November 29, 2021, 11:12 am
More

  ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்த விளைவு… மூன்றாவது அணி வேலைகள் ஜரூர்!

  Stalin Rahul Gandhi Chennai - 1
  “ஸ்டாலின் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், மாயாவதியும் சந்திரசேகர ராவும் புத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்…”

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன் என்று சென்னையில் தனது தந்தை கருணாநிதியின் பாணியில் ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார்… காங்கிரஸ் கூட்டணியில் ஒட்ட வந்த கட்சிகளும் ஓடிப் போகத் தொடங்கியுள்ளன.

  காங்கிரஸ், பாஜக., அல்லாத மூன்றாவது அணி என்ற கோஷம் இப்போது எதிரொலிக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்து, மத்தியில் அமைச்சர் பதவிகளில் இருந்து கொண்டு உச்ச பட்ச ஊழல்களால் அதிகம் பண முறைகேட்டில் ஈடுபட்ட கட்சியாக திமுக., போற்றப் படுவதால், தனியாக பிரதமர் பதவிக்குக் குறி வைக்கவில்லை. அமைச்சர் பதவிகள் கிடைத்தால் போதும், முதிர்ச்சி அற்ற ராகுல் காந்தியை பகடைக் காயாக்கி மேலும் அள்ளலாம் என்று திமுக., கனவு கண்டு கொண்டிருக்கிறது.

  akilesh kcr - 2

  ஆனால், மாயாவதியோ, சந்திரசேகர ராவோ, சந்திரபாபு நாயுடு, மம்தா வகையறாக்களோ, தாங்களே பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். வெறும் அமைச்சரவை சகா என்ற மரியாதை எல்லாம் அவர்களுக்குத் தேவையில்லை! அதனால், ராகுலே பிரதமர் வேட்பாளர் என்ற காங்கிரஸ் அடிமை வம்ச மனோநிலையை அவர்கள் விரும்பவில்லை. காரணம், தெலங்கானா ராஷ்டிரீய சமிதி, மாயாவதி, மம்தாவின் திரிணமுல், நாயுடுவின் தெலுகு தேசம் எல்லாமே காங்கிரஸை எதிர்த்தே கட்சியைத் தொடங்கி களம் கண்டவை. தேர்தல் நேரத்தில் கூட்டணியால் லாபம் வந்தால் ஒருங்கிணையும், ஆனால் முதலுக்கே மோசம் என்றால் தயக்கம் இருக்கத்தானே செய்யும்!

  mayavati akilesh - 3

  இந்தப் பின்னணியில் தெலுகு தேச நாயுடு ஒரு பாதையில் பயணத்தை தொடங்கினால், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ராவ் வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரது தில்லி பயணங்கள் சில தகவல்களைச் சொல்லியிருக்கின்றன.

  மக்களவை தேர்தலுக்கு 3வது அணி அமைக்க தீவிர முயற்சி செய்து வரும் சந்திரசேகர் ராவ் மாயாவதி, அகிலேஷ் யாதவ் என சந்திப்புகளை நிகழ்த்தி, நாயுடுவுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளார்.

  மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க தேசிய அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. 3வது அணி அமைக்கும் முயற்சியில் உள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மாயாவதி, அகிலேஷ் யாதவை சந்தித்துள்ளார். முன்னதாக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் சந்திரசேகர் ராவ் பேசியுள்ளார்.

  Rahul will become PM and Stalin will be CM in 2019 - 4

  சந்திரசேகர ராவின் இம்முயற்சியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆளும் கட்சியை வீழ்த்த நினைப்பவர்கள் முக்கிய எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இல்லாமல், 3வது அணிக்கு முயற்சி செய்வதன் நோக்கம் வேறு யாருக்கோ உதவுவதுதான் என அக்கட்சி கூறியுள்ளது. அதன் மூலம், தங்களுக்கே அறுவடை செய்யும் எண்ணத்தை அது அரசியலாக்கியுள்ளது.

  ஆனால், 3வது அணியின் பேச்சுவார்த்தைகள் மூலம், காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்காமல், தாங்களே மாநிலங்களில் அதிக தொகுதிகளைப் பெற்று, ஒட்டு மொத்த லாபம் அடைவதற்கான பேரம் பேசும் முயற்சிகளில்தான் இந்த மாநிலக் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸார் கூறுகின்றனர்.

  இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையில் கூட்டணி ஏறக்குறைய உறுதியாகி தொகுதி பங்கீடும் முடிந்துவிட்டதாகக் கூறப் படுகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இக்கூட்டணி, மக்களவை தேர்தலில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. எனவே, தேசிய அளவில் 3வது அணி அமைத்து அதன் பிரதமர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க மாயாவதி முயற்சித்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

  அடுத்து, சரத் பவார், தேவகவுடா, அஜித் ஜோகி, அபய் சிங் சவுதாலா, ஹேமந்த் சோரன் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களுடன் மாயாவதி பேசியுள்ளாராம். தலித் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று தன்னை முன்வைத்து அரசியல் செய்து வருகிறார் மாயாவதி!

  stalin naidu vishnustatue - 5

  முன்னதாக, பா.ஜ.,வுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை உருவாக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல அரசியல் தலைவர்களை சந்தித்து வந்தார். அவரின் இந்த முயற்சியில், திமுக., தலைவர் ஸ்டாலினின் சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. திமுக.,வுக்கு துணை பிரதமர் பதவி ஒதுக்கலாம், ஸ்டாலின் துணை பிரதமர் என்ற அளவுக்கு அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால், ராகுலையே பிரதமர் வேட்பாளர் என்று, நாயுடுவின் முன்னிலையிலேயே ஓர் அறிவிப்பை செய்து, ஸ்டாலின் அரசியல் நிலவரத்தை மடைமாற்றி விட்டுள்ளார்.

  இதனால், நாயுடு மேற்கொண்ட மாற்று அரசியல், பெரிய அளவில் சாத்தியமாகவில்லை. ஆனால், சந்திரசேகர ராவின் முயற்சிகள் பெரும் வெற்றி பெற்றுள்ளது. காரணம், ராகுல் பிரதமர் வேட்பாளர் என்ற காங்கிரஸின் முன்முடிவுக்கு மாற்றாக மேற்கொண்ட முயற்சிகள். அதனால்தான், காங்கிரஸ் இதுவரை ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம் என்று கூறி வந்தது.

  ஆனால், தேசிய அளவில் மற்ற தலைவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ளாமல், தமிழகத்துக்குள் மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கும் ஸ்டாலினின் பேச்சு, இப்போது காங்கிரஸுக்கே ஒரு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,752FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-