spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமனதின் குரல் 50வது பகுதியில்... வானொலியை தேர்வு செய்த ரகசியத்தைச் சொன்ன மோடி!

மனதின் குரல் 50வது பகுதியில்… வானொலியை தேர்வு செய்த ரகசியத்தைச் சொன்ன மோடி!

- Advertisement -

மனதின் குரல் – 50 ஆவது பகுதி – ஒலிபரப்பு நாள் : 25.11.2018

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, விஜயதசமி  திருநாளன்று, மனதின் குரல் வாயிலாக நாமனைவரும் ஒன்றாக ஒரு யாத்திரையை மேற்கொண்டோம்.  மனதின் குரல் என்ற இந்த யாத்திரையின் 50ஆவது பகுதி இன்றோடு நிறைவடைகிறது.  அந்த வகையில் இன்று பொன் விழா பகுதி.

இந்த முறை உங்களிடமிருந்து வந்திருக்கும் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் பெரும்பாலானவை, இந்த 50ஆவது பகுதி தொடர்பாகவே வந்திருக்கின்றன.  MyGovஇல், தில்லியைச் சேர்ந்த அன்சு குமார், அமர் குமார், பட்னாவைச் சேர்ந்த விகாஸ் யாதவ், NarendraModiAppஇல் தில்லியைச் சேர்ந்த மோனிகா ஜெயின், மேற்கு வங்கத்தின் பர்த்வானைச் சேர்ந்த ப்ரசேன்ஜித் சர்கார், நாகபுரியைச் சேர்ந்த சங்கீதா சாஸ்த்ரி ஆகியோர் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே வகையான வினாவையே எழுப்பி இருக்கிறார்கள்.

அவர்கள் என்ன கூறுகிறார்கள்… பெரும்பாலும் மக்கள் நவீன தொழில்நுட்பம், சமூக வலைத்தளம், மொபைல் செயலிகளுடனேயே உங்களை இணைத்துப் பார்க்கிறார்கள், ஆனால் மக்களோடு தொடர்பு கொள்ளவும் ஊடாடவும் நீங்கள் ஏன் வானொலியைத் தேர்ந்தெடுத்தீர்கள், என்று கேட்டிருக்கிறார்கள்.

நீங்கள் எழுப்பி இருக்கும் வினா நியாயமானது தான்; இன்றைய காலகட்டத்தில், கிட்டத்தட்ட வானொலி மறக்கடிக்கப்பட்ட நிலையில், ஏன் மோடி வானொலி வாயிலாகத் தொடர்பு கொள்கிறார்?

நான் உங்களுக்கு ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூற விரும்புகிறேன்.  இது நடந்தது 1998ஆம் ஆண்டு வாக்கிலே.  நான் பாரதீய ஜனதா கட்சியின் அமைப்புப் பணிகளை ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேற்கொண்டிருந்தேன்.  மே மாதம், மாலை நேரம், வேறோர் இடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன்.  ஹிமாச்சலின் மலைப் பகுதிகளில் மாலை வேளைகளில் குளிர்ந்து விடும்.  நான் பாதையில் ஒரு தேநீர்க் கடையோரமாக தேநீர் அருந்த தாமதித்தேன்.  அது மிகச் சிறிய கடையாக இருந்தது, ஒரே ஒருவர் மட்டுமே தேநீர் போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்.  மேலுக்கு ஆடை கூட அணிந்திருக்கவில்லை, சாலையோரமாக ஒரு சின்ன வண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்.

அவரிடம் ஒரு கண்ணாடிப் பாத்திரம் இருந்தது, அதிலிருந்து லட்டு ஒன்றை எடுத்துக் கொண்டே, ஐயா, தேநீர் எல்லாம் பிறகு தான், முதலில் லட்டு சாப்பிடுங்கள் என்றார்.  நான் ஆச்சரியப்பட்டு, ஏன், என்ன விஷயம், வீட்டில் யாருக்காவது திருமண ஏற்பாடாகியிருக்கிறதா என்று கேட்டேன்.

இல்லை இல்லை அண்ணே, உங்களுக்குத் தெரியாதா?  ரொம்ப சந்தோஷமான விஷயம் என்று கூறி அவர் உற்சாகத்தில் திளைத்தார்.  அவரிடம் ஏகப்பட்ட சந்தோஷமும் மகிழ்ச்சியும் கொப்பளித்தன, என்ன என்று தான் கூறுங்களேன் என்றேன் நான்.

அட, இன்னைக்கு இந்தியா குண்டு பரிசோதனையை வெற்றிகரமா செஞ்சிருக்கு, என்றார்.  ஒண்ணும் புரியலையே என்றேன் நான்.  இந்தா பாருங்கண்ணே, முதல்ல வானொலியை கேளுங்க என்றார்.

அப்போது வானொலியில் அது பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அன்று தான் அணுகுண்டு பரிசோதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில், நாட்டின் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் ஊடகங்களுக்கு அறிவிப்பு செய்தார், இந்த அறிவிப்பைத் தான் இவர் வானொலியில் கேட்டு விட்டு உற்சாகத் துள்ளலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  இந்த வனப் பகுதியில், இத்தனை ஆளரவமற்ற பகுதியில், பனி படர்ந்த மலைகளுக்கு இடையே, ஒரு சாமான்ய மனிதன், தேநீரை ஒரு வண்டியில் வைத்துக் கொண்டு தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறான். நாள் முழுவதும் வானொலியைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். அந்த வானொலி அளிக்கும் செய்தி அவன் மனதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை எல்லாம் பார்த்த போது, ஒரு விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது…….

அதாவது வானொலி சாமான்ய மனிதனோடு கலந்திருக்கிறது, வானொலிக்கு மிகப்பெரிய பலம், சக்தி இருக்கிறது என்பது என் மனதில் ஊன்றியது.  தகவல் பரிமாற்றத்தின் அடைதலும், அதன் ஆழமும் எனும் போது வானொலிக்கு ஈடு வானொலி தான் என்பது என் மனதில் நீக்கமற நிறைந்தது. அதன் வீச்சை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  ஆகையால் நான் பிரதமரான வேளையில் மிகச் சக்தி வாய்ந்த ஊடகமான வானொலியின் பால் என் கவனம் திரும்பியதில் ஆச்சரியமேதும் இல்லை.

நான் 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு பிரதம சேவகன் என்ற வகையில் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட வேளையில், தேசத்தின் ஒற்றுமை, நமது மகோன்னதம் நிறைந்த வரலாறு, அதன் வீரம், இந்தியாவின் பன்முகத்தன்மை, நமது கலாச்சாரப் பன்முகத்தன்மை, நமது சமூகத்தின் நாடி நரம்புகளில் பரவியிருக்கும் நல்ல விஷயங்கள், மக்களின் முனைப்புகள், ஆதர்ஸங்கள், தியாகங்கள், தவங்கள் என அனைத்து விஷயங்களையும், பாரதத்தின் இந்தக் கதையை, ஒவ்வொரு குடிமகனிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.  தேசத்தின் தொலைவான கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை, விவசாயிகள் தொடங்கி இளைய தொழில் வல்லுநர்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற பேரவா தான் மனதின் குரல் பயணத்திற்கு உத்வேகம் அளித்தது.

ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் கடிதங்கள் படிக்கப்பட்டன, தொலைபேசி அழைப்புகள் கேட்கப்பட்டன, செயலி மற்றும் MyGovஇல் விமர்சனங்கள் பார்க்கப்பட்டன; இவையனைத்தையும் ஒரே இழையில் இணைத்து, சுவாரசியமான வகையிலே அளிக்கப்பட்டு வந்த இந்த 50 பகுதிகளின் பயணம், இந்த யாத்திரையை நாமனைவருமாக இணைந்து செய்திருக்கிறோம்.

தற்போது ஆல் இண்டியா ரேடியோ மனதின் குரல் மீதான ஆய்வையும் மேற்கொண்டார்கள்.  அதில் கிடைத்த சில பின்னூட்டங்கள் உள்ளபடியே மிக சுவாரசியமாக இருக்கின்றன.  யாரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அவர்களில் 70 சதவீதம் பேர் தொடர்ந்து மனதின் குரலைக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.  சமூகத்தில் ஆக்கப்பூர்வமான உணர்வை ஏற்படுத்தி இருப்பதை மனதின் குரலின் மிகப்பெரிய பங்களிப்பாக பெருவாரியானவர்கள் கருதுகிறார்கள்.

மனதின் குரல் வாயிலாக பெரிய அளவில் மக்கள் இயக்கங்களுக்கு ஊக்கம் கிடைத்திருக்கிறது.  #indiapositive தொடர்பாக பரவலாக விவாதிக்கப்பட்டும் இருக்கிறது.  இவையெல்லாம் நமது நாட்டுமக்களின் மனதில் இருக்கும் ஆக்கப்பூர்வமான உணர்வை, நேர்மறை உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மனதின் குரல் காரணமாக தன்னார்வ உணர்வு அதிகரித்திருக்கிறது என்று மக்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  சமூக சேவையில் ஈடுபட மக்கள் ஆர்வத்தோடு முன்வரும் தன்மை என்ற அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  மனதின் குரல் காரணமாக மக்கள் விரும்பும் ஊடகமாக வானொலி ஆகி இருப்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.

ஆனால் மக்கள் இந்த நிகழ்ச்சியோடு வானொலி வாயிலாக மட்டுமே இணையவில்லை.  தொலைக்காட்சி, எஃப் எம் வானொலி, மொபைல், இணையம், முகநூல் நேரடி ஒலிபரப்பு, பெரிஸ்கோப் தவிர NarendraModi செயலி வாயிலாகவும் மனதின் குரலோடு மக்கள் தங்கள் பங்களிப்பை உறுதி செய்து வருகிறார்கள்.  மனதின் குரல் மீது நம்பிக்கை வைத்து, இதன் அங்கமாக மாறியதற்கு நான் மனதின் குரல் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(தொலைபேசி அழைப்பு – 1)

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, வணக்கம்.  என் பெயர் ஷாலினி, நான் ஹைதராபாதிலிருந்து பேசுகிறேன்.  மனதின் குரல் என்பது மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி.  தொடக்கத்தில், இதுவுமே கூட அரசியல் மேடையாகி விடும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.  ஆனால் இந்த நிகழ்ச்சி மேலும் மேலும் தொடர்ந்த போது, இதில் அரசியலுக்கு பதிலாக, சமூகப் பிரச்சனைகள், சவால்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே அமைந்தது, அந்த வகையில் என்னைப் போன்ற கோடிக்கணக்கான சாமான்ய மக்கள் இதோடு இணைந்த வண்ணம் இருந்தார்கள்.  மெல்ல மெல்ல விமர்சனங்களும் தேயத் தொடங்கின.  என்னுடைய கேள்வி என்னவென்றால், நீங்கள் இந்த நிகழ்ச்சியை எப்படி அரசியலிலிருந்து விலக்கி வைப்பதில் வெற்றி கண்டீர்கள்?  இதை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா அல்லது உங்கள் அரசின் சாதனைகளைப் பட்டியலிட வேண்டும் என்று நீங்கள் எண்ணவில்லையா?  நன்றி.

      உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி.  உங்களின் ஐயம் சரிதான்.  உள்ளபடியே ஒரு தலைவருக்கு மைக் கிடைத்து விட்டால், கோடிக்கணக்கானவர்கள் கேட்கிறார்கள் என்றால், வேறு என்ன வேண்டும்?  சில இளைஞர்களும் கூட மனதின் குரலில் வந்த அனைத்து விஷயங்கள் பற்றியும் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.  அவர்கள் அனைத்துப் பகுதிகள் தொடர்பான சொல் பகுப்பாய்வு மேற்கொண்டு, எந்தெந்தச் சொல் எத்தனை முறைகள் பயன்படுத்தப்பட்டன என்று ஆராய்ச்சி செய்தார்கள்.  எந்தச் சொல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆய்வு செய்தார்கள்.  அவர்களின் ஆய்வின் முடிவில் இந்த நிகழ்ச்சி அரசியல் சார்பு இல்லாத ஒன்று என்பதும் ஒரு முடிவாக இருந்தது.

மனதின் குரலைத் தொடங்கிய போது, இதில் அரசியல் என்பதோ, அரசுக்கு முதுகில் தட்டிக் கொடுப்பதோ இருக்க கூடாது, இதில் எங்கேயும் மோடி தென்படக் கூடாது என்று தீர்மானித்திருந்தேன்.  எனது இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான அனைத்து பலங்களும், உத்வேகமும் உங்களிடமிருந்து தான் எனக்குக் கிடைத்தன.  ஒவ்வொரு மனதின் குரலுக்கு முன்பாகவும் வரும் கடிதங்கள், இணைய விமர்சனங்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றில் நேயர்களின் எதிர்பார்ப்புகள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன.

மோடி வருவார், போவார், ஆனால் இந்த தேசம் என்றைக்கும் நிலைத்து நீடித்திருக்கும், நமது கலாச்சாரம் காலத்தால் அழியாதிருக்கும்.  130 கோடி நாட்டுமக்களின் சின்னச்சின்ன கதைகள் என்றும் மறையாதிருக்கும்.  புதிய கருத்தூக்கம், உற்சாகத்தின் புதிய சிகரங்களுக்கு இந்த நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கும்.  நானே கூட சற்றே திரும்பிப் பார்க்கையில், எனக்கும் கூட பெரிய ஆச்சரியம் ஏற்படுகிறது.  யாரோ ஒருவர் தேசத்தின் ஏதோ மூலையிலிருந்து கடிதம் வாயிலாக, சிறிய கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், காய்கறி விற்பனையாளர்களிடம் எல்லாம் நாம் அதிகம் பேரம் பேசக் கூடாது என்று எழுதுகிறார்.

நான் கடிதத்தை வாசிக்கிறேன், இதே உணர்வு வேறு ஒரு கடிதத்தில் வெளிப் பட்டிருந்தால், அதையும் இதோடு இணைத்துக் கொள்கிறேன்.  இதோடு எனது அனுபவத்தையும் சேர்த்து அளிக்கிறேன், உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எப்போது இது குடும்பங்களுக்கும் வீடுகளுக்கும் சென்று சேர்கிறதோ தெரியாது, ஆனால் சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸப்பிலும் சுற்றிச் சுற்றி வருகிறது, ஒரு மாற்றத்தை நோக்கி முன்னேறிச் செல்கிறது.

நீங்கள் அனுப்பிய தூய்மை பற்றிய விஷயங்களும் சம்பவங்களும், சாமான்ய மக்களின் ஏராளமான எடுத்துக்காட்டுக்களும், ஒவ்வொரு வீட்டிலும் தூய்மைக்கான ஒரு சின்ன தூதுவரை ஏற்படுத்துகிறது. அந்தத் தூதர் வீட்டில் இருப்பவர்களுக்கு விழிப்பையும் ஏற்படுத்துகிறார், சில வேளைகளில் தொலைபேசி வாயிலாக பிரதமருக்கும் ஆணைகள் பிறப்பிக்கிறார்.

மகளோடு செல்ஃபி என்ற இயக்கம் ஹரியாணாவின் ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கி நாடு முழுவதிலும், ஏன் அயல்நாடுகளிலும் கூடப் பரவியது, இத்தனை பரவலாக்கம் செய்யும், விழிப்பை ஏற்படுத்தும் வல்லமை எந்த அரசிடமும் இருக்க முடியாது.  சமூகத்தின் ஒவ்வொரு துறையும், பிரபலங்களும் இணையும் போது, சமூகத்தில் சிந்தனா மாற்றத்தின் ஒரு புதிய பரிபாஷையில் கூறப்படும் போது, இதை இன்றைய தலைமுறை புரிந்து கொள்கிறது, கண்ணுக்குத் தெரியாத விழிப்புணர்வு ஏற்படுகிறது.

சில வேளைகளில் மனதின் குரல் பரிகாசம் செய்யவும் படுகிறது. ஆனால், என்றுமே எனது மனதில் 130 கோடி நாட்டு மக்கள் வசித்து வருகிறார்கள்.  அவர்கள் மனங்கள் அனைத்தும் என்னுடைய மனமே. மனதின் குரல் என்பது அரசு சார்ந்த விஷயமல்ல. இது சமூகம் சார்ந்த விஷயம். மனதின் குரல் எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்தியா, பெரு இலட்சியங்கள் நிறைந்த பாரதம் பற்றியது. பாரதத்தின் அந்தராத்மா அரசியல் அல்ல.  பாரதத்தின் அந்தராத்மா அரசின் சக்தி பற்றியதும் அல்ல.  பாரதத்தின் அந்தராத்மா சமூகநீதி பற்றியது, சமூக சக்தி பற்றியது.

சமூக வாழ்க்கையின் ஆயிரக்கணக்கான கோணங்கள் உண்டு, அவற்றில் ஒன்று தான் அரசியல்.  அரசியலே அனைத்துமாகி விட்டால், இது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஒரு நல்ல அமைப்புமுறை அல்ல.  சில வேளைகளில் அரசியல் சம்பவங்களும் அரசியல்வாதிகளும் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால், சமூகத்தின் வேறுபல திறன்களும், வேறுபல முயற்சிகளும் நசுங்கிப் போகின்றன.  பாரதம் போன்ற தேசத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு சாமான்ய மக்களின் திறன்கள் திறமைகள் முயற்சிகள் ஆகியவற்றிற்கு உகந்த இடமளிக்கப்பட வேண்டும், இதுவே நம்மனைவரின் சமூக பொறுப்பாக வேண்டும்.  மனதின் குரல் என்பது இந்த திசையை நோக்கிய ஒரு எளிமையான, பணிவான முயற்சி தான்.

(தொலைபேசி அழைப்பு – 2)

வணக்கம் பிரதமர் அவர்களே! மும்பையிலிருந்து நான் ப்ரோதிமா முகர்ஜி பேசுகிறேன்.  ஐயா, மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியிலும் ஆழமான அகநோக்கு, தகவல், நேர்மறையான நிகழ்வுகள், சாமான்ய மனிதனின் நல்ல செயல்பாடுகள் நிறைந்திருக்கின்றன.  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பாகவும் நீங்கள் எந்த அளவுக்கு தயாரிப்புகளில் ஈடுபடுகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்.

      உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு மிக்க நன்றிகள்.  ஒரு வகையில் உங்கள் கேள்வி இணக்கம் காரணமாக கேட்கப்பட்டிருக்கிறது.  பிரதமரிடம் அல்ல, ஏதோ ஒரு இணக்கமான நண்பரிடம் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் என்ற உணர்வைத் தான் மனதின் குரலின் 50 பகுதிகளின் மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.  இது தானே மக்களாட்சி.  நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக நான் பதில் கூற வேண்டுமென்றால், எந்த தயாரிப்பு முன்னேற்பாடுகளிலும் நான் ஈடுபடுவதில்லை என்பது தான்.

உண்மையில், மனதின் குரல் என்பது எனக்கு மிக எளிதான வேலை. ஒவ்வொரு மனதின் குரலுக்கு முன்பாகவும், மக்களின் கடிதங்கள் வருகின்றன.  MyGovஇலும் NarendraModi Mobile செயலியிலும் மக்கள் தங்கள் கருத்துக்களை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், 1800117800 என்ற கட்டணமில்லா எண்ணும் இருக்கிறது, இதில் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் செய்திகளைத் தங்கள் குரலிலேயே பதிவும் செய்கிறார்கள்.

மனதின் குரலுக்கு முன்பாக அதிக அளவில் கடிதங்களையும், கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்வதே என் முயற்சியாக இருக்கிறது. மனதின் குரல் பகுதி நெருங்கி வரவர, பயணங்களுக்கு இடையே, நீங்கள் அனுப்பிய கருத்துக்களையும் உள்ளீடுகளையும் மிக உன்னிப்பாக நான் படிக்கிறேன்.

ஒவ்வொரு கணமும் எனது நாட்டு மக்கள், என் மனதிலே வாசம் செய்கிறார்கள் ஆகையால், எப்போது எந்தக் கடிதத்தைப் படித்தாலும், கடிதம் எழுதியவரின் சூழ்நிலை, அவரது மனோபாவம் ஆகியன எனது கருத்தில் பசுமரத்தாணி போலப் பதிந்து விடுகின்றன.  அந்தக் கடிதம் என்னைப் பொறுத்த மட்டில் வெறும் ஒரு காகிதத் துண்டு அல்ல; உண்மையில் சுமார் 40-45 ஆண்டுகளாகவே நான் ஒரு துறவியின் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.

தேசத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன், தேசத்தின் தொலைவான மாவட்டங்களில் கணிசமான காலத்தைக் கழித்துமிருக்கிறேன். மேலும் இதன் காரணமாக ஒரு கடிதம் வரும் போது, அந்த இடம், சூழல் ஆகியவற்றோடு இயல்பான வகையிலே என்னால் என்னைத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது.  இதன் பிறகு நான் சில ஆதாரபூர்வமான விஷயங்களான கிராமம், நபரின் பெயர் போன்ற விஷயங்களைக் குறித்து வைத்துக் கொள்கிறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மனதின் குரலில், குரல் தான் என்னுடையது, ஆனால் எடுத்துக்காட்டுகள், உணர்ச்சிகள், உணர்வு ஆகியன எல்லாம் என்னுடைய நாட்டு மக்களுடையவை தாம்.  நான் மனதின் குரலில் பங்களிப்பு நல்கிய ஒவ்வொரு நபருக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.  இப்படிப்பட்ட இலட்சக்கணக்கான பேர்களின் பெயர்களை இன்றுவரை என்னால் மனதின் குரலில் கூற முடியவில்லை ஆனால், இதனாலெல்லாம் ஏமாற்றமடையாமல், தங்கள் கடிதங்களை, தங்கள் கருத்துக்களை அனுப்பி வருகிறார்கள்.

உங்களின் கருத்துக்கள், உங்களின் உணர்வுகள் என்னுடைய வாழ்விலே மிகுந்த மகத்துவம் நிறைந்தவையாக இருக்கின்றன.  உங்கள் அனைவரின் கருத்துக்கள் முன்பை விட அதிகமாக என்னை வந்து சேரும், மனதின் குரலை மேலும் சுவாரசியமாக, மேலும் தாக்கமேற்படுத்துவதாக, மேலும் பயனுள்ளதாக ஆக்க உங்கள் கருத்துக்களின் பங்களிப்பு இருக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

எந்தக் கடிதங்கள் எல்லாம் மனதின் குரலில் இடம் பெறவில்லையோ, அந்தக் கடிதங்கள், கருத்துக்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை கவனிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நான் ஆல் இண்டியா ரேடியோ, எஃப் எம் வானொலி, தூர்தர்ஷன், மற்ற தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்களில் உள்ள எனது நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  அவர்களின் முயற்சிகளால் மனதின் குரல் இன்னும் அதிகமான மக்களிடம் சென்று சேர்கிறது.

ஆல் இண்டியா ரேடியோவின் குழு, மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியையும் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்து ஒலிபரப்புகிறார்கள்.  சிலர் மிகச் சிறப்பாக மாநில மொழிகளில், மோதிக்கு இணையாக இருக்கும் குரலில், அதே தொனியில் மனதின் குரலை அளிக்கிறார்கள்.  அந்த வகையில் அவர்கள் 30 நிமிடங்களுக்கு நரேந்திர மோதியாகவே உருமாறி விடுகிறார்கள்.  நான் அவர்கள் அனைவரின் திறன்கள், திறமைகளுக்குப் பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

உங்களனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியை உங்கள் மாநில மொழிகளிலும் நீங்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்பது தான்.  நான் ஊடகத்துறையில் இருக்கும் நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்; அவர்கள் தங்கள் சேனல்களில் மனதின் குரலைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்திருக்கிறார்கள்.

எந்த ஒரு அரசியல்வாதிக்கும் ஊடகங்களிடம் எப்போதும் மகிழ்ச்சி இருக்காது, மிக குறைவான கவரேஜ் தான் கிடைக்கிறது. அதுவும் எதிர்மறையாக இருக்கிறது என்றெல்லாம் கருதுவார்கள். ஆனால் மனதின் குரலில் எழுப்பப்பட்ட பல விஷயங்களை ஊடகத்தார் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.

தூய்மை, சாலைப் பாதுகாப்பு, போதைப்பொருள் இல்லாத இந்தியா, மகளுடன் ஒரு செல்ஃபி போன்ற பல விஷயங்களை ஊடகத்தார் நூதனமான வழிவகைகளில் கையாண்டு, ஒரு இயக்கம் என்ற வகையில் அதை மாற்றி முன்னெடுத்துச் செல்லும் பணியைச் செய்திருக்கிறார்கள்.  தொலைக்காட்சி சேனல்கள் இதை அதிகம் கவனிக்கப்பட்ட வானொலி நிகழ்ச்சியாக ஆக்கினார்கள்.  நான் ஊடகங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்கள் ஒத்துழைப்பு இல்லாதிருந்தால், மனதின் குரலின் இந்தப் பயணம் நிறைவடையாமல் இருந்திருக்கும்.

(தொலைபேசி அழைப்பு – 3)

வணக்கம் மோதிஜி!  நான் உத்தராக்கண்டின் மசூரியிலிருந்து நிதி பஹுகுணா பேசுகிறேன்.  நான் இரண்டு இளைஞர்களின் தாய்.  அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்படுவதை இந்த வயதுடைய பிள்ளைகள் விரும்புவதில்லை என்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.  அது அவர்கள் ஆசிரியர்களாகட்டும், பெற்றோர்களாகட்டும்.  ஆனால் நீங்கள் மனதின் குரலில் ஒரு விஷயத்தை பிள்ளைகளிடம் கூறும் போது, அதை அவர்கள் இதயபூர்வமாகப் புரிந்து கொள்கிறார்கள், அதை நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள்.  உங்களது இந்த இரகசியத்தைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?  அதாவது எந்த வகையில் நீங்கள் பேசுகிறீர்கள் அல்லது விஷயத்தை எழுப்புகிறீர்கள், எப்படி அவர்கள் நல்ல முறையில் இதைப் புரிந்து கொண்டு அமல் செய்கிறார்கள் என்பதைக் கூறுங்கள்.  நன்றி.

      நிதி அவர்களே, உங்களது தொலைபேசி அழைப்புக்கு மிக்க நன்றிகள்.  உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் எந்த இரகசியமும் இல்லை.  நான் செய்து வருவது அநேகமாக எல்லா குடும்பங்களிலும் நடந்து கொண்டு தானிருக்கும் என்று கருதுகிறேன்.  எளிமையான மொழியில் சொல்ல வேண்டுமென்றால், நான் என்னை அந்த இளைஞருக்கு உள்ளே இருத்திப் பார்க்க முயற்சி செய்கிறேன்.  என்னையே நான் அவரது சூழ்நிலையில் பொருத்திப் பார்த்து, அவரது எண்ணங்களோடு இணைவு ஏற்படுத்தி, ஒரு அலைவரிசை இணைப்பை ஏற்படுத்த முயல்கிறேன்.

நம்முடைய வாழ்க்கையிலே இருக்கும் பழமையான சுமைகள் குறுக்கீடு செய்யாத வரையில், யாரையும் புரிந்து கொள்வது எளிதாகி விடுகிறது. சில வேளைகளில் நமது சார்புநிலைகளே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

ஏற்பு-மறுப்பு, எதிர்வினைகள் ஏதும் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்வதே எனக்கு முதன்மையாக இருக்கிறது.  இப்படி அணுகும் போது எதிரில் இருப்பவரும் நம்மை சம்மதிக்க வைக்க பலவகையான வாதங்கள் அல்லது அழுத்தம் உண்டாக்குவதற்கு மாறாக, நமது எண்ண ஓட்டத்தில் இணைய முயல்வார்.  ஆகையால் தகவல்பரிமாற்ற இடைவெளி என்பது அற்றுப் போகும், ஒரு வகையில் ஒரே எண்ணத்துடன் இருவரும் சக பயணிகளாகி விடுவோம்.

எப்போது, எப்படி ஒருவர் தனது கருத்துக்களை விடுத்து மற்றவரது கருத்துக்களை ஏற்றுக் கொண்டார் என்பது இருவருக்குமே தெரியாமல் போய் விடும்.  இன்றைய இளைய சமுதாயத்திடம் இருக்கும் சிறப்பே, தங்களுக்கு நம்பிக்கை ஏற்படாத வரை ஒன்றை அவர்கள் செய்ய மாட்டார்கள், ஆனால் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டு விட்டார்களேயானால், அதற்காக எதையும் துறந்து அதை எட்டுவதில் முனைப்புடன் ஈடுபட்டு விடுவார்கள் என்பது தான்.

பல வேளைகளில், குடும்பங்களில் பெரியவர்களுக்கும் வளர் இளம் பருவத்தில் இருப்பவர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்ற இடைவெளி இருப்பது பற்றிப் பேசுகிறோம். உண்மையில் பெரும்பாலான வளரிளம் பருவத்தினரிடம் உரையாடுவது என்பது குறைந்து போய் இருக்கிறது.  பெரும்பாலான வேளைகளில் படிப்பு பற்றிய விஷயங்கள் அல்லது பழக்கங்கள் அல்லது வாழ்க்கைமுறை தொடர்பாக, இப்படிச் செய், அப்படிச் செய்யாதே என்பதையெல்லாம் தாண்டி, திறந்த மனத்தோடு பேசும் பழக்கம், மெல்ல மெல்ல குடும்பங்களிலும் குறைந்து கொண்டே வருகிறது, இது கவலை தரும் விஷயம்.

எதிர்பார்ப்புக்கு பதிலாக ஏற்பு, அகற்றுதலுக்கு பதிலாக ஆலோசனை-இப்படிச் செய்யும் போது தான் உரையாடல் வலுப் பெறுகிறது.  பிரத்யேகமான நிகழ்ச்சிகள் அல்லது சமூக வலைத் தளங்கள் வாயிலாக இளைஞர்களோடு தொடர்ந்து உரையாட நான் எப்போதும் முயற்சி செய்து வருகிறேன்.  அவர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது என்ன எண்ணமிடுகிறார்கள் என்பதிலிருந்து நான் எப்போதும் கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.  அவர்களிடம் எப்போதும் கருத்துக்களின் களஞ்சியம் கொட்டிக் கிடக்கும்.  அவர்கள் பெரும்பாலும் சக்தி நிரம்பியவர்களாக, புதுமை எண்ணம் படைத்தவர்களாக, ஒருமுக சிந்தனையுடையவர்களாக இருப்பார்கள்.

மனதின் குரல் வாயிலாக நான் இளைஞர்களின் முயற்சிகளுக்கு, அதிக அளவிலே முக்கியத்துவம் கொடுக்க முயன்று வருகிறேன். அதிகப்படியான கேள்விகளைக் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல வேளைகளில் முன்வைக்கப்படுவதுண்டு.  இளைஞர்கள் வினா எழுப்புவது என்பது நல்லது தானே!!

ஏன் இது நல்ல விஷயம் என்றால், அவர்கள் அனைத்து விஷயங்களையும் வேரடி மண்ணோடு ஆராய்ச்சி செய்ய விரும்புகிறார்கள் என்பதே பொருள்.  இளைஞர்களிடம் பொறுமை என்பது இல்லை என்று சிலர் கூறுவார்கள்; ஆனால் இளைஞர்களிடத்திலே வீணடிக்க நேரமில்லை என்றே நான் கருதுகிறேன்.  இந்த விஷயம் தான் இன்றைய இளைய தலைமுறையினரை அதிக புதுமைகளைப் படைக்க உதவி செய்கிறது, ஏனென்றால், அவர்கள் காரியங்களை விரைந்து முடிக்க நினைக்கிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் அதிக திறமைசாலிகள், மிகப்பெரிய விஷயங்கள் பற்றிச் சிந்திக்கிறார்கள் என்று நமக்குப் படுகிறது.  நல்லது, பெரிய கனவுகளைக் காணட்டும், பெரிய வெற்றிகளை அவர்கள் ஈட்டட்டும். இது தானே புதிய இந்தியா!!

இளைய தலைமுறையினர், ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய விரும்புகிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.  நான் கேட்கிறேன், இதிலென்ன தவறு இருக்க முடியும்?  ஒரே நேரத்தில் பலபணிகளைச் செய்வதில் வித்தகர்கள், ஆகையால் செய்கிறார்கள்.  நாம் நம்மைச் சுற்றி நம் பார்வையைச் செலுத்தினால், அது சமூக தொழில்முனைவாகட்டும், ஸ்டார்ட் அப்புகளாகட்டும், விளையாட்டுக்களாகட்டும், வேறு துறைகளாகட்டும் – சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் இளைஞர்களே.

இந்த இளைஞர்கள், வினாக்களைத் தொடுக்கிறார்கள், கனவுகளைக் காணும் வல்லமை பெற்றிருக்கிறார்கள்.  நாம் இளைஞர்களின் எண்ணங்களை தரையில் நிலைக்கச் செய்தால், அவற்றுக்கு வடிவம் கொடுக்க சுதந்திரமான சூழலமைத்துக் கொடுத்தால், தேசத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.  அவர்கள் அப்படிச் செய்தும் வருகிறார்கள்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, குருக்ராமிலிருந்து வினிதா அவர்கள் MyGovஇலே, மனதின் குரலில் நீங்கள், நாளை அதாவது, நவம்பர் மாதம் 26ஆம் தேதி வரவிருக்கும் அரசியலமைப்புச் சட்ட தினம் பற்றிப் பேச வேண்டும் என்று விரும்புகிறேன்.  இந்த தினம் ஏன் சிறப்பானது என்றால், நமது அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்ட 70ஆம் ஆண்டில் நாம் கால் பதிக்க இருக்கிறோம் என்று மேலும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

வினிதா அவர்களே, உங்கள் ஆலோசனைக்கு மனமார்ந்த நன்றிகள்.  ஆம், நாளை அரசியலமைப்புச் சட்ட தினம்.  நமக்கு அரசியலமைப்புச் சட்டத்தை அளித்த மகத்தான மனிதர்களை நாம் நினைத்துப் பார்க்கும் தினம் இது.  1949ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அரசியலமைப்புச் சட்ட வரைவை ஏற்படுத்திய இந்த சரித்திரபூர்வமான பணியை நிறைவேற்ற அரசியலமைப்புச் சபைக்கு, 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள் ஆயின.  கற்பனை செய்து பாருங்கள், 3 ஆண்டுகளுக்கு உள்ளாக, இந்த மாமனிதர்கள், இத்தனை பரந்த, ஆழமான அரசியலமைப்புச் சட்டத்தை நமக்களித்திருக்கிறார்கள்.  அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க மேற்கொண்ட அதிவிரைவு, இன்றும் கூட, நேர நிர்வாகம் மற்றும் உற்பத்தித் திறனுக்கான ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

நாமும் நம்முடைய பொறுப்புக்களை சாதனை படைக்கும் வகையில் குறித்த நேரத்தில் நிறைவு செய்ய கருத்தூக்கம் அளிக்கிறது.  அரசியலமைப்புச் சபை இந்த மாமனிதர்களின் இணைவாக இருந்தது.  அதிலிருந்த ஒவ்வொருவரும், பாரதத்தின் மக்கள் சக்திபடைத்தவர்களாக, பரம ஏழையும் திறனுடையவராக ஆக வேண்டும் என்று கருதி, அப்படிப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டத்தைத் தங்களது தேசத்திற்கு அளிக்கும் பேரார்வத்தோடு இருந்தார்கள்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி விரிவாக இதில் விவரிக்கப்பட்டிருப்பது தான்.  குடிமக்களின் வாழ்க்கையில் இவை இரண்டும் இணக்கமாக இருக்கும் போது, தேசம் முன்னேறிச் செல்லும்.  நாம் மற்றவர்களின் உரிமைகளுக்கு மதிப்பு அளித்தோம் என்றால், நமது உரிமைகள் தாமாகவே காக்கப்படும்; இதைப் போலவே நாம் அரசியலமைப்புச் சட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேற்றினோம் என்றால், நமது உரிமைகளும் தாமாகவே பாதுகாக்கப்படும்.  2010ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் இன்னும் எனக்கு பசுமையாக நினைவிலிருக்கிறது.

அப்போது பாரதத்தின் 60ஆவது குடியரசு தினம், நான் அப்போது குஜராத் மாநிலத்தில் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை யானை மீதேற்றி ஊர்வலமாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்திருந்தேன்.  இளைஞர்களிடையே அரசியலமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், அவர்களை அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பரிமாணங்களோடு இணைக்கவும் ஒரு நினைவில் கொள்ளத்தக்க நிகழ்வு அது.  2020ஆம் ஆண்டில், ஒரு குடியரசு என்ற முறையில் நாம் நமது 70 ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறோம், 2022ஆம் ஆண்டிலே நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவிருக்கிறது.

வாருங்கள், நாமனைவரும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை முன்னெடுத்திச் செல்வோம், நமது தேசத்தில் Peace, Progress, Prosperity – அமைதி, வளர்ச்சி, வளமை ஆகியவற்றை உறுதி செய்வோம்.

என் பிரியமான நாட்டுமக்களே, அரசியலமைப்புச் சபை பற்றிப் பேசும் வேளையில், அரசியலமைப்பு சபையின் மையமாக விளங்கிய அந்த மாமனிதரின் பங்களிப்பை என்றுமே மறக்க கூடாது.  அந்த மாமனிதர் தான் வணக்கத்திற்குரிய டாக்டர். பாபா சாஹேப் அம்பேட்கர்.  டிசம்பர் மாதம் 6ஆம் தேதி தான் அவரது மஹா பரிநிர்வாண நாள் அதாவது அவர் அமரர் ஆன நாள்.

நாட்டுமக்கள் அனைவரின் தரப்பிலும் பாபா சாஹேபுக்கு என் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்; கோடிக்கணக்கான இந்தியர்கள் கண்ணியத்தோடு வாழும் உரிமையை அவர் தான் பெற்றுத் தந்தார்.  மக்களாட்சி என்பது பாபா சாஹேபின் இயல்போடு கலந்த ஒன்று; பாரதத்தின் ஜனநாயக விழுமியம் என்பது வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல என்று அவர் கூறுவார்.  ஜனநாயகம் என்ன, நாடாளுமன்ற முறை என்ன என்பதெல்லாம் பாரத நாட்டுக்குப் புதிய விஷயங்களல்ல.  அரசியலமைப்புச் சபையில் அவர் உணர்ச்சிகரமான ஒரு வேண்டுகோள் விடுத்தார் –

இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த சுதந்திரத்தைப் பேணிக் காக்க, நாம் நமது கடைசிச் சொட்டு ரத்தம் வரை சிந்த வேண்டும் என்றார்.  மேலும் அவர், இந்தியர்களான நாம் பல்வேறு பின்புலங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அனைத்து விஷயங்களையும் தாண்டி, நாட்டுநலனையே முன்னிறுத்திச் செயல்பட வேண்டும் என்றார்.  India First – இந்தியாவுக்கே முதன்மை என்பது தான் டாக்டர். பாபா சாஹேப் அம்பேட்கரின் மூலமந்திரமாக இருந்தது.  மீண்டுமொரு முறை வணக்கத்திற்குரிய பாபா சாஹேபுக்கு என் பணிவான அஞ்சலிகள்.

என் இனிய நாட்டுமக்களே, 2 நாட்கள் முன்பாக நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று குருநானக் தேவ் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  அடுத்த ஆண்டு அதாவது 2019இல், நாம் அவரது 550ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடவிருக்கிறோம்.  குருநானக் தேவ் அவர்கள் எப்போதும் மனித சமுதாய நலனைப் பற்றியே சிந்தித்தார்.  அவர் சமூகத்தில் எப்போதும் வாய்மை, பணியாற்றுதல், சேவை, கருணை, சகோதரத்துவம் என்ற பாதையையே துலக்கிக் காட்டினார்.

தேசம் அடுத்த ஆண்டு குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த நாளை மிகுந்த கோலாகலத்தோடு கொண்டாடவிருக்கிறது.  இதன் ஒளி தேசத்தில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலும் பிரகாசிக்கும்.  அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த நன்னாளை மிகச் சிறப்பாக கொண்டாடக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.  இதைப் போலவே, குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த நாள் விழா உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படும். மேலும் குருநானக் தேவ் அவர்களோடு தொடர்புடைய புனிதமான தலங்கள் அடங்கிய பாதையில் ஒரு ரயிலும் இயக்கப்படும்.

தற்போது நான் இதோடு தொடர்புடைய ஒரு கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட போது, எனக்கு லக்பத் சாஹிப் குருத்வாரா பற்றிய நினைவெழுந்தது.  குஜராத்தில் 2001ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட வேளையில், அந்த குருத்வாராவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது.  ஆனால் அந்த வட்டார மக்களோடு இணைந்து மாநில அரசு அதை மீளுருவாக்கம் செய்தது என்பது இன்றும் கூட ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

இந்திய அரசு, ஒரு மகத்துவம் வாய்ந்த தீர்மானத்தைச் செய்திருக்கிறது; அதாவது கர்தார்புர் வழித்தடம் அமைத்தல், இதனால் நமது நாட்டின் யாத்ரீகர்கள் எளிதாக பாகிஸ்தானத்தின் கர்தார்புரில் இருக்கும் குருநானக் தேவ் அவர்களின் புனிதமான தலத்தில் வழிபட உதவிகரமாக இருக்கும்.

என் நெஞ்சுக்கினிய நாட்டு மக்களே, மனதின் குரலின் 50ஆவது பகுதிக்குப் பிறகு, நாம் மீண்டும் அடுத்த மனதின் குரலில் சந்திப்போம், மனதின் குரலின் பின்னணியில் இருக்கும் உணர்வுகளை முதன்முறையாக உங்கள் முன்பு வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு இன்று கிட்டியிருக்கிறது, இதற்குக் காரணம் நீங்கள் எழுப்பிய வினாக்கள் தாம், ஆனால் இந்தப் பயணம் தொடர்ந்து நடைபெறும்.

உங்களுடன் நான் எந்த அளவுக்கு அதிகமாக இணைகிறேனோ, அந்த அளவுக்கு நமது இந்தப் பயணம் மேலும் ஆழமாக அமையும், அனைவருக்கும் மகிழ்வைக் கூட்டுவதாக அமையும்.  மனதின் குரலால் எனக்கு என்ன கிடைத்தது என்ற கேள்வி சிலரின் மனங்களில் எழலாம்.  மனதின் குரல் வாயிலாக எனக்குக் கிடைத்த பின்னூட்டங்கள், இவற்றில் ஒரு விஷயம் என் இதயத்தைத் தொடுகிறது என்பதை நான் இன்று கூற விரும்புகிறேன்.  குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மனதின் குரலைக் கேட்கும் போது, நமது குடும்பத் தலைவர் நம்மிடையே அமர்ந்து, நம்முடைய விஷயங்கள் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் என்றே பெரும்பாலான பேர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை நான் பரவலான வகையிலே கேள்விப்பட்ட போது, நான் உங்களுடையவன், உங்களைச் சேர்ந்தவன், உங்களிடையே இருப்பவன், நீங்கள் தான் என்னை வளர்த்திருக்கிறீர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது, நெஞ்சம் பனிக்கிறது.  ஒருவகையில் நானும் உங்கள் குடும்ப உறுப்பினராகவே மனதின் குரல் வாயிலாக மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருப்பேன், உங்களோடு இணைந்த வண்ணம் இருப்பேன்.  உங்கள் சுகதுக்கங்கள், என்னுடைய சுகதுக்கங்கள்.  உங்களுடைய எதிர்பார்ப்புகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். உங்களது ஆசை விருப்பங்கள், என்னுடைய ஆசை விருப்பங்கள்.

வாருங்கள், இந்தப் பயணத்தை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்வோம்.  மிக்க நன்றி.

* ஆலிண்டிய ரேடியோ, சென்னை வானொலியில் ஒலிபரப்பான வடிவம்

தமிழாக்கம், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

1 COMMENT

  1. அற்புதமான மொழி பெயர்ப்பு. மனதின் குரல் நிகழ்ச்சியைப் பார்க்க, கேட்கத் தவறியவர்களுக்கு, படிக்கத் தந்தமைக்கு நன்றிகள் பல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe