படி ஒரு நபரை அனுப்ப முடிவு செய்திருந்தாராம்.

தலைவர்கள் வராததால் கோபமடைந்த நாயுடுகாரு தான் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டார். ரத்து என்ற வார்த்தையை சொல்லாமல் கூட்டத்தை ஒத்தி வைத்தாக அறிவித்தார்.

இங்கேதான் அரசியல் சூட்சுமம் இருக்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என மம்தா சொன்னார். காங்கிரஸ் கடசியைச் சேராத ஒருவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என  கம்யூனிஸ்ட்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் கடசியால் நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை. அதற்கு பா.ஜ.,வே மேல் என அகிலேஷ், மாயாவாதி இருவரும் ஒரே குரலில் தெரிவித்தனர். சரத்பவார், உமர் அப்துல்லா, லாலு கட்சி ஆகியவை மௌனமாக விட்டன. (இவற்றை நாயுடுகாருவிடம் சம்பந்தப்பட்டவர்கள் தொலைபேசியில் தெளிவாக தெரிவித்துவிட்டனர்)

திடீரென இவர்கள் காங்கிரசை (பப்புவை) கழற்றிவிடக் காரணம் என்ன? வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி., மேற்கு வங்கம், ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்திய பிரேதசம் போன்ற பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் சொற்ப இடங்களையே கைப்பற்றும். இதில், மாயாவதி, மம்தா இருவரும் தங்களுடன் காங்கிரசை கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டனர். அப்படி சேர்த்தால் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒன்று அல்லது இரண்டு சீட்கள்தான் கொடுக்க முடியும் என கூறிவிட்டனர்.

தமிழகத்தில் காங்கிரசுக்கு 5 இடம் மட்டுமே கொடுக்க முடியும் என ஸ்டாலின் தரப்பில் கறாராகச் சொல்லப்பட்டு விட்டதாம். இப்படிப்பட்ட நிலையில், காங்கிரசை நம்ப மற்ற கடசித் தலைவர்கள் தயாராக இல்லை. தவிர மோடிக்கு சமமாக பப்புவை எதிர்க் கட்சிகளே ஏற்க வில்லை.

அடுத்து பிரதமர் யார் என்ற போட்டியில் மம்தா, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகிய மூவர் உள்ளனர். இந்த முறை கோல்கட்டாவில் மம்தா தேறுவாரா என்பதே உறுதியாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு குறைந்த பட்சம் 20 இடங்களுக்கு மேல் பிடித்துவிட வேண்டும் என்று அமித்ஷா உறுதியாக உள்ளார். இதற்கான வேலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. அடுத்து ஆந்திராவில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்ததால் தெலுங்குதேச அமைச்சர்கள், தொண்டர்கள் நாயுடுகாரு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தவிர ஆந்திர சட்டசபை தேர்தலில் இந்த முறை ஜெகன்மோகன் ரெட்டி கட்சி அபார வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. எனவே மம்தா, நாயுடுகாரு இருவருக்கும் தங்களது சொந்த மாநிலத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். சபரிமலை விவகாரத்தில் தங்களிடம் இருந்த கடைசி மாநிலமான கேரளாவையும் கம்யூனிஸ்ட் பறிகொடுக்க உள்ளது. இவர்களில் கேஜ்ரிவாலை யாருமே கூட்டுக்குச் சேர்ப்பதாக தெரியவில்லை.

மாயாவதியைப் பொறுத்தவரை அகிலேஷை விட அதிக இடத்தைப் பிடிக்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால்கூட தன்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து வரும் பிரதமர் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். அதற்காக பிரதமர் கனவைத் துறக்கவும் தயாராக உள்ளார். இப்படி ஒவ்வொரு கோமாளிகளும் ‘கோமாளி’ கணக்கை போட்டதால்தான் காங்கிரசை கழற்றிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து நாயுடுகாரு கூட்டத்தைத் தவிர்த்து விட்டனர்.

அதுமட்டுமல்லாமல் தற்போது நடந்து வரும் ஐந்து மாநில தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும் பட்சத்தில் மக்களின் மனநிலை என்ன என்பதை தெரிவாக புரிந்து கொள்ள முடியும் என ‘கோமாளி’ தலைவர்கள் நம்புகின்றனர். அதோடு சரத்பவார், ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர் ராவ் போன்றோர் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ., பக்கம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் காணப்படுகிறது. ஒருவேளை ரஜினிகாந்த் வந்தால் திமுக கரை சேருவதே திண்டாட்டமாகிவிடும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ‘மெகா’ கூட்டணி மொக்கை கூட்டணியாக மாறியது. இதைத்தான் அமித்ஷா, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என சூசகமாக சொல்லி உள்ளார்.

– தமிழ்ச்செல்வி

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version