சபரிமலையில் மீண்டும் ஒரு பெண்! தரிசனம் செய்ததாக மாறுவேடத்தில் ‘மஞ்சு’ என்ற பெண் ஊடகத்தில் பேட்டி!

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் மேலும் ஒரு பெண் தரிசனம் செய்தார் என்று தகவல்கள் பரவின.

கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான மஞ்சு என்பவர் ஐயப்பன் கோயிலில் 18 படி ஏறி தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டு கேரள தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில், மஞ்சு என்ற 35 வயது பெண், வயதானவர் போல் தோற்றத்தை மாற்றிக்கொண்டு சாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜன.2ம் தேதி கேரள அரசு இரு பெண்கள் சந்நிதானத்தில் முன்னிறுத்தியதை அடுத்து, பெரும் கலவரம் மூண்டது. ஆனால் சபரிமலையின் ஆசாரங்களைக் குலைப்பது என்பதில் உறுதியாக உள்ள கேரள முதல்வர் பிணராயி விஜயன், மேலும் பல பெண்களை சந்நிதானத்தில் நிறுத்தியே தீருவேன் என்று கூறியுள்ளார்.

மகர விளக்குக்கு முன், மேலும் சில பெண்களை தரிசனம் செய்ய வைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல் பரவியதை அடுத்து, பம்பை முதல் சபரிமலை வரையிலும் பக்தர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் மகர விளக்குக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் மேலும் ஒரு பெண் சாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு (35) என்பவர் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பதினெட்டாம்படி ஏறி சாமி தரிசனம் செய்ததாக கேரள செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தனது தலைமுடிக்கு வெள்ளை ‘டை’ அடித்து, மாறுவேடத்தில் சாமி தரிசனம் செய்ததாக கூறியுள்ளார். இச்சம்பவம் மீண்டும் சபரிமலையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த சம்பவத்தை பலரும் மறுக்கின்றனர். அவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவில்லை என்றும், வேறு ஓர் இடத்தில் இருந்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. சந்நிதி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் மாலை 4 மணி முதல் ஆராய்ந்து வருகின்றனர்.

போலீஸார் அனுமதி இல்லாமல், மாறுவேடத்தில் சென்று வந்ததால், இது போலீஸாரின் பாதுகாப்புக் குளறுபடி என்று குற்றம் சாட்டப்பட்டது. பயங்கரவாதிகள் எவர் வேண்டுமானாலும் இப்படி மாறு வேடம் பூண்டு சபரிமலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

மாறுவேடம் போட்டது என்பது கிரிமினல் குற்றம் என்பதால், பம்பையில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, போலீஸார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.