Home இந்தியா வறுமைக்கு எதிரான போர்..! அனைவருக்குமான நல்லாட்சி: மோடி உறுதி!

வறுமைக்கு எதிரான போர்..! அனைவருக்குமான நல்லாட்சி: மோடி உறுதி!

மக்களவைத் தேர்தலில் பாஜக., பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

அதற்கு முன்னர், இன்று அவர் தனக்கு இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததற்காக பாஜக., தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாஜக., தலைமையகத்துக்கு வந்தார். பாஜக., தலைமையகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள், மலர் தூவி பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மோடியுடன் பாஜக., தலைவர் அமித் ஷா உடன் வந்தார். அங்கே போடப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில், ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் இருந்தனர். இந்நிலையில் அந்தக் கூட்டத்தில், தொண்டர்கள் மத்தியில் பேசினார் கட்சித் தலைவர் அமித் ஷா.

அவர் உரையாற்றிய போது, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது பாஜக. 11 கோடி தொண்டர்களின் உழைப்பால் விளைந்த வெற்றி இது. 17 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் மேல் வெற்றி பெற்றுள்ளோம். வரலாற்று சாதனை வெற்றி!

எதிர்க் கட்சிகளின் வாரிசு அரசியலுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர். 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி கூட இல்லை. பிரதமர் மோடியால் பெருமை கொள்கிறோம்.

உ.பி.யில் என்ன ஆகும் என்று கேட்டார்கள். அந்த எண்ணத்தை தவிடுபொடி ஆக்கியுள்ளோம். வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்வார்கள் என்றார்கள். அது உண்மையல்ல என நிரூபித்துள்ளோம். மேற்கு வங்கத்திலும் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியை மேற்கு வங்கத்தில் நடத்தப் பட்ட வன்முறையில் உயிர் இழந்த தொண்டர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!

இந்த வெற்றியானது, பிரதமர் மோடி மீது மக்கள் கொண்டுள்ள அன்பால் கிடைத் துள்ளது.. என்று பேசினார் அமித் ஷா.

அதன் பின்னர் பேச வந்தார் பிரதமர் மோடி. தொண்டர்களின் உற்சாக கரகோஷத்துக்கு இடையிலும் வாழ்த்து ஒலிகளுக்கு மத்தியிலும் தனது பேச்சைத் தொடங்கிய மோடி, பாஜக.,விற்கு கிடைத்த வெற்றி இந்தியாவுக்கானது.மோடிக்கானது அல்ல.

அனைவரையும் அரவணைத்துச் செல்வேன். எனக்காக எதுவும் செய்துகொள்ள மாட்டேன். தேசத்துக்கு ஒவ்வொரு நிமிடத்தையும் அர்ப்பணித்துக் கொண்டேன்

கடின உழைப்பிற்காக அமித்ஷாவுக்கு பாராட்டுகள். பாஜக., தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி. 130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்து
கொள்கிறேன்

2019 தேர்தல் முடிவு புதிய இந்தியாவுக்கானது. புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் வேண்டுகோளுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது.

ஜனநாயகத்தில் தேர்தல் மிகப்பெரிய திருவிழா..உலக நாடுகள் இந்தியாவில் நடந்த ஜனநாயகத்தை உற்று கவனித்தன. இந்தத் தேர்தலில் மக்கள் அதிகளவு வாக்களித்தனர். கடும் வெயிலிலும் மக்கள் வாக்களித்தனர்.

சிறப்பாக தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும், பாதுகாப்பு படையினருக்கும்
நன்றி.

1984ல் 2 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். இப்போது தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளோம். பாஜக.,வுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி கிடைத்துள்ளது. எங்களை தேர்வு செய்ய நாடு ஒன்றுபட்டுள்ளது.

தேர்தலின் போது உயிர்நீத்த மக்களை மதிக்கிறேன். உலகத்திற்கு ஓர் உதாரணத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்தத் தேர்தலில் நாடு வென்றுள்ளது. நாட்டு மக்கள் வெற்றியை பெற்றுள்ளனர். நாங்களும், எங்கள் கூட்டணியினரும் வெற்றியை மக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.

பாஜக, ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும். கூட்டாட்சி தத்துவம், அரசியல் சாசனத்தில் பாஜக.,விற்கு முழு நம்பிக்கை
உள்ளது. அரசியல் சாசனமே உயர்ந்தது. வரி கட்டுவோர் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. விவசாயிகளுக்கு கிடத்த வெற்றி.

பாஜக.,விற்கு கிடைத்த வெற்றி நேர்மைக்கானது. மோடிக்கானது அல்ல. இந்தத் தேர்தலில்தான் ஊழல், விலைவாசி உயர்வு போன்றவை விவாதப் பொருளாக இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக மதச்சார்பின்மை விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. போலி மதசார்பற்றவர்கள் நாட்டை தவறாக வழிநடத்தினர்.

அவர்களின் நிலை தற்போது தெளிவாகியுள்ளது. இந்தியாவிற்கு அதிகாரம் அளிக்கச் செய்வது உங்களின் இலக்கு.

இந்தியாவில் இரண்டு ஜாதி மட்டுமே உள்ளது. ஒன்று ஏழை மற்றொன்று, வறுமை யிலிருந்து ஏழைகள் வெளியே வர உதவுபவர்கள்.

தேசம் மீண்டும் மீண்டும் ஒரு முறை நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது நாட்டின் நலனுக்காக, அனைவரையும் அரவணைத்து அழைத்துச் செல்ல வேண்டும். வலிமையான எதிரிகளையும் கூட உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்வேன். எப்போதும் எனக்காக எதுவும் செய்ய மாட்டேன். யார் மீதும் எனக்கு தவறான எண்ணம் கிடையாது. நானும் தவறு செய்திருக்கலாம். அதற்காக யாரையும் நான் பழி வாங்கியதில்லை. மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும்போது, அரசின் கடமையும் அதிகரிக்கிறது.

உங்கள் அன்பால் என்னை ஆசீர்வதித்துள்ளீர்கள். ஒவ்வொரு நிமிடமும் என்னை தேசத்திற்கு அர்ப்பணித்து கொண்டுள்ளேன்.. என்று பேசினார் மோடி.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version