September 28, 2021, 12:10 pm
More

  ARTICLE - SECTIONS

  விவசாயக் கடன் தள்ளுபடி என்ற மாபெரும் மோசடியின் பின்னணியில்…!

  பின்னர் வங்கிகளும் முதலாளியும் மற்ற வேலையைப் பார்த்து கடனை எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் விவசாயக் கடன் தள்ளுபடி வரும்போது இந்தக் கடனையெல்லாம் வாராக் கடனாகக் காட்டி அந்த வங்கி அரசு மான்யத்தைக் கொண்டு சீர் செய்து விடுகிறது.

  ram v thyagarajan - 1விவசாயக் கடன் தள்ளுபடி என்பதை பலரும் ஏதோ நியாயமான செயலாகவே கூறுவார்கள். ஆனால் அந்த ஓட்டையை வைத்தே தொழிலதிபர்களும் பெரு ஏஜெண்டுகள் விவசாயிகள், சாதாரண விவசாயிகளின் வாழ்க்கையை வைத்து எப்படி ஏப்பம் விடுகின்றனர் என்பதற்கு உதாரணமாக விளங்கும் ஒரு செய்தி கடந்த வாரம் வெளிவந்தது.

  நமது வரிப்பணத்தை அரசியல்வாதிகள் திருடுகிறார்கள் என்று கூச்சலிடுபவர்கள், உண்மையில் “வெள்ளந்தி” விவசாயிகளும் முதலாளியும்கூட சேர்ந்து நம் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்பது தெரியவந்தால் என்ன செய்வார்கள்?! அப்படி ஒரு சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றது.

  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்பரேசன் வங்கிகளில் விவசாயிகளின் பெயரில் 100 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்த புகாரில் கைதான திருஆரூரான் சர்க்கரை ஆலை குழுமங்களின் தலைவர் ராம் வி தியாகராஜன் பணத்தை திருப்பி வழங்க ஒப்புக்கொண்டார் என்பதால், விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

  சென்னை கோட்டூர்புரத்தில் கப்பல் போன்ற வீட்டில் வசித்து வருபவர் திருஆரூரான் சர்க்கரை ஆலை அதிபர் ராம் வி தியாகராஜன். திருஆரூரான் குழுமத்திற்கு, சொந்தமாக, கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த இறையூரில் அம்பிகா சர்க்கரை ஆலையும், கும்பகோணத்தை அடுத்த திருமண்டகுடி, கோட்டூர், ஏ.சித்தூர் ஆகிய பகுதிகளிலும் சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.

  இந்த நான்கு ஆலைகளிலும், விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்த வகையில் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை, ரூ.500 கோடிக்கும் மேல் உள்ளதாம். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம், வேப்பூர் தாலுக்கா கச்சிமயிலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஸ்டாலின் என்பவர், திருஆரூரான் சர்க்கரை ஆலைத் தலைவர் தியாகராஜன் மீது மோசடி புகார் ஒன்றை அளித்தார்.

  அதில், தனது பெயரில் இரு வேறு வங்கிகளில் 18 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி செய்திருப்பதாகவும், தான் வாங்காத கடனுக்கு, அதனை திருப்பிச் செலுத்துமாறு வங்கிகள் தன்னை நிர்பந்திப்பதாகவும் ஸ்டாலின் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க, தன்னிடம் கையெழுத்து பெற்ற ஆவணங்களை வைத்து, சர்க்கரை ஆலை அதிபர் ராம் வி தியாகராஜன் மோசடி செய்துவிட்டதாகவும், கரும்பு விவசாயி ஸ்டாலின் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

  இந்த மனுவை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பிய ஆட்சியர் அன்புச்செல்வன், உடனடியாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, கடலூர் குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வைத்து, ராம் வி தியாகராஜனை கைது செய்து கடலூர் அழைத்துச் சென்றனர்.

  தொடர்ந்து அவர் மீது, மோசடி செய்தல், ஏமாற்றுதல், போலியாக ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாகவும் அவர் கரும்பு விவசாயிகளிடம் 100 கோடி ரூபாய் அளவிற்கு பணம் மோசடி செய்திருப்பதாகவும் கடலூர் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.

  thiru arooran sugars ltd thiruvarur - 2இந்நிலையில் தன் மீது புகார் அளித்திருந்த விவசாயி ஸ்டாலின் என்பவரின் பெயரில் பெற்ற கடன் தொகையை வங்கிக்கு திருப்பி கொடுத்து விடுவதாக ராம் வி தியாகராஜன் உறுதி அளித்து எழுதிக் கொடுத்தார். இதனால் சமரசம் ஏற்பட்டதையடுத்து ராம் வி தியாகராஜனை காவல்துறையினர் விடுவித்தனர். இவர், 1500 கரும்பு விவசாயிகளுக்கும் தெரிந்தே வங்கி அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் விவசாயிகள் பெயரில் தலா 3 லட்சம் மற்றும் 15 லட்சம் வீதம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகின்றது.

  வழக்கமாக வங்கிகள் கடன் பெறுபவரின் கணக்கில்தான் பணம் செலுத்தும். ஆனால் ராம் வி தியாகராஜனின் நிறுவனத்திற்கு எப்படி விவசாயிகள் கடன் பணம் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

  இந்நிலையில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி என அரசு அறிவித்தால் தான் வாங்கியுள்ள ஒட்டுமொத்த கடன்களும் தள்ளுபடி ஆகிவிடும், வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வேண்டியது இல்லை என்று நினைத்துக் கொண்டு, ராம் வி தியாகராஜன் இந்தக் கடனைப் பெற்றதாகக் கூறப் படுகின்றது.

  குறிப்பாக விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதியில் உள்ள எஸ்பிஐ மற்றும் கார்ப்பரேசன் வங்கி அதிகாரிகளின் ஆலோசனைபடி விவசாயிகள் பெயரில் கடன் பெற்ற 100 கோடி ரூபாயையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை எனக் கொடுத்து சரிகட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  இருப்பினும் தற்போது வரை வங்கியில் பெற்ற கடனை ராம் வி தியாகராஜன் திருப்பிச் செலுத்தாத நிலையில், கையெழுத்திட்ட விவசாயிகளைத் தேடி, ஜப்தி நடவடிக்கை உள்ளிட்ட கடன் நோட்டீஸ்களை வங்கி நிர்வாகம் அனுப்பி வருகின்றன. அதே நேரத்தில் ராம் வி தியாகராஜன் மீது புகார் அளித்த விவசாயிகள் தற்போது ஒவ்வொருவராக பின் வாங்கி வருவதால், வங்கியில் பெற்ற கடனுக்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளே முழு பொறுப்பாளி ஆகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

  அதாவது இந்த விவகாரத்தில், விவசாயியின் கடனை முதலாளி ஏன் வாங்கினார்?

  விவசாயிக்கு தெரிந்துதான் வாங்கியிருக்கிறார்! ஏன் என்றால் கையெழுத்து போட்டு வட்டி கட்டாமல் பல நோட்டிஸ் விட்ட பிறகே ஜப்தி நோட்டிஸ் வரும். அடுத்து கடன் வாங்கியவர் பெயரில் உள்ள வங்கிக்கு பணம் அனுப்பாமல் முதலாளி ராம்.வி.தியாகராஜன் வங்கிக்கு எப்படி வங்கிகள் பணத்தை அனுப்புகின்றன?

  இது ஒரு விவசாயியிடம் மட்டும் நடக்கவில்லை. சுமார் 1500 விவசாயிகளிடம் நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள். எனவே இது ஒரு கூட்டு களவாணித்தனம் என்றே தெரிகிறது. அத்தனை விவசாயிகளும் இந்தக் கொள்ளையில் பங்குபெறா விட்டாலும், பெரும்பாலானோர் பங்கு கொண்டதாகவே தெரிகிறது.

  விவசாயிகள் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் போதே ஒரு தொகையுடன் போட்டு விடுகின்றனர். பின்னர் வங்கிகளும் முதலாளியும் மற்ற வேலையைப் பார்த்து கடனை எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் விவசாயக் கடன் தள்ளுபடி வரும்போது இந்தக் கடனையெல்லாம் வாராக் கடனாகக் காட்டி அந்த வங்கி அரசு மான்யத்தைக் கொண்டு சீர் செய்து விடுகிறது.

  இப்போது, எல்லோருக்கும் பணம் கிடைக்கிறது. யாரும் கடன் திரும்பக் கட்ட வேண்டியதில்லை.

  அண்மையில் வந்த பண பரிமாற்ற மாற்றங்களில் ஒன்றான வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு மற்றும் கடன் தள்ளுபடி மான்யங்கள் நேரடியாக விவசாயிகளின் கணக்குக்கே அனுப்புதல் போன்ற பாஜக.,வின் செயல்பாடுகள் இந்தக் கூட்டுக் கொள்ளைக்கு நடுவில் ஆப்பு வைத்துள்ளது.

  நேரடியாக மானியத்தை விவசாயிக்குக் கொடுத்து விட்டால் நடுவில் இருப்பவர்களும் வங்கி அதிகாரிகளும் கொள்ளை அடிக்க வழியில்லாமல் போகும். இந்த விவகாரத்தில் தோண்ட தோண்ட நிறைய பூதங்கள் கிளம்பும் என்பதால், இது போன்ற பொருளாதாரக் குற்றங்களில் உடனே சிபிஐ விசாரணை வைத்து ஆணி வேர் முதற்கொண்டு அலச வேண்டும். இல்லாவிட்டால் காவல் துறையினர் ஏதோ போலி வாக்குறுதிகளை நம்பி கேஸை முடித்துக் கொண்டு மேலும் சில லஞ்ச லாவண்யங்களுக்கு இது வழிவகுக்கும்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,481FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-