spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?கனகதுர்காவுக்கு மூக்குத்தி! சந்திரசேகர ராவ் நன்றிக்கடன்!

கனகதுர்காவுக்கு மூக்குத்தி! சந்திரசேகர ராவ் நன்றிக்கடன்!

- Advertisement -

விஜயவாடா கனக துர்கா தேவிக்கு தங்க மூக்குத்தி காணிக்கை செலுத்தினார் தெலங்காணா முதலமைச்சர் கல்வகுண்ட்ல சந்திரசேகரராவு.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக் கரையில் இந்திர கீலாத்ரீ மலை மேல் அமைந்துள்ளது ஸ்ரீ கனகதுர்கா தேவி ஆலயம். 

தெலங்காணா தனி மாநிலம் ஏற்பட்டால் பல ஆலயங்களுக்கு தங்கக் காணிக்கைகள் செலுத்துவதாக தனி மாநிலப் போராட்ட சமயத்தில் வேண்டிக் கொண்டிருந்தார் திரு சந்திரசேகர ராவு. அதற்கேற்ப வரிசையாக ஒவ்வொன்றாக தீர்த்துக் கொண்டு வருகிறார்.

இதற்கு முன் திருமலை பாலாஜிக்கு தங்கத்தில் சாளகிராம ஹாரமும் தங்கத்தாலான மாலையும் சமர்ப்பித்தார். வரங்கல் ஸ்ரீபத்ரகாளி தேவிக்கு தங்கக் கிரீடம் சூட்டினார். குரவி என்ற நகரில் கொலுவீற்றுள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமிக்கு தங்க மீசை சமர்பித்தார்.

அதே வரிசையில் விஜயவாடா கனக துர்கா தேவிக்கு தங்க மூக்குத்தி சமர்பிப்பதாக வேண்டிக்கொண்டிருந்தார். அதனைச் செலுத்துவதற்காக 28-6-2018 வியாழனன்று மதியம் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலயத்திலிருந்து தனி விமானத்தில் குடும்ப சகிதமாகப் புறப்பட்டு விஜயவாடா வந்து சேர்ந்தார். மதியம் 12.30 மணிக்கு வேத கோஷங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையோடு ஸ்ரீ கனக துர்கா தேவி ஆலயத்திற்கு சென்று தன் காணிக்கையைச் செலுத்தினார்.

அதில் சிறப்பு என்னவென்றால் அந்த தங்க மூக்குத்தியின் நடுவில் தெலங்காணா மாநில பறவையான (The Indian Roller (Blue Jay)) ‘பாலபிட்ட’ என்றழைக்கப்டும் குருவியின் உருவம் அமைந்துள்ளது.

பிறைச் சந்திரனின் வடிவில் அமைந்த மூக்குத்தியும் நடுவில் குருவி ஒன்று மரக்கிளையில் அமர்ந்திருப்பது போல வைரக்கற்களும் ரத்தினங்களும் பதித்து கண்ணைக் கவரும் விதத்தில் தெலங்காணா அரசு இந்த மூக்குத்தியை தயாரித்துள்ளது.  

11.29 கிராம் தங்கத்தால் தயார் செய்யப்பட்டுள்ள இம்மூக்குத்தியில் மூன்று வரிசையில் 57 வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. குருவியின் இறக்கைகள் நீலக் கற்களாலும், மரக்கிளையின் இலைகள் பச்சைக் கற்களாலும் பதிக்கப்பட்டுள்ளன.

காணிக்கையை சமர்பித்த முதலமைச்சர் விசேஷ பூஜைகளிலும் பங்கேற்றார். பின் தனி விமானத்தில் ஹைதராபாத் திரும்பினார். தெலங்காணா அறநிலயத் துறை அமைச்சர் இந்திர கிரண் ரெட்டி முந்தைய நாள் மாலையே குடும்பத்தோடு விஜயவாடா வந்திருந்து ஏற்பாடுகளை கவனித்தார்.

பாலபிட்ட:- பாலபிட்ட எனப்படும் நீல இறக்கைகளைக் கொண்ட குருவி இனப் பறவை சுபத்திற்கும், மங்களத்திற்கும் சின்னமாகக் கருதப்படுகிறது. விஜயதசமி சமயத்தில் இப்பறவையை தரிசிப்பது அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

எதனால் இந்த நம்பிக்கை ஏற்பட்டது? நாட்டுப் புறக் கதைகளின்படி பாண்டவர்கள் அரண்ய வாசத்திலிருந்து திரும்புகையில் பாலபிட்ட பறவையைப் பார்த்தார்களாம். அது முதல் அவர்களுக்கு அனைத்திலும் வெற்றியே கிட்டியதாம். பழங்காலத்தில் நவராத்திரி சமயத்தில் விஜயதசமி அன்று ஆண்கள் இதற்காகவே காட்டிற்குச் சென்று பாலபிட்ட பறவையைப் பார்த்து வருவார்களாம்.

அத்தனை அன்பையும் பக்தி பாவனையையும் பெற்றுள்ள இப்பறவை தெலங்காணா மாநிலத்திற்கு மட்டுமின்றி, கர்நாடகா, ஒடிஷா, பீகார் மாநிலங்களின் தேசீய பறவையாகவும்கூட விளங்குகிறது. தற்போது இப்பறவைகளை நகரங்களில் அரிதாகவே பார்க்க முடிகிறது. தசரா சமயங்களில் காட்டிலிருந்து பிடித்து வந்த பாலபிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து நகரத்திற்கு எடுத்து வந்து மக்களை தரிசிக்கச் செய்து பணம் வசூல் செய்பவர்களும் உள்ளனர்.

கனகதுர்கா மூக்குத்தி: தொன்மை காலத்தில் ‘பிரம்மம் காரு’ என்ற தீர்ககதரிசி, ‘காலஞானம்’ என்ற நூலை தெலுங்கில் எழுதி உள்ளார். தெலுங்கு பேசும் மக்களின் தீவிர விசுவசத்தின்படி, முக்காலமும் உணர்ந்த பிரம்மம்காரு கூறியுள்ள தீர்க்க தரிசனங்கள் பலவும் அப்படியே நடந்துள்ளன. இந்நிலையில் இவர் கூறிய கனகதுர்கா மூக்குத்தி பற்றிய செய்தியும் நடந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

கிருஷ்ணா நதி பொங்கிப் பெருக்கெடுத்து இந்திர கீலாத்ரி மலை மேல் உள்ள விஜயவாடா கனக துர்கா தேவியின் மூக்குத்தியைத் தொட்டு, பறித்து விட்டால் உலகம் அழிந்து விடும் என்று கூறியுள்ளார் பிராம்மம்காரு. எப்போதெல்லாம் பெருமழை பெய்து கிருஷ்ணவேணி பெருக்கெடுப்பாளோ அப்போதெல்லம் ஆந்திர மக்கள் பிரம்மம்காருவின் கூற்றை நினைத்துக் கலங்குவது வழக்கமாக உள்ளது.

தகவல்: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe