Home அடடே... அப்படியா? சினிமா விமர்சனம்: சிட்டி வெர்சன் 2.0 எப்படி இருக்கு தெரியுமா?

சினிமா விமர்சனம்: சிட்டி வெர்சன் 2.0 எப்படி இருக்கு தெரியுமா?

செல்போன் டவரில் தூக்குப் போட்டு சாகும் அக்ஷய் குமார். தொடக்கக் காட்சியே இதுதான்.  தொடர்ந்து மறு நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள செல்போன்களெல்லாம் தொலைந்து போகின்றன. இது எப்படி சாத்தியம் என்று ஓர் ஆராய்ச்சிக்குழு கடுமையாக உழைக்கிறது. அரசாங்கத்தின் கீழ் இந்த ஆராய்ச்சியை செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், தொடர்ந்து தொலைபேசித்துறை அமைச்சரும் சாகிறார்கள்.

இந்நிலையில் வேறு வழியின்றி சிட்டியை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகிறார்கள். சிட்டி வெர்சன் 2, அக்ஷய் குமாரின் சதிகளை  எப்படி முறியடிக்கிறது என்பதுதான் தொழில்நுட்ப சாசகங்களை முன்வைத்து ஷங்கர் சொல்லியிருக்கும் பிரமாண்ட காட்சியமைப்புடன் கதை!

மொபைல்போன், நெட்வொர்க் வளர்ச்சி நம் வாழ்வில் எத்தனை ஆபத்துகளை தருகிறது, அதை விட நம் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றது, பறவையின் அழிவு, மனித இனத்தின் அழிவிற்கான தொடக்கம் என ஆர்வலர்கள் பலரும் முன்வைக்கும் கருத்துகளை அசத்தலாகப் பதிய வைக்கிறார் ஷங்கர்.

வெர்சன் 1.0 போலவே, ரஜினியின் வசீகரன் கதாபாத்திரம் சற்று வார்த்தைகளில் தடுமாற்றம். சிட்டி வெர்சன் 2.0 வந்த பின் சூடு பிடிக்கத் தொடங்குகிறது காட்சி அமைப்புகள். இடைவேளைக்குப் பின்னர் வரும் அக்ஷய்  குமாரின்  ப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது! எமி ஜாக்சன் வழக்கம் போல் வந்து போகும் கதாபாத்திரம்தான்! பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை!

சிட்டி வெர்சன் 2.0 படத்துக்காக உழைத்த கிராபிக்ஸ் டீமுக்கு நம் பாராட்டு. 3டி தொழில்நுட்பத்தின் அழகை ரசித்துச் செய்திருக்கிறார்கள்.  கிளைமேக்ஸில் புல்லட் பறப்பது, பறவை அருகில் வருவது என  ஹாலிவுட் தரத்துக்கு நம்மை ஈர்க்கிறது.

சிட்டி வெர்சன் 2.0வை சுட்டி 2.0 என்றே சொல்லலாம். சுட்டித்தனமாக செய்வது, அதுவும் ஷங்கரின் கற்பனைகளை குறிப்பாக கொலைக் காட்சிகளில் சர்வ சாதாரணமாக வித்தியாசமான கோணத்தில் எல்லாம் செய்வது, வழக்கம் போல் பிரமாண்டத்தில் லாஜிக் மீறல்கள்.

ஷங்கரின் பிரமாண்டத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில், ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை வழக்கமான பிரமாண்டம், பிரமிப்பு எல்லாம்தான்! ரஜினி, ஷங்கர், ரகுமான் இவர்களை மீறி, படத்தில் முழுக்க முழுக்கத் தெரிவது டெக்னிகல் குழுதான்!  சூப்பர் ஸ்டார் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டைலில் புகுந்து விளையாடியிருக்கிறார். அக்ஷய் குமாருக்கு மேக்கப் போடுவதே கூட கடுமையான சவால்தான்! அதையும் தாங்கிக் கொண்டு சரியாகச் செய்திருக்கிறார் மனுசன்.

வழக்கம் போல் லாஜிக் மீறுதல்கள், பாசிட்டிவ் நெகட்டிவ் எனர்ஜி கதைகள், புரியாத மொழியில் கதைவிடும் காதிலே பூ சமாசாரங்கள் எல்லாம் ரஜினிக்காகவும் ஷங்கருக்காகவும் நாம் தாங்கித்தான் ஆக வேண்டும்!

நீங்க நல்லவரா கெட்டவரா…? என்று கேட்டு… தெரியலியேப்பா என்று  பதில் சொல்லும் ரகத்தில், அக்ஷய் குமாரை கொடூரமாகக் ப்ளாஷ்பேக்கில் பரம சாதுவாகக் காட்டி அந்தக் கேள்வியை நம் மனதில் கேட்க வைத்திருக்கிறார் ஷங்கர். சரிங்க… ஷங்கர், நாங்க மொபைல் போன்ல உங்க படத்தை பாக்க மாட்டோம்.. நிச்சயமா..! ஆனா மொபைல் போன்ல யாருக்காச்சும் போன் பண்ணலாமா வேணாமா அதையாவது சொல்லுங்க ஷங்கர்!  பீதிய கெளப்பி விட்டுட்டீங்களே… என்று சொல்லத் தோன்றுகிறது.

சிட்டி வெர்சன் 2.0 பாசிட்டிவ் எனர்ஜியால் சிட்டி வெர்சன் 3.0வுக்கு மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version