October 20, 2021, 12:47 pm
More

  ARTICLE - SECTIONS

  ‘அப்படி’யானால்… கனிமொழி வேட்புமனு தள்ளுபடி ஆகும்!

  kanimoshi karuna - 1

  கனிமொழியை நாடார் என்று முன் நிறுத்துவதாகக் கூறப்படுகிறது…

  கலப்புத் திருமணங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல! மிக நீண்ட வருடங்களுக்கு முன் கலாக்ஷேத்ராவின் நடனமணி ருக்மணி தேவி, அருண்டேல் என்ற ஆங்கிலேயரை மணந்தது மிகவும் காரசாரமாக விவாதிக்கப் பட்டது! இந்த ருக்மணி பின்னாளில் 1977ல் ஜனதா ஆட்சி அமைந்த போது மொரார்ஜி தேசாயால் ஜனாதிபதி தேர்தலுக்குப் பரிந்துரைக்கப் பட்டார்.

  அதற்கு அடுத்த, மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கலப்புத் திருமணம், ராஜாஜி தனது மகளை, மகாத்மா காந்தியின் மகனுக்கு மணமுடித்தது!

  ஜோதி அம்மாள் என்ற ஐயங்கார் பெண்மணி, வெங்கடாசலம் என்ற தலித்தை (அப்போது அவர்கள் ஹரிஜன் என அழைக்கப் பட்டனர்) மணந்து ஜோதி வெங்கடாசலம் ஆனார். காங்கிரஸ் அமைச்சரவையில் அரிசன மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார் – பின்னாளில் கேரள ஆளுநர்.

  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் – அந்த ஐயங்கார் ஜோதி அம்மாள்- ஒரு தலித் சமூகத்தவரை மணந்ததால் தானும் ‘தலித்’ என்ற அடையாளத்தைப் பெற்றார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய ராசிபுரம் (ரிசர்வ்) தொகுதியில் போட்டியிட்டார்!

  அதாவது பெண்ணின் சாதி கணவர் வழியில் தீர்மானிக்கப்பட்டது. சனாதன இந்து முறைப்படி ஒரு பெண், தனது சாதியாகவே இருப்பினும் மணமான பிறகு கணவனின் கோத்திரத்தை சேர்ந்துவிடுகிறாள். அதை ஒட்டியே கலப்புத் திருமணத்தில் பெண்ணின் நிலையும் தீர்மானிக்கப் பட்டது!

  பிறகு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், இத்தகைய கலப்பு மணங்களுக்கு ஒரு ‘பிராமண துவேஷம்’- என்ற சிறப்புத் தகுதி பிரசார ரீதியாக ஏற்படுத்தப் பட்டது! அதாவது பிராமணர்களின் ‘இனத் தூய்மையை’ வேரறுக்க வேண்டும் – ‘பாப்பாத்தி’களைக் கல்யாணம் கட்ட வேண்டும்!

  அது பரவலான வரவேற்பையும் பெற்றது – கலப்புத் திருமணம் செய்தவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கும் திட்டம் வந்தது!

  ஆனால் இது மிகப் பெரிய சமூக சீர்திருத்தம் என்று கொண்டாடிய ‘திராவிட சீர்திருத்தப் புலிகள்’ எவரும் தம் மகளைத் தன்னை விடச் சாதீய அடுக்கில் கீழே உள்ளவனுக்குக் கட்டி வைக்க முன்வரவில்லை!

  அடுத்து இந்த ‘கலப்புத் திருமண’ வேகம் தன் வீட்டு வாசற்படியருகில் வந்து நின்றதும் இதர பிற்பட்ட சமூகங்கள் – இவர்கள் பாஷையில் சொல்வதானால் ‘ஆதிக்க சாதியினர்’ – உஷார் ஆக ஆரம்பித்தனர்! அது இன்று ‘ஆணவக் கொலை’ வரை வந்து நின்றுள்ளது!

  இந்தப் பிரச்னை முளைத்த பிறகு கூடவே வேறொரு சிக்கலும் முளைத்தது.

  ஒரு பிராமண ஆண் , அல்லது ‘ஆதிக்க சாதி’ ஆண் ஒரு தலித் பெண்ணை மணந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை SC/ST பிரிவில் இட ஒதுக்கீடு கோருமானால்?…

  இந்தப் பிரச்னை நீதி மன்றங்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப் பட்டது.

  கலப்புத் திருமணம் என்பது புரட்சிகரமானது என்று கூறப்பட்டாலும், இந்தப் பிரச்னையில் சனாதன தர்மத்தையே துணைக்கு அழைத்தனர் ‘புரட்சி’ வாதிகள்!

  ‘பெண் என்பவள் நிலம் போன்றவள்- ஆணே அந்த நிலத்தில் ஊன்றப்படும் விதை! பயிரின் வகை என்பது விதையை வைத்துத்தான் தீர்மானிக்கப் படுமே தவிர நிலத்தை வைத்து அல்ல’- இந்த வேத கால சனாதனப் பார்வையை (அதுவரை பெண்ணை பூமிக்கு ஒப்பிடுவது என்பதை ‘பெண்ணடிமைத் தனம்’- ‘பிற்போக்கு’ என்று விமர்சித்தவர்கள்) அப்படியே தங்கள் வாதத்துக்கு ஸ்வீகரித்துக் கொண்டார்கள்.

  எனவே பல்வேறு நீதி மன்றங்கள், கலப்புத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகள் தங்களின் தந்தையின் சாதியையே சேரும் எனத் தீர்ப்பளித்தன! இதன் மூலம் பிராமண / ஆதிக்க சாதி ஆண்கள் தலித் பெண்ணை மணந்து, அதன் மூலம் பெறும் பிள்ளைகளின் வழியாக SC/ ST சலுகைகளை அடையும் வழி மூடப்பட்டது!

  மேலும் கலப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள் தங்கள் தந்தையின் சாதியையே கொள்ளும் என்பது சட்டப்படி அமலாயிற்று! ஏனெனில் நமது சமுதாயமே ‘தந்தை வழிச் சமுதாயமே’- அது ‘தாய்வழிச் சமூகம் அல்ல’ என்று வாதிடப்பட்டது.

  அடுத்த முன்னேற்றம் கணவன் – மனைவி (இணையர் – SPOUSE) விஷயத்தில் சாதியை எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்வி எழுந்தது. உதாரணமாக ஒரு முற்பட்ட சாதி இளைஞர் தலித் பெண்ணை மணந்து SPOUSE ன் சாதிக்கு மாறுவதோ, அல்லது ஒரு முற்பட்ட வகுப்புப் பெண் ஒரு தலித்தை மணந்து ‘நான் ஒரு தலித்’ என்று SPOUSE வழியில் மாறுவதோ தடை செய்யப்பட்டது. (இப்போது ஜோதி வெங்கடாசலம் இருந்திருந்தால் ரிசர்வ் தொகுதியில் நிற்க முடியாது!)

  அதற்கு உதாரணம் சேலம் மாநகராட்சித் தேர்தல் ஒன்றில் ஒரு வார்டு ‘பெண்கள் – தலித்’ என்று வரையறை செய்யப்பட்டது. அந்த வார்டின் பழைய கவுன்சிலர் தலித். இந்த முறை அந்த வார்டு ‘பெண்கள் – தலித்’- என்று மாறியதால் அவரது மனைவி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அவர் பிறப்பால் பிராமணப் பெண் – தலித்தை மணந்தவர்.

  அந்த வகையில் தனது கணவர் தலித் – எனவே நானும் கணவர் வழியில் தலித் – எனவே ‘பெண்கள் – தலித்’ வரையறையில் இந்த வார்டில் போட்டியிடுகிறேன் என்றார்! ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப் பட்டது. SPOUSE வழியில் ஒரு ஆணோ பெண்ணோ சாதி மாறிவிட முடியாது!

  ஆக இன்றுவரை நடைமுறையில் உள்ள சட்டப்படி – கலப்புத் திருமணம் மூலம் பிறக்கும் வாரிசுகள் தம் தகப்பனின் சாதியையே சேரும்!

  எனவே கனிமொழி தனது தகப்பனார் வழியில் ‘இசை வேளாளர்’ ஆக மட்டுமே இருக்க முடியும்.

  கருணாநிதி, மு.க.அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் தாங்கள் போட்டியிட்ட காலங்களில் தமது தேர்தல் வேட்பு மனுக்களில் தங்கள் சாதியை ‘இசை வேளாளர்’ என்று காட்டி இருந்து, இன்று தனது வேட்பு மனுவில் கனிமொழி தன்னை ‘நாடார்’ என்று குறிப்பிட்டு இருப்பாரானால் சட்டப்படியே அவரது மனு தள்ளுபடியாக வாய்ப்பு உண்டு!

  • முரளி சீதாராமன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,569FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-