spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeபுகார் பெட்டிஓம் சக்தி அம்மா வழிபாடா? ரோம் ஏசு அன்னை வழிபாடா? மேல்மருவத்தூர் சித்தர் பீடத்துக்கு ஒரு...

ஓம் சக்தி அம்மா வழிபாடா? ரோம் ஏசு அன்னை வழிபாடா? மேல்மருவத்தூர் சித்தர் பீடத்துக்கு ஒரு சிந்தனைக் கடிதம்!

- Advertisement -

சக்தி அம்மாவை இழிவுசெய்ய வேண்டாம்! சாக்த வழிபாட்டை சிதைக்க வேண்டாம்! என்று இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் ராம ரவிக்குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

கிறிஸ்துவர்கள் கொண்டாடும் ஏசு கிறிஸ்துவை குழந்தை ஏசுவாக வைத்து, பராசக்தி அன்னைக்கு மேரி மாதா அலங்காரம் செய்து மேல்மருவத்தூரில் செய்த கூத்து, இப்போது பலரது விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. கிறிஸ்துமஸ் நாளில்

இதை வெளிப்படுத்தும் வகையில் ராம.ரவிக்குமார் எழுதிய கடிதம்…

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு வேண்டுகோள்… தெய்வீக தமிழகத்தில் செவ்வாடை அணிந்து ஓம் சக்தி பராசக்தி என்று அம்பாளுடைய திருப்பெயரை அகிலமெல்லாம் ஒலிக்கச் செய்த போற்றுதலுக்குரிய

1.பங்காரு அடிகளார் ஐயா அவர்களுக்கும், இளையவர் 2.அன்பழகனார் ஐயா அவர்களுக்கும் 3.செந்தில்குமார் அவர்களுக்கும் தங்கள் மீதும் தங்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மீதும் லட்சக்கணக்கான ஓம்சக்தி பக்தர்கள் மீதும் மிகுந்த மதிப்பு மரியாதை வைத்திருக்கக்கூடிய ஒரு எளியவனுடைய மன வேதனையை வெளிப்படுத்தவே இந்த கடிதம்…

தமிழகம் முழுக்க இருக்கக் கூடிய ஏழை எளிய அடித்தட்டு மக்கள் அனைவரையும் ஓம் சக்தி பராசக்தி என்று முழங்கச் செய்து வழிபாட்டு முறையின் மூலமாக ஒரு ஆன்மீக சக்தியை கட்டமைத்த தங்கள் அனைவருடைய திருப்பாதங்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமயம் அனைத்து மத வழிபாட்டு முறைகளையும் மதிக்கக்கூடிய ஒன்று. பிற மத நம்பிக்கையாளர்களையோ வழிபாட்டு முறைகளையோ நிந்தனை செய்து என்றுமே நாம் நடந்து கொண்டது கிடையாது.

ஏசுவின் மீது அன்பு கொண்டு, மரியாள் மீது அன்பு கொண்டு இருக்கக் கூடிய கிறிஸ்தவர்கள், மத சுதந்திரத்துடன் இந்த மண்ணிலே வழிபாடு செய்கிறார்கள்… வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அதேபோல இஸ்லாமியர்கள் அவர்கள் நினைக்கும் ஏக இறைவனை வணங்குவதற்கும் அவர்களின் மத நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் இந்த மண்ணில் சுதந்திரம் உள்ளது. அப்படியே அவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்!

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் அவர்களுக்கு எதிராக இல்லை. இஸ்லாமியர்களை போலவும் கிறிஸ்தவர்களை போலவும் அவர்கள் பின்பற்றுவது போல் மத வழிபாட்டில் இந்துக்களும் உறுதியான பக்தி நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதுதான் எம் போன்ற எளியவனின் வேண்டுகோள்.

நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் மற்ற அனைத்து தரப்பையும் அனுசரித்து செல்ல வேண்டும்! இது சாமானியர்களின் மனது. ஆனால், தங்கள் மதத்தை சிறுமைப் படுத்திக் கொண்டு, சிறுபான்மை மக்களின் மதத்தையும் பழக்க வழக்கங்களையும் ஓட்டுக்காகத் தூக்கி வைத்து நடிக்கும் அரசியல்வாதிகளைப் போல் ஆன்மிகவாதிகள் மாறி விடக் கூடாது என்ற ஆதங்கம், சாமானிய இந்துக்கள் அனைவருக்குமே இருக்கிறது!

இது மதவெறிப் பார்வையல்ல… தவறாக எண்ண வேண்டாம்… ஒரு இஸ்லாமியர் தம் மதம் காட்டும் இறைவனை கண்ணை மூடிக் கொண்டு நம்புகிறார் வணங்குகிறார். அதில் எந்தக் கலப்பையும் அவர் செய்வதில்லை; விரும்புவதில்லை! மதத்தின் மீதும், கடவுளின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கைப் பிடிப்போடு இருக்கிறார்.

கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர்கள் அவர்கள் மதத்தின் மீதும், தேவனின், தேவ தூதனின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கைப் பிடிப்போடு இருக்கிறார்.

ஆனால், இந்து தெய்வங்களை சாத்தான்கள், பேய் பிசாசுகள் என்று கூறி இழிவுபடுத்தும் கிறிஸ்துவர்களைப் போல், இந்து மதத்தைப் பின்பற்றக்கூடிய நாம் கிறிஸ்துவர்கள் வணங்கும் அன்னை மேரி , இயேசு பிரான் ஆகியோரை வணங்குபவர்கள் பாவிகள் என்று என்றுமே கூறியது கிடையாது.

அதேபோல ஒரு இறை – ஒரு மறை என்கின்ற கொள்கையோடும் இஸ்லாம் இனிய மார்க்கம்- என்று கூறி இஸ்லாம் அல்லாதவர்களை / இஸ்லாத்தை ஏற்காதவர்களை காபிர்கள் என்று கூறுவது போல், இஸ்லாமியரை நாம் என்றுமே அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறியது கிடையாது.

அப்படி இருக்கும்போது, கடந்த 2008ம் ஆண்டிலிருந்து மேல்மருவத்தூரில் அருளாசி செய்து கொண்டிருக்கக் கூடிய ஓம் சக்தி பராசக்தி அம்பாள் கிறிஸ்துமஸ் நாள் வந்தால் கையில் குழந்தையோடு மரியாள் போல காட்சி அளிப்பது என்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது என்பது மட்டுமல்ல கண்டனத்துக்கு உரியதாகவும் தோன்றுகிறது!

காரணம் பரந்த மனம் கொண்ட இந்துக்கள் “சர்வ அலங்கார ரூபினி ” என்று போற்றி துதிப்பது போல, கையில் குழந்தையோடு காட்சி தரும் ஓம் சக்தித்தாயை, மாரியம்மனை… இன்றைய “மேரி அலங்கார நாயகியே ” என்று கூறி வணங்கிச் சென்று விடுவார்கள். ஆனால் இது இந்து மதத்துக்கு ஏற்புடையதா என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்!

காரணம் இயேசுவின் பிறப்புக்கு அன்னை மரியாளைப் போல அலங்காரம் செய்த தங்களிடம் இந்த அடியவன் ஒரே ஒரு கேள்வியை முன் வைக்கின்றேன்.

ஆடி மாதம் அம்மன் மாதம் அம்மன் கோயில்கள் எல்லாம் கஞ்சி கலயம் சுமந்து கூழ் ஊற்றக்கூடிய திருவிழா மாதம். அந்த ஆடி மாதம் தமிழகத்தில் ஏதாவது ஒரு கிறிஸ்தவ திருச்சபையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மேரி அம்மன் அதாவது அன்னை மரியாளை மாரியம்மன் அலங்காரத்தில் காண முடியுமா?

ஏதாவது திருச்சபையில் ஆடி மாதத்திலே கஞ்சிக்கலய ஊர்வலம் என்று சக்தி மாரியம்மனை எடுதுச் செல்வார்களா?

சர்ச்சின் முன்பு சமய சமரசம் என்று சொல்லி, அம்மனை அலங்கரித்து வைத்துக் கொண்டு, ஆடி மாதம் கூழ் ஊற்றுவார்களா? என்பதை தாங்கள் கருணையோடு சிந்தனை செய்யுங்கள்.

பாதயாத்திரையாக மாலையணிந்து கிறிஸ்தவர்கள் மேரி அம்மனை அலங்கார திருத்தேர் பவனி செய்து வேளாங்கண்ணிக்கு தான் செல்கிறார்களே தவிர, மேல்மருவத்தூருக்கு எந்த கிறிஸ்தவரும் வருவது கிடையாது. அதேபோல இஸ்லாமியர்களுடைய நோன்பு கஞ்சி ரம்ஜான் நோன்பு திறப்பு சமயத்தில் அரசியல்வாதிகளைப் போல குல்லா அணிந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தி இஸ்லாமியர்களை தாஜா செய்ய வேண்டும் என்கின்ற அவசியம் தங்களைப் போன்ற மிகப்பெரிய ஆன்மீகவாதிகளுக்கு தேவையா? அதற்கான அவசியம் என்ன வந்தது ?ஏன் வந்தது ?என்பது எனக்கு புரியவில்லை.

அரசியல்வாதிகளுக்கு இஸ்லாமிய வாக்கு தேவை ஆன்மிக வாதியான உங்களுக்கு தேவையா? என்பதை தயவுகூர்ந்து கருணையோடு சிந்தியுங்கள் .

ரம்ஜான் நோன்பு கஞ்சி குடிக்க கூடிய தங்களைப் போல எத்தனை மசூதிகளில் ஆடி மாதம் கூழ் ஊற்றி அம்மன் பாடல்களை பாடி வழிபாடு செய்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டாமா?

மாரியாத்தா கோயில் எல்லாம் மேரி ஆத்தா கோயிலானால் தாய் மதமான இந்து சமயம் ஊசலாடிவிடும் என்பது தங்களுக்குத் தெரியாதா?!

மேலருவத்தூர் அருகில் உள்ள அச்சிரப்பாக்கம் மலை படும் பாடு தாங்கள் அறியாததா?

நம் தாய் மண்ணும் நம்மை விட்டு பறிபோய்விடும் என்பதற்கு உதாரணமாக அது திகழ்வதை நீங்கள் பார்த்திருக்காமலா இருப்பீர்கள்!?

ஆன்மீகவாதிகள் ஆன்மீகவாதி வேலையை பார்க்கட்டும்.

அரசியல்வாதிகள் அரசியலில் வேலை பார்க்கட்டும்.

அதை விட்டுவிட்டு அரசியல்வாதிகளைப் போல ஆன்மீகவாதிகள் மாறினால் அப்பாவி மக்களுடைய கதி அதோ கதிதான் மாறிவிடும். நெற்றியில் குங்குமம் திருநீறு ஏதுமில்லாமல் நித்தமும் சுற்றித்திரிந்து மதப் பிரச்சாரம் செய்யும் பெந்தகொஸ்தே கிறிஸ்தவர்கள் அழைத்துவந்து ஓம்சக்தி மன்றத்தில் ஒரு நாள் ஓம் சக்தி பராசக்தி என்று சொல்ல வைத்து விடுங்கள்… அவர்களின் நெற்றியில் குங்குமம் இட்டு விடுங்கள்… அப்போது இந்த மரியாள் அலங்கார பராசக்தியை நாமும் ஏற்றுக் கொள்வோம்!

5 வேளை தொழுகை நடத்தக் கூடிய அல்லாஹ்வைப் போற்றி வணங்கக்கூடிய இஸ்லாமிய அழைத்துவந்து ஒரு நாள் ஓம் சக்தி பராசக்தி மருவத்தூர் அரசியே இஸ்லாமியர்களை காத்திட அவர்கள் நெற்றியில் குங்குமம் வைத்து வழிபாடு செய்து விடுங்கள் உங்கள் நோன்புக்கஞ்சி அரசியலை நான் ஏற்றுக் கொள்கிறேன்

அதை விட்டுவிட்டு மற்றவர்களைப் போல ஆதிபராசக்தி சித்தர் பீடம் “ஆன்மிக வழிபாட்டு சிதைப்பை ” செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் வழிபாட்டில் இந்துக்களாக, வாழ்க்கை முறை கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் ஒரு காரணமாக மாறிவிடும் என்கின்ற மனவேதனையுடன் இந்த வேண்டுகோள் கடிதத்தை தங்களுடைய திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் சக்தி பராசக்தி அன்புடன்… இராம. இரவிக்குமார் (மாநில பொதுச் செயலாளர் – இந்து மக்கள் கட்சி – தமிழகம்) – என்று இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe