திருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள்! கதறும் கிராம மக்கள்! உலகம் கேட்குமா?!

அழிக்கப்படும் தமிழின அடையாளங்கள்…

தமது கண்எதிரே ஊர் அடையாளங்களை பறிகொடுத்துக் கொண்டு நிர்க்கதியாக தவிக்கின்றனர் இலங்கை திருகோணமலை கிராம மக்கள்! கந்தசாமி மலையையும், ஆலயத்தையும் காப்பாற்றித் தருமாறு தென்னமரவாடி மக்கள் விடுக்கும் கோரிக்கை உலகின் காதுகளுக்குக் கேட்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி!

இலங்கை கிழக்கு மாகாணத்தின் எல்லையையும் வடக்கையும் நிலத்தொடர்பால் இணைக்கும் தமிழ் கிராமம்தான் தென்னமரவாடி. இது திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட இடம். தென்னன் மரபு அடி என்பதே தென்னமரவாடி என்று ஆனது.

இங்குள்ள தமிழ் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். கண்முன்னே பல அடையாளங்கள் அழிந்து கொண்டுள்ளதைக் கண்டு மனம் பதைக்கின்றனர். குறிப்பாக, தங்கள் பகுதியில் உள்ள கந்தசாமி மலையையும் முருகன் ஆலயத்தையும் காப்பாற்றித் தருமாறு கதறுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்டது தென்னன் மரபு அடி எனப்படும் தென்னமரவாடி கிராமம். இங்கே தென்னன் என்ற அரசன் காலத்தில் இருந்த கந்தசாமி மலை மற்றும் அதன்மேல் உள்ள முருகன் ஆலயம் இங்குள்ள தமிழர்களின் உயிராகப் போற்றப்பட்டு வந்தவை! இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்னைகளின் போது,1984 ஆம் ஆண்டு இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றனர் தமிழர்கள் பலர். பின்னர் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்
மீண்டும் மீள்குடியேற்றம் வந்து பார்த்த போது, கோயில் சிதிலம் அடைந்திருந்தது.

இந்நிலையில், அதே பகுதியில் முருகன் சிலை மற்றும் வேல் ஆகியவற்றை நிறுவி, மீண்டும் பாரம்பரிய வழிபாடுகளை மேற்கொண்டனர். ஆனால் அவை அனைத்தும் பௌத்த பேரினவாதிகளால் தகர்த்தழிக்கப்பட்டது!

தொடர்ந்து இந்த மலைப்பகுதியில் புத்தர் சிலை நிறுவுவதற்காக பௌத்த துறவிகள் வந்தனர். அப்போது கிராம மக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் அந்தப் பகுதிக்குச் செல்லக் கூடாது என தடை விதித்தனர்!

ஆனால், தற்போது அந்த இடத்தில் மலையடிவாரத்தில் தொல்பொருள் துறையினர், ஒரு பெயர்ப் பலகையை நிறுவி கட்டிடம் ஒன்றைக் கட்டி வருகிறது.

இந்தச் சூழலில் தொல்பொருள் துறையினர் தங்களது பாரம்பரிய இடத்தை அபகரித்துக் கொண்டு, தங்களை இந்த மலைக்கே செல்லவிடாமல் தடுத்துவிடுவார்கள் என்று அச்சப் படுகின்றனர் இவ்வூர் மக்கள்!

மேலும், பெரும்பான்மையினராக உள்ள பௌத்தர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, புத்தர் சிலையை நிறுவ துணை போவார்கள் என்று அச்சப் படுகின்றனர். இதனால், தங்களது மலையையும் முருகன் ஆலயத்தையும் காப்பாற்றி, தங்களது ஆலயத்தில் வழிபட ஆவன செய்யுமாறு சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று கோருகின்றனர்.

இதுகுறித்து இந்த கிராம மக்கள் கருத்து தெரிவித்த போது… “1984 ம் ஆண்டு நாங்கள் பிரச்னைகளின் காரணமாக இடம்பெயர்ந்து சென்றோம். அதுவரை நாங்கள் இந்த கந்தசாமி மலையில் இருந்த முருகன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்தோம். பின்னர் யுத்தத்தின் அழிவுகளை சந்தித்த நாங்கள் 2010 ஆம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றம் வந்து, இந்தப் பகுதியில் வேல் ஒன்றை வைத்து வழிபட்டோம்! அதனை அவர்கள் பிடுங்கி எறிந்தனர்

தொடர்ந்து ஒரு முருகன் சிலை வைத்தோம்! அதனை அடித்து உடைத்துப் போட்டனர். அதனை மீண்டும் நிறுவினோம்! அந்தச் சிலையும் உடைக்கப்பட்டு சிலையையே காணவில்லை! இவ்வாறு எமது ஆலயம் திட்டமிட்டு பெரும்பான்மை இனத்தவரால் சிதைக்கப் பட்டு வருகிறது!

இங்கே புத்தர் சிலை வைக்கும் முயற்சியில் ஏற்பட்ட குழப்பத்தில் யாரும் மலைக்கு செல்லக் கூடாது என போலீசார் தெரிவித்தனர். ஆனால் தற்போது தொல்பொருள் துறை மூலம் இவ்வாறு செயல்படுகின்றனர். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார் வினாசித்தம்பி தம்பிஜயா என்பவர்.

கிராம வளர்ச்சி சங்கத்தின் துணைத் தலைவரான கந்தையா பரமநாதன் இது குறித்துக் கூறிய போது, நான் 1952ஆம் ஆண்டு பிறந்தேன். அன்றிலிருந்து தற்போது என் 76 வயது வரை இந்த தென்னமரவாடி கிராமத்திலேயே படித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகிறேன்! இதுவரை எமது கிராமத்துக்கு ஒரு பௌத்த மதகுருவோ அல்லது வேறு முஸ்லிம் மதகுருவோ வந்ததில்லை!

இது சேர சோழ பாண்டிய காலத்தில், உள்ள வழிபடு மலை. 300 வருடங்களுக்கு முற்பட்ட முருகன் கோவில் இது. இந்தக் கோவிலுக்கு என்றே தனி வரலாறும் உண்டு. இது ஒரு வரலாறு படைத்த மலை. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தக் கோவிலில் நான் வழிபட்டு வந்திருக்கிறேன்! இந்த இடத்தில் ஆலயத்தோடு இணைந்த எங்களது நிலங்கள் எல்லாம் 1803 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கால அரசால் ஒப்பம் இடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது! அந்த ஆவணங்கள் எம்மிடம் உள்ளன. இது எங்களது பூர்விக கிராமம்! நாங்கள் 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற பின்னர் பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப் பட்டது

இந்த இடம் மட்டுமல்ல எமது வயல் நிலங்கள் விவசாய நிலங்கள் எல்லாம் அபகரிக்கப்பட்டு இன்று யுத்தம் முடிந்து மீள்குடியேற்றம் வந்தும் எங்களது நிலங்களை மீட்க இயலாமல் திண்டாடுகிறோம்! இந்நிலையில் எங்களது வரலாற்று தொன்மை மிக்க ஆலயத்தையும் அபகரிக்க இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

தமிழர் பிரதேசம் எங்கும் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றங்களை உருவாக்கவே தொல்பொருள் துறையினர் செயல்பட்டு வருவதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செய்திக் கட்டுரை: ரிசிந்தன் நிசாந்த்

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.