
தேனி, சித்பவானந்த ஆசிரமத்தின் நிறுவனர் பூஜ்ய ஓங்காராநந்த அவர்கள் ”திருக்குறள் தியானம்” என்ற ஒரு நூலை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதில் அறத்துப் பால், பொருட் பால் ஆகிய இரண்டிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 365 குறள்கள் பொருளுடன் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு திருக்குறளுக்கும் கீழே, அதற்கு இணையான, ஒத்த பொருளுடைய ஸம்ஸ்க்ருத சுலோகங்கள் அல்லது வேத மந்திரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த மந்திரங்கள், சுலோகங்கள் அனைத்தும் திருவள்ளுவர் காலத்துக்கு முற்பட்ட வேதங்கள், இதிஹாசங்கள், புராணங்கள், ஸ்ம்ருதிகள், இதர நீதி சாஸ்திரங்கள் முதலான ஸம்ஸ்க்ருத நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை.
ஒவ்வொரு சுலோகம் அல்லது மந்திரம் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது, என்ன அத்தியாயம் (அல்லது மண்டலம்), சுலோக (அல்லது மந்திர) வரிசை எண் முதலிய விவரங் களும் அந்தந்த சுலோகங்களுடன் சேர்த்தே தரப்பட்டுள்ளன.
எனவே, இந்த சுலோகங்கள், மந்திரங்கள் எந்த நூலில், எந்த இடத்தில் உள்ளன என்பதை யார் வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அந்தந்த நூல்களில் இந்த சுலோகங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் எளிதாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு திருக்குறளின் பொருளும், அதற்கு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள ஸம்ஸ்கிருத சுலோகங்களின் பொருளும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே யாரும் புரிந்து கொள்ளலாம்.
இந்த நூலைப் பார்க்கும்போது, திருக்குறள் முழுக்க முழுக்க சனாதன தர்மம் சார்ந்த அறங்களை வலியுறுத்தும் சாஸ்திர நூல் என்பதை யாவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இதற்குப் பெரிய அறிவுத்திறன் தேவையில்லை. எனவே, ஸ்டாலின், ஷாநவாஸ் போன்றவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடியும்.
பூஜ்ய ஸ்வாமிஜி திருக்குறள் பற்றி என்னிடம் கூறிய இரண்டு முக்கிய விஷயங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

விஷயம் 1 – திருக்குறளை பொதுமறை என்று சொல்வது ஏன்?
சனாதன தர்மத்தைக் குறிப்பதற்கு நாம் தற்போது ஹிந்து என்ற பதத்தையே அதிகம் உபயோகிக்கிறோம். உண்மையில் ஹிந்து என்பது ஒரு மதம்- அதாவது, வழிபடு முறை – அல்ல. சைவம், வைஷ்ணவம் முதலியவைதான் மதங்கள். இவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு இறைவனை பரப்பிரம்மமாகக் கொள்கின்றன. உதாரணம், வைஷ்ணவம் விஷ்ணுவை மட்டுமே பரம்பொருளாகக் காட்டுகிறது.
இவ்வாறு நிறைய மதங்கள் இருந்தாலும், வேதங்களும், ஸ்ம்ருதிகளும், இதர தர்ம சாஸ்திர நூல்களும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை.
திருவள்ளுவர் இத்தகைய பொதுவான நூல்களில் உள்ள கருத்துகளை மட்டுமே தொகுத்துள்ளார். எனவே, அது சனாதன தர்மத்தில் கிளைத்த அனைத்து மதங்களுக்கும் பொதுவான நூலாகும். இதனால்தான் திருக்குறள் பொதுமறை என்று கொள்ளப்படுகிறது.
திருக்குறளின் இறை வணக்கப் பகுதியைப் பார்த்தாலே போதும், இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, ஆதிபகவன், அறவாழி அந்தணன், வாலறிவன், எண்குணத்தான் – இவை அனைத்துமே பரம்பொருளுக்கு வேதங்கள் சூட்டியுள்ள பெயர்கள். இவை அனைத்து மதங்களின் அனைத்துக் கடவுளர்க்கும் பொருந்தும்.
மனித வாழ்வின் நோக்கம் இறைவனை அடைவதே. எனவே, இறைவன் யார், அவனது இயல்புகள் என்ன, அவனை எவ்வாறு அறிய வேண்டும், வணங்க வேண்டும், அவனை வணங்குவதால் நமக்கு என்ன பலன் ஆகிய விஷயங்களை வேதங்கள் விலாவாரியாக எடுத்துச் சொல்கின்றன.
இந்தக் கருத்துகள் அனைத்தின் சாராம்சத்தையும் பத்தே பத்துக் குறள்களில் மிக நுணுக்கமாகத் தந்திருப்பதே திருவள்ளுவரின் சிறப்பு.
விஷயம் 2 – நமது பாரம்பரிய கல்வி முறை
பூஜ்ய ஸ்வாமிஜி அவர்கள் என்னிடம், அந்தணன் என்போன் அறவோன்… என்ற குறளைக் கூறி இதில் வரும் அந்தணன் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று கேட்டார். நான், பிராமணன் என்று பதில் சொன்னேன்.
உடனே அவர், அப்படியானால் திருவள்ளுவர் அந்தக் குறளை ஏன் துறவு என்ற அதிகாரத்தில் வைத்திருக் கிறார், துறவு என்பது பிராமணர்களுக்கு மட்டும்தானா என்று கேட்டார். பின்னர் அவரே உரிய விளக்கத்தையயும் தந்தார்.
அந்தணன் என்ற சொல் இங்கே அந்தத்தை அணவுபவன் –அதாவது, அந்தப் பொருளாகிய இறைத் தத்துவத்தைத் தழுவியவன், அதாவது, வேதாந்தி – என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (அந்தம் = இறுதி. அதாவது, வேதத்தின் இறுதிப் பகுதியாக உபநிஷதங்கள்)
தத்துவ விசாரணையில் ஈடுபட்டுள்ளவன், அல்லது, முமுக்ஷு என்பது இந்த வார்த்தைக்கான விளக்கம்.
இந்த முமுக்ஷுத்வம்தான் சன்யாசத்துக்கான அடிப்படைத் தகுதி. எனவேதான் இந்தக் குறள் துறவறப் பகுதியில் உள்ளது.
இதே அந்தணன் என்ற சொல் இறை வணக்கப் பகுதியில் அந்தப் பொருளாகிய இறைவனைக் குறிக்கிறது. (இங்கே அந்தம் என்பது வேதாந்தம் அல்ல, மாறாக தர்மப்படி வாழப்படும் வாழ்க்கையின் இறுதி இலக்காகத் திகழும் இறைத் தத்துவத்தைக் குறிக்கும்.)
இவ்வாறு ஒரு சொல் ஓரிடத்தில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நமது பெரியவர்கள் மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டு விளக்க உரைகளை எழுதி வைத்தார்கள். இந்த அடிப்படையிலேயே சாஸ்திர நூல்கள் அனைத்தும் ஆசிரியர்களால் மாணவர்களுக்குச் சொல்லித்தரப்பட்டு வந்தன.
எனவே, நமது மரபில் பெரியவர்கள் என்ன விளக்கம் தருகிறார்களோ அந்த அடிப்படையிலேயே நாம் ஒவ்வொரு குறளுக்கும் உரிய பொருளை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுதான் நாம் அந்த நூலை ஐயம் திரிபறக் கற்பதற்கான வழி.
எதேச்சையாக, திமுக தலைவர் எழுதியுள்ள திருக்குறள் உரை கண்ணில் பட்டது. அதில் ஊழ் என்ற சொல்லுக்கு பெருவெள்ளம், பூகம்பம் முதலிய இயற்கைச் சீற்றங்கள் என்று பொருள் தரப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
இவர் நாஸ்திகர், பகுத்தறிவைக் குத்தகைக்கு எடுத்தவர். எனவே, ஊழ் என்ற கருத்தை இவரால் ஏற்க முடியாமல் போகலாம். அதற்காக அந்தச் சொல்லின் பொருளே மாறிவிடுமா? உண்மையில் இயற்கைச் சீற்றம் என்ற பொருளில் ஊழ் என்ற சொல்லை நமது முன்னோர்கள் யாராவது பயன்படுத்தி இருக்கிறார்களா என்று பூஜ்ய ஸ்வாமிஜியிடம் கேட்டேன். அதற்கு அவர்,
”வேறு ஒன்றுமில்லையப்பா, இது திருவள்ளுவரின் ஊழ்வினை” என்று சிரித்துக் கொண்டே குறிப்பிட்டார்.
ஆம், திருக்குறளை மலம் என்று சொன்ன இழிபிறவி ஈவேராவைத் தந்தை என்றும் பெரியார் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் திராவிட அடிப் பொடிகள், தமிழே சரியாக வாசிக்கத் தெரியாத தற்குறிகள், பள்ளிக் கூடத்தில் மனப்பாடம் பண்ண வேண்டிய குறள்களைக் கூட ஒழுங்காகப் படிக்காமல் உளறிக் கொட்டி வருபவர்கள் – உண்மையை யாராவது எடுத்துக் காட்டினால் ஆபாச வசை மொழிகளாலும் வன்முறையாலும் அவர்களைக் காயப் படுத்தும் ரவுடிகள் – இத்தகைய மனிதர்களின் கையில் அகப் பட்டுக் கொண்டு சித்திரவதைப்படுவது திருவள்ளுவரின் ஊழ்வினை அல்லாமல் வேறு என்ன?
ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஒழுக்கம் விழுப்பம் தரலான் என்ற திருக்குறளுக்குத் திராவிடக் கட்சியினர் விளக்கம் தருவதை விடத் திருவள்ளுவருக்குச் செய்யப்படும் அவமரியாதை வேறு ஏதாவது இருக்க முடியுமா?
வள்ளுவர்… – பாவம், பரிதாபத்துக்குரிய மனிதர்.!
கட்டுரை – வேதா டி. ஸ்ரீதரன்