spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நீதிபதியால் ஏற்பட்ட பரபரப்பு! உண்மையில் நடந்தது என்ன?!

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நீதிபதியால் ஏற்பட்ட பரபரப்பு! உண்மையில் நடந்தது என்ன?!

- Advertisement -

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று ஆண்டாளை தரிசனம் செய்வதற்காக தன் மனைவியுடன் வந்திருந்தார் நீதிபதி மகாதேவன். அப்போது அவர், ஆலயத்தின் கருவறைக்குள் நுழைந்ததாகவும், கருவறைக்குள் வேறு எவரும் செல்லக்கூடாது என்று தடுத்த அர்ச்சகர்களை அவர் ஒருமையில் பேசியதாகவும், இனி எந்த நீதிபதி வந்தாலும் கருவறைக்குள் அழைத்துச் செல்லுமாறு கூறியதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல்களில், கோயில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளை நீதிபதி மகாதேவன் ஒருமையில் திட்டியதாகவும், தாமும் கருவறைக்குள் செல்வோம் என்று அடம்பிடித்து, எதிர்ப்பையும் மீறி உள்ளே சென்றதாகவும் கூறப்பட்டது.

ஆனால், நீதிபதி மகாதேவன், தனிப்பட்ட வகையில் கடவுள் நம்பிக்கையுள்ள, குறிப்பாக சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்ற ஆன்மிகவாதி. ஆலயங்களில் அறநிலையத்துறையினர் செய்து வரும் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, அறநிலையத் துறையை சீர்படுத்த சில பணிகளை நீதிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டு செய்து வருகிறார். கோயில்களில் காணாமல் போயுள்ள சிலைகள், நிலங்கள், சொத்துகள், நகைகள் இவற்றை மீட்கும் நீதித்துறை விவகாரத்தால், அறநிலையத்துறை அதிகாரிகள், அவர்களை பணிக்கு நியமித்த திராவிட இயக்கங்களின் அரசியல்வாதிகள் என பலரும் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கருவறையுள் நுழைந்ததன் மூலம், நீதிமன்ற சட்டதிட்டங்களை நெறிமுறைப் படுத்தும் இடத்தில் உள்ளவரான நீதிபதி மகாதேவன், ஏன் அவ்வாறு ஆலய சட்டதிட்டங்களை மீறினார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், நாத்திகர்களின் கருவறை நுழைவுப் போராட்டத்துடன் இதனை ஒப்புமைப் படுத்தி, நீதிபதியே நுழைந்துவிட்டார், இனி என்ன இருக்கிறது என்ற வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.

ஆனால் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. காரணம், திராவிடர் கழகத்தினர் மற்றும் நாத்திகவாதிகளின் கொள்கையான கருவறை நுழைவுப் போராட்டம் என்பது, பார்ப்பன விரோதம் என்ற அடிப்படையிலும், ஆண்டவன் எங்குமில்லை ஆலயங்களில் இருப்பவை வெறும் கல் என்ற வறட்டு வாதத்தை முன்வைத்தும் இயக்கப் படுபவை. ஆனால் ஆலயம் என்பது தூய்மையும், பக்தியும், வழிபாட்டு ஆசாரங்களும் பின்பற்றப்பட வேண்டியது என்பதற்கு ஆலயத்தைக் கட்டிய மன்னர்கள் காலத்தில் இருந்து நடந்து வரும் நெறிமுறைகளே சாட்சி.

நீதிபதி மகாதேவன்

நீதிபதி மகாதேவன் பயபக்தியுள்ள, சைவ இலக்கியங்களில் பெரும் தேர்ச்சி பெற்ற மனிதராக இருப்பவர். இறை நம்பிக்கை உள்ள ஒரு நபர் பக்தி மேலீட்டால் ஆர்வத்துடன் இறை மூர்த்தத்தின் அருகே இருந்து வணங்க விரும்பியிருப்பதில் தவறொன்றும் காண இயலாது.

இத்தகைய பின்னணியில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் நீதிபதி வந்த போது என்ன நடந்தது என்பதை நாம் ஆலய அர்ச்சகர்களிடம் விசாரித்தோம். சந்நிதி கருவறைக்குள் அர்ச்சகர்கள் தவிர வேறு எவரும் செல்லக் கூடாது என்பது ஆகம நடைமுறை. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்துள், மேல் சட்டை அணியாமல் அர்ச்சகர் அல்லாத மற்ற அந்தணர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் செல்லலாம் என்பது நடைமுறை. அவ்வாறு கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபத்தை அடுத்த உள்பகுதியில் ஸ்தலத்தார் உள்ளிட்ட பிரபந்தம் பாடும் நபர்கள், விஐபி.,க்கள் மேல் சட்டை இல்லாமல் சென்று தரிசித்துக் கொண்டிருந்தபோது, தாமும் அவ்வாறு செல்ல நீதிபதி மகாதேவன் விரும்பினாராம். அதற்கு அர்ச்சகர் ஒருவர் இங்கே மேல் சட்டை அணிந்து ஆடவர் உள்ளே வரக்கூடாது என்பதால் தாங்கள் இந்த படியின் அருகில் நின்று தரிசிக்கலாமே என்று கூறியுள்ளார்.

தாம் உள்ளே செல்ல முற்பட்ட போது, தன்னைத் தடுத்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தாலும் கோபத்தாலும், படியின் இந்தப் பகுதியில் நின்று தரிசிப்பதற்கும் படியை அடுத்து உள்ளே நின்று தரிசிப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு வந்துவிடப் போகிறது என்று சொல்லிக் கொண்டே, படியை அடுத்து கதவின் அருகே நின்று கொண்டு தரிசனம் செய்துள்ளார்.

நீதிபதியே ஆயினும், ஆலய நெறிமுறையை மீறுவது தவறான முன்னுதாரணம் என்று கூறுகின்றார்கள் அர்ச்சகர்கள். அவர் தனது மேல் சட்டையைக் கழற்றிவிட்டு உள்ளே வந்திருக்கலாம், ஆனால் தமிழார்வமும் பக்தி இலக்கியங்களில் தேர்ச்சியும் கொண்டு ஆண்டாள் பேரில் பக்தி நிறைந்த நீதிபதி, தாமும் அந்த ஆலய நடைமுறைக்கு உட்பட்டு, மேல் சட்டையைக் கழற்றிவிட்டு அருகேயே நின்று தரிசித்திருக்கலாம்! ஆனால் அதனைத் தடுத்த அர்ச்சகரை ஒருமையில் பேசியது தவறு! ஆண்டவன் பணி செய்யும் ஒருவர் தம் ஆலய சட்டதிட்டத்தில் பிடிப்புடனும் உறுதியுடனும் இருப்பதை நீதிபதி பாராட்டியிருக்க வேண்டும், மாறாக ஒருமையில் பேசி அணுகியிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்கின்றனர் அங்குள்ளோர்.

ஆனால், இந்த விவகாரம் நாத்திகர்களால் வேறு விதத்தில் திரித்து பரப்பப் பட்டது. கருவறைக்குள் சென்றார் என்ற செய்திப் பகிரல்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து வேறு சிலர் கூறுகையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலை முடக்க நினைத்து தோற்றுப் போனவர்கள் இப்போது அடுத்தடுத்து வலையை விரிக்கிறார்கள். அவருக்குக் கீழே பணிபுரியும் அதிகாரிகளை விட்டே அவருக்கெதிராக புகார் தர வைத்துள்ளார்கள். ஆனால் ஊடகங்கள் இவ்வளவு விளம்பரம் தந்தும் பிசுபிசுத்துப் போனது அந்தக் குற்றச்சாட்டு.

இப்போது வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவனை குறிவைத்து வதந்திகளை கிளப்பியிருக்கிறார்கள். வழக்கம்போல ஊடகங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து நீதிபதி மகாதேவனை முடக்க நிச்சயம் அறநிலையத் துறையில் உள்ளவர்களே முயற்சி செய்வார்கள். இந்த வதந்தியில் அறநிலையத் துறையைச் சேர்ந்த சிலரும் கைகோத்துள்ளனர் என்று தெரிகிறது. அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலய அர்ச்சகர்கள் மற்றும் கைங்கர்யபரர்களை நீதிபதி மகாதேவனுக்கு எதிராக புகார் தரும்படி மிரட்டப்படுவதாகத் தெரிகிறது என்கின்றனர்.

ஆக, முதலில் பொன் மாணிக்கவேல், அடுத்து நீதிபதி என்று இப்போது அறநிலையத்துறை மற்றும் நாத்திக, சிலைக்கடத்தல் பெரும்புள்ளிகளின் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பது நன்றாகத் தெரிகிறது!

3 COMMENTS

  1. அவர் மரபை மீறினாலும் அவரை பிடிக்காதவர்களும் சூழ்ச்சிக்காரர்களும் தான் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குவார்கள். மற்றபடி அவர் செய்தது ஆகம மீறல் என்றாலும் அவர் ஆன்மிக அன்பர்களின் மதிப்பை பெற்றவர் என்பதால் மெய்யன்பர்கள் இதனை பொருட்படுத்த மாட்டார்கள். கண்ணப்பர் சிவனுக்கு மாமிசம் படைத்ததை போல இதையும் ஏற்கலாம்.

  2. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நீதிபதியால் ஏற்பட்ட பரபரப்பு உண்மையில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் வந்த செய்தியை தற்போது (24.12.2018 மாலை 4.00 மணிக்கு) படித்தேன்.

    நீதிபதி மகாதேவன், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது நானும் கோவிலுக்குள் இருந்தேன். உங்கள் செய்தியில் நீதிபதி குறித்த செய்திகள் தவறானது.

    நீதிபதி மகாதேவன் மிகச் சாந்தமாகவும் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய சிறப்பு வழிக்கான வரிசையில் எளிமையாக வந்தார். அவருடன் சில நீதிபதிகளும் போலீஸ்காரர்களும் வந்தார்கள். அப்போது அர்த்த மண்டபத்தின் முன் பொதுமக்களும் அதிகம் இருந்தனர். அப்போது சுவாமி கோயிலில் பணியில் இருந்த அர்ச்சகர் பஞ்சகச்சம் கட்டிய வர்களையும் குறிப்பிட்ட நபர்களையும் மட்டும் அர்த்த மண்டபத்திற்குள் அனுமதிப்பதாக குறை கூறினார்கள். நீதிபதியும் அர்த்த மண்டப முன் வாசலை நெருங்கிய உடன் தன் மேல் சட்டையை கழட்டி கொண்டார். வேஷ்டி அணிந்து இருந்தார். நீதிபதியை, அர்த்த மண்டபத்திற்குள் செல்ல உடனிருந்த நீதிபதிகளும் மற்றும் போலீஸ்காரர்களும் கூறினார்கள். ஆனால் நீதிபதி உள்ளே அர்த்தமண்டபத்தில் தரிசனம் செய்து கொண்டிருப்பவர்கள் வெளியே வந்தவுடன் தான் செல்வதாக பணிவாக கூறினார். அர்த்தமண்டபத்தில் தரிசனம் செய்து முடித்தவர்கள் வெளியே வந்தவுடன் நீதிபதி உள்ளே போக முற்பட்டார். ஆனால் பணியில் இருந்த அர்ச்சகர் நீதிபதியை யார் என தெரியாமல் தடுத்துவிட்டார். அதற்குள் தலைமை அர்ச்சகர் போல் இருந்த ஒருவர் விரைவாக நீதிபதி அருகில் வந்து அர்த்த மண்டபத்திற்குள் அழைத்தார். ஆனால் நீதிபதி மகாதேவன் சிரித்துக்கொண்டே அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். அந்த இடத்தில் நீதிபதி கோபப்படவில்லை. யாதொரு வார்த்தையும் கூறவுமில்லை. மேலும் நீதிபதி அர்த்த மண்டபத்தின் உள்ளே போகாமல் படி அருகில் நின்று தான் சாமி தரிசனம் செய்து முடித்தார். பின்பு வெளியே வரும்போது உடன் வந்த அர்ச்சகர்களிடமும் ஆலய அதிகாரிகளிடமும் சுவாமியின் முன்பு அனைவரும் சமம் தானே சுவாமியை வணங்க வருபவர்களிடம் மனம் நோக பேசி விடாதீர்கள், அனைவரையும் சமமாக நடத்துங்கள் என்று சிறிய புன்னகையுடன் கூறிவிட்டு அடுத்த சன்னதிக்குள் சாந்தமாகவே போனார். அனைத்து சன்னதிகளுக்கும் அர்ச்சகர்கள் நீதிபதியை அழைத்துச்சென்று திருக்கோவில் வரலாற்றைக் கூறி தரிசனம் செய்ய வைத்தார்கள். பின்பு அர்ச்சகர்களும் ஆலய அதிகாரிகளும் நீதிபதியை அன்புடன் வழி அனுப்பி வைத்தார்கள் இதுதான் நடந்த உண்மை. ஆனால் உங்கள் மீடியாவில் அவதூறு பரப்பும் எண்ணத்தில் பொய்யாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    கனகசபாபதி

  3. Hats off to yo sir for reporting what actually happened. But Even your verbatim explanations of what happened there will not satisfy Atheists. They will continue to throw mud. Because they want to monetise every piller of temples to their accumulations of wealth

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe