spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryரூ.12000 குறைந்த பட்ச மாத வருமான உறுதி - பணவரவா? பம்மாத்தா?

ரூ.12000 குறைந்த பட்ச மாத வருமான உறுதி – பணவரவா? பம்மாத்தா?

- Advertisement -

congress manifesto

அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் என்பதை முன்னிறுத்தி ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.12,000/- வீதம் ஆண்டுக்கு ரூ.72,000/- கொடுக்கவிருப்பதாக அறிவித்தார் – காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில்.

ஆச்சரியப்பட்டீர்கள் அல்லவா? அதிர்ச்சி தந்த அறிவுப்பு அல்லவா? என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கேட்டு பதில் பெற்றுக் கொண்டார். புதிதாக எதாவது செய்தால் நாமும் அருகில் இருப்போர், நண்பர்கள், உறவினர்கள் என்று கருத்துக் கேட்போமே! அப்படித்தான் இது என்று தோன்றியது. ஆனால் ஒரு உறுத்தல்.

நான் கேம்ப்ரிட்ஜில் எம்ஃபில் கோட்டடிக்கவில்லை. ஹார்வேர்ட் உள்ளிட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கால்பதித்து வெளியேறியது கிடையாது. உள்ளூர் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி கற்றேன். பட்டப்படிப்பு, மேற்படிப்பெல்லாம் நம்மூர் பல்கலைகளில் ஆங்கில வழியில். ஆகவே எனக்கு அந்த ஹார்வேர்ட், கேம்ப்ரிட்ஜ் கணக்கில் ஒரு சந்தேகம் வந்தது. மாதம் ரூ.12,000/- என்றால் 12×12=144 என்ற பனிரண்டாம் வாய்ப்பாட்டின் படி வருடத்துக்கு ரூ.1,44,000/- அல்லவா தரவேண்டும். இவர் ரூ.72,000/- என்கிறாரே?

கொஞ்சம் மேல் நாட்டுப் படிப்பு பற்றிய விவரம் புரிந்த நண்பரிடம் கேட்டேன். அவர் விளக்கிய விவரம்: ரூ.12,000 என்பது இந்த குறைந்தபட்ச வருமானத்தின் அதிகபட்ச வரம்பு. அதாவது ரூ.12,000க்கு குறைவான வருமானம் உள்ளோருக்கு வருமானத்தை ரூ.12000 ஆக்க எவ்வளவு பணம் வேண்டுமோ அதை அரசாங்கம் தரும்.

chidambaram nirav modiஒருவருக்கு மாத வருமானம் ரூ.6000 என்று வைத்துக் கொண்டால் மீதி ரூ.6000ஐ அரசு தரும். அதைத் தான் வருடத்துக்கு ரூ.72,000/- என்று ராகுல் சொல்லியிருக்கிறார். அது ஒரு உதாரணம். அதை அப்படியே கணக்கு வைக்கக்கூடாது என்றார்.

சரி! இப்போது அந்த 5 கோடி குடும்பங்களின் வருமானம் என்ன தோராயமாக எவ்வளவு தொகையை ஒவ்வொருவருக்கும் மாதா மாதம் தரவேண்டும் என்ற கணக்கு இருக்கிறதா? இல்லை ஆட்சிக்கு வந்து கணக்கெடுத்து பிறகு காசு தருவதென்றால் தொடங்கவே இரண்டு வருடங்கள் ஆகிவிடுமே என்றேன்.

அது அவர்கள் வேலை. திட்டம் போடும் போது இந்த விவரம் கூட இல்லாமலா போட்டிருப்பார்கள்? அபிஜித் முகர்ஜி எம்.ஐ.டிகாரர் என்றார்.

சரி. இனி நாம் தேடிக் கொள்ளலாம் என்று தேடினேன்.

தோராயமாக குடும்பத்துக்கு ரூ.72,000  இல்லை… கூடக் குறைய வரும் என்றாலும் கிட்டத்தட்ட 2.5லிருந்து 3 லட்சம் கோடி ரூபாய்கள் கூடுதலாக வேண்டும். இந்தப் பணம் எங்கிருந்து வரும்?

அபிஜித் முகர்ஜி யார் என்று தேடியபோது கிடைத்த தகவல் நம் தேசத்துக்கு உகந்ததாக இல்லை. அவர் கல்கத்தாவில் பிறந்து அங்கேயே படித்து பிறகு தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பொருளாதாரம் படித்து, பின்னர் ஹார்வேர்டில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது ஃபோர்டு ஃபவுண்டேஷன் ஆதரவிலான ஏழ்மைப் பொருளாதாரம் குறித்த பேராசிரியராக மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பணிபுரிகிறார்.

இந்தத் திட்டம் குறித்து ராகுலுக்கு ஆலோசனை சொன்ன பொருளாதார மேதை இந்த அபிஜித் முகர்ஜி தான். ஏனய்யா உங்களிடம் மன்மோகன் சிங் இருக்கிறாரே அவரிடம் கேட்கலாமே? ஏனோ கேட்கவில்லை.

நேற்று வரை பொருளாதாரம் மந்தம், வருமானம் இல்லை, தொழில் படுத்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருந்த ப.சிதம்பரம் இந்த அறிவிப்புக்குப் பிறகு பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பாய்ந்து செல்கிறது. ஆகவே பிரச்சனையில்லை 3,65,000கோடி தாராளமாக வரும் என்கிறார்.

விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6000 கொடுத்தால் பொருளாதாரம் என்னாவது என்று இரண்டு மாதங்களுக்கு முன் கவலைப்பட்ட ரகுராம் ராஜன் இப்போது மாதம் ரூ.6000 கொடுப்பது சாத்தியம் என்கிறார்.

இதை செயல்படுத்த வேண்டும் என்றால் முதலில் இவர்கள் சொல்லும் கணக்கின்படி 5 கோடி ஏழை மக்களில் யாருக்கு எவ்வளவு பணம் தேவை என்ற கணக்கு வேண்டும். அந்தக் கணக்கை எடுத்து எவ்வளவு பேர் எவ்வளவு பணம் என்ற இறுதிக் கணக்கு வர இரண்டாண்டுகள் குறைந்தபட்சம் ஆக்குவார்கள்.

பிறகு விழா எடுத்து அதை நடத்த நாள் குறிப்பது இதெல்லாம் சேர்த்து ஒரு வருடம் ஆகும். இவர்கள் ஆட்சியில் வெள்ளக்காடாகக் கிடந்த உத்தராகண்டுக்கு ராகுல் வந்து கொடி காட்டினால் தான் வண்டி கிளம்பும் என்று நிவாரணப் பொருட்களை நிறுத்தி வைத்த வரலாறு இன்னும் மறக்கவில்லை.

சரி இதை செயல்படுத்தினால் வேறு என்னென்ன மாற்றம் வரும்?

  1. வருமான வரி அதிகம் போடுவார்கள்.

ராகுலின் பொருளாதார ஆலோசகர் அபிஜித் முகர்ஜி இந்தியர்கள் வரி குறைவாகக் கட்டுகிறோம் என்று சொல்லிவிட்டார். அவர் கணக்கு இதோ:

ரூ.75000க்கு கீழ் => வரி இல்லை

ரூ.75000 – 150000 => 20% வருமான வரி

ரூ.150000 – 500000 => 30% வருமான வரி

ரூ.500000 – 1000000 = > 40% வருமான வரி

ரூ.1000000 – 2000000 => 50% வருமான வரி

ரூ. 2000000க்கு மேல் 60% வருமானவரி

ஆனால் இது குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அபிஜித் இந்த வரி விவரத்தை இப்போது சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்.

  1. பொருட்களின் விலைவாசி அளவுக்கதிகமாக எகிறும்

பணவீக்கம் (அதாவது விலைவாசி உயர்வு) மிக நல்லது என்கிறார் அபிஜித். காரணம் ஒரு பொருள் ரூ.50க்கு விற்றால் அரசுக்கு 10% வரி என்று செலுத்தினாலும் ரூ.5 வரி. அதே பொருள் ரூ.100க்கு விற்றால் 10% வரி என்றால் ரூ.10 வரி. ஆகவே விலைவாசி உயர்வு நல்லது என்கிறார் அபிஜித்.

சாம் பிட்ரோடா என்று ஒருவர். அமெரிக்கா போல இந்தியாவில் ஃபோன் கொண்டு வரவேண்டும் என்று 1985ல் ராஜீவ் காந்தி சொன்ன போது வீதிக்கு வீதி பிசிஓ போட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். அதுவும் கிராமங்களுக்கு ஃபோன் பிசிஓ அவ்வளவாகப் போகவில்லை. கேட்டால் இருக்கும் இடத்தில் தானே கனெக்‌ஷன் வரும் என்றார். இந்த பிட்ரோடா இப்போது சம்பாதிப்பவர்கள் வரி கட்டினால்தான் ஏழைகளுக்கு உதவ முடியும், ஆகவே வரி அதிகம் என்று பேசக்கூடாது என்கிறார்.

176000 கோடி 2ஜி சம்பாத்தியத்துக்கு எவ்வளவு வரி கட்டினார்கள் ஆபீசர்? 189000 கோடி நிலக்கரி ஊழல் வருமானத்துக்கு எத்தனை கோடி வரி கட்டினார்கள் மிஸ்டர் பிட்ரோடா?

இன்று ஜிஎஸ்டி என்று வந்துள்ளது. ரூ.20 லட்சம் வரை வரி கிடையாது! ஆனால் வியாபாரத்துக்கு சரக்கு வந்து போன கணக்கு, பில் தொகை சமர்பிக்க வேண்டும் என்று உள்ளது. இதனால் என்ன ஆகிறது. 20லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் யாரையும் கணக்கு வைத்துக் கேட்டு வரி வாங்க முடிகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இதைச் செய்யாமல் சிதம்பரம் என்ன சொன்னார்?

2.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்கள் எல்லோருக்கும் வரி என்றார். வரி வரம்பை அதிகப்படுத்தினால் வரி கட்டுவோர் எண்ணிக்கை குறையும், பிறகு வருமானத்துக்கு அரசு என்ன செய்யும்? என்றார்.

கோடிகளில் புரண்ட சில வியாபாரிகள் நஷ்டக் கணக்கு காட்டி பணத்தைப் பதுக்க துணை போனார் சிதம்பரம். ஆனால் சம்பளம் வாங்கி அதை கணக்குக் காட்டி வரி கட்டும் எல்லோருக்கும் வரி போட்டு வாட்டினார். ஏமாற்றுபவனைப் பிடிப்பதைவிட ஒழுங்காகக் கட்டுபவனிடம் அதிக வரி போட்டு வாங்கிவிட்டால் சுலபமாக வருமானம் என்று பேசினார்.

இதை சரியாக நடைமுறைப்படுத்துவார்களா ?

சரி! காங்கிரஸ்காரர்கள் ஏழைகளுக்கு ரூ.12000 சரியாகக் கொடுப்பார்களா என்றால் இவர்கள் விவசாயக்கடன் தள்ளுபடி வாக்குறுதி ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் சந்தி சிரிக்கும் விதத்திலேயே தெரிகிறது, இவர்கள் உதவி செய்யும் லட்சணம்.

இல்லாத குப்பன் சுப்பன் பெயரை கணக்கில் எழுதி கடன் தள்ளுபடி லிஸ்ட் ஒன்று போட்டிருக்கிறார்கள்.

கடன் வாங்கிய விவசாயிகளுக்கு வங்கிகளை நோட்டீஸ் விடச் சொல்லிவிட்டாராம் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்.

ராஜஸ்தானில் கள்ள மார்கெட் உர வியாபாரிகள் விவசாயி என்று கடன் தள்ளுபடி பெறும் லிஸ்டில் வருகிறார்கள். இந்தக் கதை தான் இந்தியா முழுக்க நடக்கும். ஊழல் தலைவிரித்து ஆடும். ஏழைக்கு உதவ என்று நம்மிடம் பிடித்த வரிப்பணம் எங்கே யார் என்ன ஆட்டம் போட ஆட்டையைப் போடப்படும் என்று தெரியாது.

இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இந்தத் திட்டத்தால் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் நடுத்தர மக்களைக் கசக்கிப் பிழிந்து காசு அடிப்பது தவிர வேறெதுவும் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.

ரூ.6000க்கு ஆசைப்பட்டு மக்கள் எதிர்காலத்தை இழந்துவிட வேண்டாம் என்பதே நமது கருத்து.

கட்டுரை: – C.H. அருண்பிரபு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe