spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryஉழவாரப் பணியின் மகிமை... விளக்கிய அக்காரக்கனி ஸ்ரீநிதி...!

உழவாரப் பணியின் மகிமை… விளக்கிய அக்காரக்கனி ஸ்ரீநிதி…!

- Advertisement -

பிப்.3 ஞாயிற்றுக்கிழமை காஞ்சீபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது.

இதில், காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆடவர் கலைக் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆலய சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் புனித சேவையைப் பாராட்டியும், உழவாரப் பணியின் மகிமை குறித்தும், ஆன்மிக சொற்பொழிவாளர் அக்காரக்கனி ஸ்ரீநிதி உரை நிகழ்த்தினார். அவரது சொற்பொழிவில் இருந்து…

மாணவ மணிகளாகிய உங்களனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள் ! உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.. நீங்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. நான் பச்சையப்பன் மேனிலைப்பள்ளி ( பழைய ) மாணவன் .. இவ்வொற்றுமையே நம்மை இங்கு இன்று இணைத்ததோ என்றெண்ணி இன்புறுகின்றேன் ! 

அனைவருக்கும் பயன்படும் படியாகச் சில வார்த்தைகள் சொல்ல முற்படுகிறேன் ! 

உழவாரப்பணி ஓர் உன்னதமான பணி ! சமய வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் உண்மையான திருப்பணிகளில் முக்கியமானது உழவாரப்பணி ! 

இங்கே இந்தப் புண்ணியக் காரியத்தில் பலர் ஈடுபட்டுள்ளனர் ! கோவை பாகவத அன்பர்கள், திருநெல்வேலி உழவாரப் பணியினர், பகவத் கைங்கரியம் அமைப்பினர் , காஞ்சீ வாழ் பாகவத அன்பர்கள் மற்றும் மாணவர்களாகிய நீங்கள் ! 

மேற்சொன்னவர்களில் வயதிற் குறைந்தவர்கள் – இளைஞர்கள் நீங்களே ! அதையெண்ணி வியக்கின்றேன் ! காரணம் கேளீர் !! 

இன்று ஞாயிற்றுக் கிழமை.. விடுமுறை தினம்.. இளைஞர்களாகிய நீங்கள் இந்த நாளினை திரையரங்குகளுக்கோ உணவகங்களுக்கோ அல்லது நண்பர்களுடனான அரட்டைக் கச்சேரிகளுக்கோ சென்று பொழுதைக் கழித்திருக்கலாம்.. 

ஆனால்.. நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பது ‘உழவாரப்பணி’ .. உங்களையெண்ணி நீங்களே பெருமை கொள்ளலாம் நண்பர்களே ! 

ஒரு உண்மை சொல்கிறேன் கேளுங்கள் ! இங்கு இந்த தெய்வீகப் பணியில், வயதில் மூத்தவர்களும் ஈடுப்பட்டிருக்கின்றனர் ! அவர்களும் சிறந்தவர்களே.. சந்தேகமில்லை.. ஆனால் அவர்களிடத்து ஒரு குறை தோன்றிட வாய்ப்புளது.. அக்குறை இளைஞர்களாகிய உங்களிடத்தே இல்லை என்பதே உங்கள் பெருமை ! 

இன்றைக்குப் பல இளைஞர்கள் வீட்டில் வாளாவிருப்பதை ( சும்மா இருப்பதை ) விரும்புவதில்லை.. நண்பர்களுடன் ஊர் சுற்றவாவது புறப்பட்டு விடுகின்றார்கள்.. நீங்கள் உழவாரப் பணிக்காக ஊர் சுற்றப் புறப்பட்டீர்கள் ! ஊர் சுற்றுவதும் பயனுள்ள பணியானது இங்கே..

40 வயதிற்கு மேலே உடல் நலனில் அக்கறை இயல்பு.. நடை பயிற்சி, சுவாசப் பயிற்சி, சர்க்கரை அளவு பரிசோதனை, உயர் இரத்த அழுத்தப் பரிசோதனை, உடற்கொழுப்பு பற்றிய அச்சம், முழு உடல் பரிசோதனை இவைகளை பலர் மேற்கொள்கின்றனர்.. 

இளைஞர்களாகிய உங்களுக்கு மேற்சொன்ன எந்த அச்சமும் தற்போது இல்லை.. வலிமையும் ( இளமையென்னும் ) வரமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பருவமுடையீர்கள் நீங்கள் ! 

இளமை வரமாவதும் சாபமாவதும் அதன் பயன்பாட்டினைப் பொறுத்தே அமையும் ! உங்கள் இளமை இங்கே வரமென மிளிர்கின்றமையால் தான் இந்தப் பொய்கைக் குளமும் மின்னுகின்றது ! 

பல பெரியவர்களும் இந்த அறப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதனை இசைகின்றேன்.. நாற்பது வயது கடந்தவர்கள், தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்வது எத்தனை இயல்பானதோ; அதே போல அவர்கள் நற்காரியங்கள் செய்யும் போது, தங்களையுமறியாமல் ( தங்கள் ) புண்ணியக் கணக்கில் கண் வைத்திடுவார்கள்..! 

போகிற வழிக்குப் புண்ணியம் சேர்த்துக் கொள்வோம் என்கிற எண்ணம் வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடும். 

உங்களுக்குப் பெருமையே உங்கள் வயது அங்ஙனம் உங்களைச் சிந்திக்கத் தூண்டாது என்பதே !  மாஸ்டர் செக்கப் போன்ற விஷயங்களிலும் ( இந்த இளம் வயதில் ) உங்கள் மனம் செல்லுவதில்லை.. புண்ணியக் கணக்கு பற்றிய எதிர்பார்ப்புகளுமில்லை.. 

இம்மை மறுமை இரண்டைப் பற்றியும் கவலை கொள்ளாத பருவமுடையீர் .. உங்கள் பெருமையே பெருமை.. எந்த எதிர்பார்ப்புமின்றி நீங்கள் தொண்டாற்றுகின்றீர்கள் ! வாழ்த்துகள் நண்பர்களே !! 

சிரமங்களைக் கணிசித்திடாது குளத்தினைத் தூய்மைப்படுத்தும் நற்காரியத்தில் ஈடுபட்டுள்ள உங்களைக் கண்டு உளம் பூரித்து நிற்கின்றேன் நான் !  ‘என்றும் இறை பணியில்’ என்று ஃபளக்ஸ் போர்டுகளில் மட்டும் பற்கள் தெரியச் சிரித்திடுவார் மத்தியில் தொண்டே செய்தென்றும் தொழுது வழியொழுகுமவர்களே உங்களை என்ன சொல்லி வாழ்த்திடுவேன் யான் ! 

பொய்கைக் குளம் – ஆழ்வார்களில் முதல்வரான ‘கவிஞர் போரேறு’ பொய்கைப் பிரான் அவதரித்த திருக்குளம் ! ஒரு தாய் வயிற்றில் பிறவாதவர் அவர் ! வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தவர் ! ஆம் !! இத் திருக்குளமே ( பொய்கையாழ்வாரைப் பிறப்பித்ததன் மூலமாக ) ஆழ்வார்கள் திருக்குலத்தைத் தொடங்கி வைத்த பெருமைக்குரியது.. 

திருக்குலத்திற்கு வித்திட்ட திருக்குளம் ! அதனைச் சுத்தம் செய்து சுத்தர்களானீர்கள் நீங்கள் ! ஆழ்வார்களில் முதலில் தோன்றியவர் பொய்கையாழ்வார் ! பாசுரங்கள் ( நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ) பாடத் தொடங்கினவர் அவரே ! 

அவரிடமிருந்தே வைணவத் தமிழ் பிறந்தது.. அவர் பிறந்தது இக்குளத்தில் தான்..  வைணவத்தமிழுக்கு வித்திட்ட திருக்குளம் இது !  வைணவத்தமிழை ஈன்ற தாய் இக்குளம் ! இக்குளத்தின் ஊற்று நீரே வற்றாத ஜீவ நதியான அருளிச்செயல் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்) எனலாம் ! 

அப்படியெனில் இத்தொண்டினால் நீங்கள் வைணவத்தமிழுக்கும் அரும் பணி செய்தவரானீர்கள் !!  நம் தாயைக் காப்பவர் / மதிப்பவர் யாராயினும் அவர் பால் நமக்கு மதிப்பு கூடும்.. நீங்கள் இக்குளத்தைக் காத்தமையால்; குளத்துதித்த குலக் கொழுந்தாம் பொய்கைப் பிரானின் நன் மதிப்பினைச் சம்பாதித்தீர்கள் ! 

அவரருள் உங்களுக்கு என்றென்றும் துணை நிற்பதாகுக !  இங்குறையும் பெருமானும் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று கொண்டாடப் படுமவன் ! 

மாணவச் செல்வங்களாகிய நீங்கள்; சொன்ன வண்ணம் செய்பவனாக அவன் நின்றிட நம் வேண்டுதல்கள் ! ஆன்மிகத்தின் வளர்ச்சி என்பது; அது இளைஞர் சக்தியை எங்ஙனம் கையாளுகின்றது என்பதைப் பொறுத்தே அமையுமென்பேன் ! 

உங்களால் இக்குளம் மின்னுகின்றது ! அவ்வழியால் நம் ஆன்மிகமும் மின்னுகின்றது.. வருங்கால ஆன்மிகம் சிறக்கும் என்கிற நம்பிக்கை துளிர்க்கின்றது ! 

மனமெங்கும் மகிழ்ச்சி ! மீண்டும் உங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் ! 

நன்றிகள் ! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe