அதிமுக-பாஜக இடையே தமிழகத்தில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக,. கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சரும் பாஜக., தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று காலை தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னையில், ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஹோட்டலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காலையில் பாமக.,வுடன் கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தொடர்ந்து பாஜக.,வுடன் தொகுதிகள் குறித்து பேசப்பட்டு, முடிவு அறிவிக்கப் பட்டது.

அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பாஜக சார்பில் மேலிட பார்வையாளர் முரளீதர் ராவ், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதலில் பாஜக., 10 தொகுதிகளில் யோசித்தது. பிப்.14 அன்று நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தையிலேயே அது இயலாத நிலையில், 7ல் நின்றது பாஜக., பின்னர் 2 மணி நேரப் பேச்சுவார்த்தையில் சில சாதக பாதக அம்சங்களை அலசியதில், 5க்கு ஒப்புக் கொண்டது இருதரப்பும். இன்று செவ்வாய்க்கிழமை 3 – 4.30 ராகு காலம் என்பதால், அது முடிந்த பின்னர், மாலை 4.30 மணிக்கு மேல், அதிமுக – பாஜக., இரு கட்சிகளும் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.


மாசி மகம் என்பதும் பௌர்ணமி என்பதும் நிறைந்த நாள் என்பதால், இன்று அதிமுக., கூட்டணி உறுதி செய்யப் படுவதை திட்டமிட்டிருந்தது. மாசி மகத்தில்தான் அதிமுக.,வின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தார் என்பதால், அவரது ஜன்ம நட்சத்திர நாளையே கூட்டணிக்காக தேர்வு செய்திருந்தனர் அதிமுக.,வினர்.

இந்நிலையில், ராகு காலம் முடிந்த பின்னர், மாலை 4.45 மணி அளவில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூட்டணி உடன்பாட்டை ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் படுவதாக அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், தங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும், 40 தொகுதிகளிலும் அதிமுக – பாஜக – பாமக கூட்டணி வெற்றி பெறும் எஎன்றும் கூறினார்.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றும் கூட்டணியாக இந்தக் கூட்டணி விளங்கும் என்றும் பியூஷ் கோயல் கூறினார்.

இதனிடையே, எந்த எந்த தொகுதிகளில் பாஜக., போட்டியிடும் என்ற விவரமும் கேட்கப் பட்டது.

கூட்டணி குறித்த அறிவிப்பு முடிந்ததும், முதல்வர் பழனிசாமி இல்லத்தில் இருந்து  விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு புறப்பட்டார் பியூஷ் கோயல். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசுகிறார் பியூஷ் கோயல்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...