spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவழிபாட்டுத் தலங்களில்... அரசியல் பேச்சு! எதிர்வினை ஆன்மீகம்!

வழிபாட்டுத் தலங்களில்… அரசியல் பேச்சு! எதிர்வினை ஆன்மீகம்!

- Advertisement -

கடந்த வாரம் ஒரு சிவன் கோவிலுக்கு சென்றிருந்தேன். பாரம்பரியமான பழமையான மிகப்பெரிய சிவாலயம் அது. அபிஷேகம் எல்லாம் முடிந்தது. அப்போது ஒரு குரல்  “யாகசாலை பூஜையாகிறது. சாமி எல்லோரையும் அங்கு வரச் சொன்னார்” என்று! உடனை அனைவரும் யாகசாலை செல்கின்றனர். நானும் அவர்களைப் பின் தொடர்கிறேன்.

அங்கு யாகசாலை பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. ஒரு துறவி யாகம் வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே சொல்ல முடிகிறது. அது இங்கு முக்கியமில்லை என்றாலும் அதையும் பதிவு செய்யும் சூழ்நிலை சமூகத்தில் உருவாகியுள்ளது!

சரி விஷயத்திற்குள் வருவோம். யாகம் முடியும் தருவாயில் பூர்ணாஹுதி எனப்படும் யாகத்தின் நிறைவு பூஜை நடைபெறுகிறது. சுமார் நூற்றி ஐம்பது ஆன்மீக பெருமக்கள் சாதாரண பாமர கிராமத்து மக்கள் கூடி நிற்கின்றனர்.

யாகத்தை நடத்திய அந்தத் துறவி மக்களை சிவாய நம ஐந்தெழுத்து மந்திரத்தை கூட்டாக உச்சரிக்கச் சொல்கிறார். சுமார் 12முறை அனைவரும் உச்சரிக்கின்றனர். அந்த துறவி கூட்டத்தினரை நோக்கி பேச துவங்குகிறார்.

மந்திரச் சொற்களின் ஆற்றல் என்ன? கூட்டுப் பிரார்த்தனை வலிமை என்ன? இந்து மத கோட்பாடு என்ன?… என்று சொல்லிக் கொண்டே வருகிறார். பத்து நிமிடங்களை கடந்து செல்கிறது. கூட்டத்தில் சிறு சலசலப்பு இல்லை.

அந்த அளவுக்கு அந்தத் துறவியில் ஆன்மீகப் பேச்சு எளிமையாகவும் யதார்த்தமாகவும் மக்ககள் பேச்சு வழக்கு மொழியிலும் இருந்தது. கூட்டத்தில் இருந்த பாதி பேருக்கு அந்த துறவியின் அரும்பணியும் தியாகமும் தெரியும். அதனால் மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதை பின்னர் புரிந்து கொள்ள முடிந்தது.

நானும் அந்தக் கூட்டத்தில் ஓர் ஓரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை அந்த துறவி கவனிக்கவும் இல்லை. இதற்கு முன் நான் அவரிடம் அறிமுகமாகிக் கொண்டதும் இல்லை. பேசிக் கொண்டிருந்த துறவியின் பேச்சு தொடர்ந்தது.

இப்படிப்பட்ட நம்முடைய இந்த இந்து தர்மத்திற்கு இன்று ஆபத்து வருகிறது. நம்முடைய கோவில்களை எல்லாம் ஒருவர் சாத்தான் கூடாரம் என்கிறார். திருச்செந்தூர் கோவிலை திருத்தணி கோவிலை எல்லாம் சாத்தான் கூடாரம் அதை தரைமட்டமாக்க வேண்டுன்னு பேசுகிறார். வாட்ஸப் பேஸ்புக்ல பாத்தீங்களா இல்லியா?

கூட்டத்தில் ஒரு சிலர் ஆம் என்றனர். பலர் அதைப் பார்த்ததாக தலையை அசைக்கின்றனர் .

இதுவே மற்ற மதத்தைப் பற்றி பேசியிருந்தால் எத்தனை பேர் வரிஞ்சு கட்டிட்டு எதிர்ப்பு தெரிவிச்சுருப்பாங்க. ஆனா நமக்கு ஆதரவா கேக்க இன்னிக்கு நாதியில்லை. நாலு அஞ்சு பேரு அநாதையா தெருவுல நின்னு அதை எதிர்த்து கூவுறான். ஆனா அதை நாம நின்னு காது குடுத்து கூட கேட்டதில்லை. இப்பிடியே போனா அழிச்சிருவாங்க நம்ம மதத்தை. இப்ப பாருங்க நாட்டையே அழிக்க பாக்குறாங்க! நம்ம ராணுவ வீரர்கள் 40 பேர், 45 பேரை கொன்னுட்டாங்க பயங்கரவாதிகள். நமக்காக நம்ம நாட்டை காக்க உயிரை விட்டிருக்கான். அந்த வீரனின் தாயும் குடும்பமும் என்ன நிலையில் இருப்பாங்க. நம்ம வீட்டு புள்ளையா இரூந்து யோசிங்க. உடனே நாம நாடு பதிலடி கொடுத்துச்சு இல்லியா.

பயங்கரவாதி கூடாரத்தை அழிக்கிறான் அந்த மனுஷன். தேவர்களை துன்புறுத்திய அசுரனை சம்ஹாரம் செய்தானே நம்ம முருகன்… அத மாதிரி அதர்மத்தை அழிக்கிறான் அந்த மனுஷன். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இன்னிக்கு மகாபாரத குருக்ஷேத்திரம் நடக்குது! மத்தவனா இருந்தா பதிலடி கொடுத்திருப்பானான்னு யோசிக்கனும் புரியுதா? நான் சொல்லுறது புரியுதா.?

நம்ம தெய்வத்தை சாத்தான்னு சொல்றவன்லாம் இன்னிக்குஅந்த மனுஷனுக்கு எதிரா கோவமா இருக்கான். அவங்க மதம் மாத்துற வேலை நடக்க மாட்டேங்குதுன்னு… அவன் வழிபாட்டு தலத்துல அவரை தோற்கடிக்கனும்னு பிரச்சாரம் பண்ணுறான். அவங்க மதத்துல இருக்கிறவங்களுக்கு லெட்டர் போடுறான். நான் சொல்லுறது புரியுதா? … அவ்வப்போது கேள்வி எழுப்புகிறார்.

உனக்கு சில கஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனா நம்ம மதமும் நாடும் பாதுகாப்பா இருக்குன்னா அது அந்த மனுஷனால தான் புரியுதா?

கூட்டம் புரியுது சாமி என சத்தமா சொல்லுகிறது.

என்னத்த புரிஞ்சுது. எல்லாத்தையும் கேட்டுட்டு அவரு அப்படி சொன்னாரு. இவரு இப்பிடி கொடுத்தாருன்னு நீ உன் புத்திய கடன் கொடுத்தா நம்ம மதத்தையும் நாட்டையும் கோவிலையும் காப்பத்தவே முடியாது. அழிக்க துடிச்சிட்டு இருக்காங்க புரிஞ்சுதா?

இந்தத் தடவை தாமரைக்கு குத்திரு! எதுல. தாமரை க்கு குத்திரு.. ஆமா இதை விட உங்களுக்கு புரியும் படி ஓப்பனா சொல்ல முடியாது என்றதும் அனைவரும் கைதட்டுகின்றனர்.

என்னப்பா அலங்காரம் ஆச்சுதா என உதவியாளரிடம் கேட்க ஆச்சுது சாமி என்றதும் சரி தீபாராதனை பார்ப்போம் வாங்க என கூறி பிரசங்கத்தை நிறைவு செய்கிறார்!

இது நடந்து சில நாட்களுக்கு பிறகு இரண்டு நாட்களுக்கு முன் மற்றொரு கோவிலுக்கு சென்றேன். நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் அது. அங்கு இருந்த ஓர் அடியவர் என்னைப் பார்த்து, சிவா.. நேற்று சிவராத்திரி உங்களை ஆளை காணோமே என்றார். நான் வேறு ஸ்தலம் சென்றிருந்தேன் என கூறினேன்!

நேற்று ஒரு தம்பி இங்க பேசுனாரு பாருங்க ரொம்ப அருமையா இருந்துச்சு. நம்ம மதத்தைத் தான் எல்லாரும் கேலி பேசுறான். நமக்கு ஹார்ட் அட்டாக்கே வந்தாலும் ஒரு அரசியல்வாதியும் என்னான்னு கூட கண்டுக்க மாட்டங்கான். இதே மத்த மதத்துகாரனுக்கு சின்ன பல் வலின்னு சொன்னாலும் பத்துபேர் அரசியல்வாதி மருந்தோட உதவிக்கு போய் நிக்குறான் ன்னு பேசுனாரு… சிவா.

அதவிட இன்னொன்னு சொன்னாரு பாருங்க..! கனிமொழி ன்னு கருணாநிதி மக.. அந்தம்மா சொல்லுறாங்க திருப்பதி பெருமாள் உண்டியலுக்கு பாதுகாப்பு எதுக்கு பெருமாளுக்கு சக்தி இல்லையான்னு கேக்க்குறாங்க . இன்னும் ஒரு வாரத்துல ஓட்டு கேட்டு நம்மக்கிட்ட வருவாங்க. இங்க பக்த்துல தூத்துக்குடியிலதான் நிக்கப் போறாகளாம். நம்மாளும் பல்ல காட்டிட்டு ரெண்டாயிர ரூவா வாங்கிட்டு ஓட்டு போடுவான் பாருங்க… நீ கும்பிடுற சாமிய கேவலமா பேசுறாங்க வெட்கமா இல்லை. இதே வேற மதத்தை கடவுளை கனிமொழி பேசுவாங்களா? பேசுனா அந்த மதத்துக் காரன் ஒருத்தன் ஓட்டு போடுவான்னானு கேட்டாரு சிவா… அந்த தம்பி என்றார்.

இந்துக்களுக்கு பிஜேபி தான் பாதுகாப்பு ஞாவம் வெச்சுக்கோங்கன்னு சொன்னாரு சிவா என்றார் அந்த அடியவர்.

இதெல்லாம் மைக்குலயா பேசுனாரு என நான் கேட்டேன்.

ஆமா மைக்குலதான். நல்ல கூட்டம் நின்னுச்சு… பொம்பளங்களே கைதட்டி உற்சாகமா கேட்டாங்க என்றார் அந்த அடியவர்.

அவர் யார் என விசாரித்த போது அவர் ஒரு மருந்து பிரதிநிதியாம். அவருக்கும் பிஜேபிக்கும் நேரடியா எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை பின்னர் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இது போன்று இந்து ஆன்மீகத் தலங்களில் அரசியல் தொடர்பில்லாத ஆன்மீகவாதிகள் பலர் ஆங்காங்கே பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

பொதுவாக இது போன்ற வழிபாட்டுத் தலங்களில் அரசியல் பேசுவது பிற மதங்களில் புதியதல்ல என்றாலும் இந்து ஆலயங்களில் நேரடியாக பலர் முன்னிலையில் வெளிப்படையாக பேசப்படுவது தற்போதுதான் தொடங்கியிருப்பதாக அறிகிறேன்.

நியூட்டன் விதி என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. Every Action has an Equal and Opposite Reaction என்று! ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது அதன் பொருள்.!

இந்து ஆன்மீகமும் அந்த எதிர்வினை பிம்பத்தைக் காட்ட துவங்கி இருக்கிறது என்றே சொல்ல தோன்றுகிறது.

தமிழகத்தில் ஆன்மீக அரசியலை முன்னெடுத்தவர்கள் இன்று ஒதுங்கி சற்று ஓய்வில் போனாலும் ஆன்மீகம் இன்று அரசியலை முன்னெடுக்க துவங்கியிருப்பது காலத்தின் கட்டாயமாகவே தோன்றுகிறது!

வழக்கறிஞர் கா.குற்றாலநாதன், நெல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe