அல்லாரஹ்ஹா ரஹ்மான் என்ற ஏ.ஆர்.ரகுமான், இன்று தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

1967 ஜன.6ம் நாளில் சென்னையில் ஆர்.கே.சேகருக்கு மகனாகப் பிறந்தவர். தந்தைக்கு உதவியாக சிறு வயதில் சினிமா இசைத்துறையில் ஈடுபட்டவர் பின்னாளில் பெரும் உச்சத்தைத் தொட்டார்.

ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், பம்பாய் என அடுத்தடுத்த ஹிட் கொடுக்க, ரஹ்மான் புகழ் உச்சத்தைத் தொட்டது. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்ந்தார். தொடர்ந்து ஹிந்தி திரையுலகம் அவரை இருகரம் நீட்டி வரவேற்றது.

திரையுலகுக்கு வந்து 26 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த 26 ஆண்டுகளும் தமிழ்த் திரை இசை உலகில் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்!

தென்னிந்திய மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டினார். தொடர்ந்து ஹிந்திப் படங்களிலும் தனது முத்திரையை பதித்தார். கோலிவுட், பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட்டுக்கு தாவினார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றுள்ள ஏ ஆர் ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காக ஆஸ்கர் விருதினைப் பெற்று ஆஸ்கர் நாயகன் ஆனார்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என நாட்டின் உயரியவிருதுகள் இவருக்கு அணி செய்தன. இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழக சிறப்பு விருது, கோல்டன் குளோப், ஃபாப்டா மற்றும் கிராமிய விருதுகளையும் வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தியாவின் 50வது சுதந்திர தினத்தை ஒட்டி வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்டார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து, அவர் வெளியிட்ட செம்மொழிப் பாடல் உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இசையால் உலகை வசப்படுத்திய, இந்திய ஒற்றுமையைப் பேணிய, ஒட்டுமொத்த இந்திய இசை ரசிகர்களையும் சுண்டியிழுத்த ஏ.ஆர்.ஆர்., ஏ.ஆர்.ரஹ்மான், இசைப்புயல், மொஸார்ட் ஒஃப் மெட்ராஸ், ஆஸ்கர் நாயகனுக்கு நாம் பிறந்த நாள் வாழ்த்துகள்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...