நாடாளுமன்ற தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஒன்றை திமுக., நடத்தியது. இதில் கனிமொழி, செந்தில் பாலாஜி
உள்ளிட்டோர் கலந்துகொண்ட படங்கள் வெளிவந்தன.

திமுக., இப்போது கனிமொழிக்காக தூத்துக்குடியில் கவனம் பதிக்கிறது. தூத்துக்குடியில் நாடார் ஓட்டுகள் அதிகம் என்று கூறி, கனிமொழியின் தாயார்
ராசாத்தி அம்மாள் நாடார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காரணமாகக் காட்டி, ஒட்டுமொத்தமாக அள்ளி விடலாம் என்று பார்க்கிறது திமுக.,

அதே நேரம் பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் தூத்துக்குடியில் நாடார் ஓட்டு வங்கி என்ற ஒன்றைக் குறிவைத்து இயங்கிக்
கொண்டிருக்கிறார். இன்னும் தொகுதி முடிவாகாத நிலையில் கோவில்பட்டியில் தனது பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார் தமிழிசை.

இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி குறித்து நன்கு அறிந்தவர்கள் அதன் இயல்பைக் கூறுகிறார்கள். தூத்துக்குடி நகரம், திருச்செந்தூர்
பகுதி இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதி இடங்களில் மட்டும்தான் நாடார் ஓட்டுகள் ஓரளவு கணிசமாக உண்டு. ஆனால் மற்ற நான்கு சட்டமன்றத்
தொகுதிகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக கணிசமான வாக்கு வங்கியுடன் இருப்பது நாயக்கர் சமுதாயத்தினரின் ஓட்டுகள் என்கின்றனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இன்று எந்த கட்சிக்கு எந்தத் தொகுதி.. திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை.. ஆகிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப் படுகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று இன்று அறிவிப்பு வெளியாக
உள்ளதாகவும், திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் என்ன என்பது குறித்த அறிவிப்பும் இன்று வெளியாக உள்ளதாகவும் கூறப்படும் நிலையில்,
திமுக., ஒப்புக்கு ஒரு நேர்காணலை நடத்தியது என்று தெளிவாகக் கூறுகின்றனர் இந்த நேர்காணலில் கலந்து கொண்ட சிலர்.

முன்னதாக, மூன்று நேர்காணல் நடத்தப்பட்ட மூன்று புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அவர்களில் கனிமொழி சிரித்துக் கொண்டே நேர்காணலில் கலந்து கொண்ட படம். தூத்துக்குடிக்கு கனிமொழி – ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி – சீட்டு உறுதி என்கின்றனர். இருப்பினும் ஒப்புக்கு ஜனநாயகம் இந்தக் கட்சியில் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக ஒரு கண் துடைப்பு நாடகம் நடத்தப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் கட்சியினர். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் நாயக்கர் ஓட்டுகள் அதிகம். ஓட்டப்பிடாரத்தில் தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகள் அதிகம். தூத்துக்குடி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிகளில் ஓரளவு நாடார் ஓட்டுகள் உண்டு. ஏற்கெனவே, வெங்கடேசப் பண்ணையர் – பசுபதி பாண்டியன் பிரச்னையில் நாடார் மற்றும் வேற்று சமூகத்தவருக்கு பிரச்னை உள்ள நிலையில் திமுக.,வுக்கு தனது தாயின் நாடார் பின்னணியில் கனிமொழி இறங்குவது, அவர் இங்கே வெற்றி பெறுவதில் சந்தேகம்தான் என்கின்றனர் கட்சியினர். மேலும், கீதா ஜீவன் வேறு ஒரு போன் கால் மூலம் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறார். அது திமுக.,வுக்கான வாக்குகளை பெரிதும் பாதிப்படையச் செய்யும் என்கின்றனர்.

இரண்டாவது படம், முன்னாள் அதிமுக., அமைச்சர், போக்குவரத்து ஊழலில் திளைத்தவர், பின்னாளில் டிடிவி தினகரனின் அம் மாமக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விட்டு இப்போது திமுக.,விற்கு தாவியிருக்கும் செந்தில் பாலாஜி. நேற்று வரை திமுக.,வினர் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருந்த செந்தில் பாலாஜி இப்போது நேர்மையாளர் ஆகிவிட்டார் என்கின்றனர். அவர் இப்போது பணமூட்டைகளுடன் வந்தவர். பாவமன்னிப்பு கொடுத்து புனிதர் ஆகிவிட்டார்கள். அரவக்குறிச்சி, கரூர் என கேட்டுக் கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. எம்.பி. சின்னசாமியும் செந்தில் பாலாஜியும் எம்.பி., தேர்தலுக்கும் பணம் கட்டியிருக்கிறார்களாம். இது இல்லாவிட்டாலும், அரவக்குறிச்சி இடைத் தேர்தல் மீண்டும் நடைபெறும்போது, அதில் நிச்சயம் அவர் போட்டியிடுவார் என்கின்றனர்.

இலங்கைத் தமிழ் பிரச்னையா, நதிநீர் பிரச்னையா, வழக்குகளா, தில்லியா… கூப்பிடு கேஎஸ்ஆரை என்பார்கள். வைகோவுடன் மதிமுக.,வில் இருந்தவர் பின்னாளில் தாய்க்கழகம் என திமுக.,வுக்கே திரும்பிவிட்டார். கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர். தேவைப்படும் போதெல்லாம் அழைத்து வழக்குகள், பத்திரிகை தொடர்பு என அரசியல் விவகாரங்களுக்காக அணுக்கமாக வைக்கப் பட்டவர். இப்போது கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் கட்சியில்! முன்னர் கோவில்பட்டியில் போட்டியிட்டவர் இவர்.

இந்த வேட்பாளர் தேர்வுகளில் ஐ.பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பியதாகத் தெரிகிறது. இருப்பினும் இன்று பட்டியல் அறிவிக்கப் படக் கூடும்,. அதில் தெரிந்துவிடும், வெற்றி வேட்பாளர்களின் பின்னணி!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...