போராட்டம் என்று வீதியில் இறங்கிவிட்டார்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் இந்தப் போராட்டங்கள், சாமானியனின் குரல்வளையை சற்றே நெரித்துப் பார்த்திருக்கிறது! இந்த முறை, ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் குறித்து மக்களிடம் பெரிய அளவில் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவு இல்லாத எந்தப் போராட்டமும் பிசுபிசுத்துத்தான் போகும்!

படித்தவர்கள், அதிகார தோரணையில் மக்களை நடத்துவர்கள் நீதிமன்றம் வழியே தங்களுக்கான தேவைகளை அணுகுவதை விட்டு விட்டு, வாழ்வதற்கே போராடும் சாமானியனின் வாழ்க்கைப் போராட்டங்களையும் விட கீழ் மட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். லஞ்சம் பெறாமல் ஒரு வேலை நடப்பதில்லை அரசு அலுவலகங்களில்! வேலையில் மெத்தனம்! சுறுசுறுப்பு என்பதோ, சொன்ன நேரத்தில் வேலையை முடிப்பதோ எள்ளளவும் கிடையாது. இவர்கள் இருப்பதும் சேவைத் துறையில்! ஆசிரியர்களோ, நீ படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன.. எங்களுக்கு மாதம் பிறந்தால் சம்பளம் வரும்.. எக்கேடு கெட்டுப் போ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள்… இவர்களுக்கு இந்த சம்பளமா என்று மூக்கில் விரலை வைத்துக் கேட்பதுதான் வெளித் தெரிகிறது.

ஆனால், சம்பள உயர்வு, பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படி 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி தொடங்கிய போராட்டம் 5-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. வேலை நிறுத்தத்தை சமாளிக்க, ஆசிரியர்கள் வராத பள்ளிக்கூடங்களுக்கு தற்காலிகமாக புதிய ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நல்ல தீர்வை அரசு அறிவிக்கும்” என்றார்.

இந்நிலையில், ஜேக்டோ – ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ” அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, பழைய பென்ஷன் திட்டம் போன்றவற்றை அமல்படுத்த வேண்டுமென்றால் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். அதை சமாளிக்க வரியைத்தான் உயர்த்த வேண்டும். அது சாமானிய மக்கள் தலையில் தான் விடியும்” என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதனிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் பழனிசாமி கௌரவம் பார்க்காமல் இறங்கி வந்து, அவர்களுடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜேக்டோ – ஜியோ அமைப்பினர், பல காலமாக தங்கள் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து வருகின்றனர். ஆனால், இந்த அரசு, அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது. நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகள், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இல்லாமல், அவர்களை மேலும் துாண்டிவிடும் வகையில் உள்ளது. எனவே, சஸ்பெண்ட் நடவடிக்கையில் ஈடுபடுவது, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடாமல், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, முதல்வர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி, முதல்வர் பழனிசாமி, கௌரவம் பார்க்காமல், இறங்கி வந்து போராட்டக்காரர்களுடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்படி அரசியல் சூழல்களுக்கு நடுவே, அரசு மட்டும் சிக்கித் தவிக்கவில்லை, பொது மக்களும் சாமானியனும் வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கிறான். இதற்கான பொறுப்பு, ஆளும் அரசுக்கு இருப்பதை விட, எதிர்க்கட்சியான திமுக.,வுக்கே அதிகம் இருக்கிறது. திமுக., சற்று இரங்கி வந்தாலே ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒரு முடிவுக்கு வரும் என்கிறார்கள் அரசு மட்டத்தில்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...