இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த தமிழகமே திரண்டெழுந்த தன்னெழுச்சி போராட்டத்தின் எதிரொலியாக, ஜல்லிக்கட்டுக்கு நடத்துவதற்கு மத்திய அரசின் உதவியோடு, தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள் அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன் அடிப்படையில் நாளை தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. முதலமைச்சர் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடை நீக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்வை நாளை முதல்வர் தொடங்கி வைக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், ஒரு சில விஷயங்களை எல்லோரும் சிந்தித்து பார்ப்பது நன்மை பயப்பதாக இருக்கும். குறிப்பாக போராட்டக் களத்தில் இருக்கும் இளைஞர்கள் அதிகமாகவே சிந்தித்து செயல்பட வேண்டியிருக்கிறது. காரணம், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கிறது. அதாவது தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்திலோ, இரு வாரத்திலோ வரும் நிலையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசோ, மாநில அரசோ அவசரச் சட்டம்தான் கொண்டுவர முடியும். அவசரச் சட்டம் போல் 24 மணி நேரத்திற்குள் மத்திய அரசோ, மாநில அரசோ நிரந்தரச் சட்டத்தை தந்துவிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொங்கலுக்கு முன்பு போராட்டக் களத்திற்கு வந்தபோது என்ன கூறினார்கள் எல்லோரும்? இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதற்கு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அதற்கான சாத்தியக் கூறுகள் இரு நாட்களாக தென்பட்ட நிலையில், நேற்றிலிருந்து போராட்டத்தின் நோக்கத்தை மாற்றிவிட்டார்கள். இப்போது என்ன, நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று… அது சாத்தியமா என்றால் இப்போதைக்கு அல்ல. தீர்ப்பு வரவிருக்கிறது. அது எப்படியிருக்குமோ என்று தெரியாது. எனவே நீதிமன்ற நடைமுறைகள் முடியும் வரையில் அறவழியில் போராட்டத்தை தொடர்கிறீர்கள் என்றால் சரிதான்.
அவசரச் சட்டமே, நிரந்தர சட்டம்தான் என்றும், 6 மாதத்திற்குள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு முறைக்க இரு முறை உறுதியாக தெரிவித்திருக்கிறார். எனவே, போராட்டக் களத்தில் இருப்பவர்களின் சக்தி வீணாக கூடாது. அதனால், சிந்தித்து செயல்படுங்கள். நடைமுறை சிக்கல்களை புரிந்து கொள்ளுங்கள். உணர்ச்சிவயத்திற்கு ஆட்பட்டு, வேறு பாதையை நோக்கி பயணிக்காதீர்கள்.