கஜா புயல் ஆய்வு .. மத்தியக் குழு தொடங்கியது..!

சென்னை : கஜா புயல் சேதங்களைப் பார்வையிட, தமிழகம் வந்துள்ள மத்திய குழு, இன்று தங்களது ஆய்வு பணிகளை தொடங்குகின்றனர்.

‘கஜா’ புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடவும், சேதங்களை மதிப்பிடவும் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி உள்ளது.

இந்தக் குழுவில், மத்திய உள்துறை இணை செயலர் டேனியல் ரிச்சர்டு, நிதித்துறை ஆலோசகர் கௌல், வேளாண்மைத் துறை இயக்குனர் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர். இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமையை சந்தித்த அவர்கள், பின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன் தலைமையில் நடக்கும், அனைத்து துறை செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் துறை வாரியாக ஏற்பட்டுள்ள சேதங்களை படங்களுடன் விளக்கினர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் இன்று மதியம், இக்குழுவினர் திருச்சி புறப்பட்டு செல்கின்றனர். அவர்களுடன் தமிழக அரசு அதிகாரிகள் செல்கின்றனர்.

அங்கிருந்து இரண்டு குழுவாகப் பிரிந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் செல்கின்றனர். அங்கே புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.

நாளை மற்றும் நாளை மறுநாளும் புயல் சேதங்களை பார்வையிட்ட பின் 27ஆம் தேதி சென்னை திரும்புகின்றனர். மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் தில்லி செல்கின்றனர்.