
தென்காசியைத் தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக் கொண்ட முதல் பாண்டிய மன்னரின் பெயர் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்கு முன் தென்காசிக்கு 16 பெயர்கள் இருந்ததாகத் தெரியவருகிறது. 1. சச்சிதானந்தபுரம் 2. முத்துத்தாண்டவ நல்லூர் 3. ஆனந்த கூத்தனூர் 4. சைவ மூதூர் 5. தென் புலியூர் 6. குயின்குடி 7. சித்தர்வாசம் 8. செண்பகப்பொழில் 9. சிவமணவூர் 10. சத்தமாதரூர் 11. சித்திரமூலத்தானம் 12. மயிலைக்குடி 13. பலாலிங்கப்பாடி 14. வசந்தக்குடி 15. கோசிகை 16. சித்தர்புரி.
நாயக்கமன்னர்கள் 14&ஆம் நூற்றாண்டுக்கு பிறகு மதுரையை ஆண்டிருந்தாலும் அவ்வப்போது சில பாண்டியர்கள் இவர்களை எதிர்த்து வந்தனர்.
சில நேரங்களில் மதுரையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்களில் முக்கியமானவர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் ஆவார். இவர் மதுரையைச் சுற்றி 32 கோட்டைகளைக் கட்டினார். இவர் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் மகன் ஆவார்.
செண்பகப் பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த காடுகள் என்ற பொருள். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும் கோட்டையில் இருந்து எறும்புகள் ஊர்ந்து செல்லும் பாதையைத் தொடர்ந்தால் ஒரு லிங்கத்தைக் காணலாம்.
அங்கே கோயில் கட்டுமாறு சிவபெருமான் கனவில் பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சொன்னதாக ஒரு கதை உண்டு. அதே போல் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கே உள்ள காசிக்குச் செல்லும்போது திரும்பி வராமல் இறந்து விடுகின்றனர்.
அக்காலங்களில் சராசரி வயது என்பதே ஒருவருக்கு 45 தான் இருக்கும். எல்லா மக்களும் சிவபெருமானின் அருளைப் பெற தெற்கே காசி நகரத்திற்கு இணையான ஒரு நகரத்தைக் கட்ட வேண்டும் என்று சிவபெருமான் ஆணையிட்டார். இதன் மூலம் காசிக்கு இணையாக தென்காசி அமைந்தது என்பது பாண்டிய மன்னர்களின் நம்பிக்கை.
பராக்கிரம பாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்திற்கு பெரும் கோயில் எழுப்பினார். இவ்விவரங்கள் பாண்டிய குலோதயம் என்னும் நூலில் மண்டலக் கவிராயரால் எழுதப்பட்ட பாண்டிய வரலாற்று நூலில் உள்ளது.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனை அடுத்து வந்த பாண்டியர் அனைவரும் தென்காசி பாண்டியர் எனப்படுவார்கள். பாண்டியர்களில் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும். தென்காசி பெரிய கோயிலில் உள்ள சிவந்தபாதவூருடைய ஆதின மடத்தில் பாண்டியர்கள் முடிசூட்டிக் கொண்டார்கள்.
தென்காசி பிரம்மதேசம், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, பத்தமடை, கடையம் ஆகிய ஊர்களில் தென்காசிப் பாண்டியர்களைப் பற்றிய கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் காணப்படுகின்றன.
கொல்லம் கொண்டான் என்பவனே தென்காசிப் பாண்டியர்களில் கடைசிப் பாண்டிய மன்னன் ஆவான். இவன் செங்கோட்டைக்கு அருகில் உள்ள கொல்லத்தை வென்றதால் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன், மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் அழகன் பெருமான் பராக்கிரம பாண்டியன் குலசேகர பாண்டியன், சடையவர்மன், சீவல்லப பாண்டியன், பராக்கிரம குலசேகரன், நெல்வேலி மாறன், சடையவர்மன் அதிவீர ராம பாண்டியன், வரதுங்கப் பாண்டியன், வரகுண ராம பாண்டியன், கொல்லன் கொண்டான் பாண்டியன்.
திருக்குற்றால நாதர் கோயில், தென்காசி கோயில், குலசேகரநாதக் கோயில் போன்றவை தென்காசிப் பாண்டியர்களால் பெரிதும் பேணப்பட்டு வந்தது. கட்டியம் முடிக்கப்பட்டது. குலசேகர நாதர் கோயில் சடையவர்மன் அதிவீர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது.
தென்காசிப் பாண்டியர்கள் இலக்கியங்களையும் வளர்த்தார்கள். 1560, 1600 வரகுணராமன் வாயு சங்கீதை, லிங்கபுராணம் முதலியவை அகோர சிவம் சுவாமி தேவர் என்பவரால் எழுதப்பட்டது.
இவரைக் குலசேகர பாண்டியன் என்றும் சிலர் கூறுவர். 1588 & 1613 கருவை வரதுங்க ராமன் பிரம்மோத்திர காண்டம், கருவை அந்தாதிகள், கொக்கோகம் வேம்பத்தூர் ஈசாண முனிவரால் படைக்கப்பட்டது. 1610 அதிவீரராம நைடதம் காசிக் கண்டம், கூர்ம புராணம், வெற்றி வேட்கை முதலியவை சுவாமி தேவர் என்பவரால் இயற்றப்பட்டது என்று சொல்வார்கள்.
தென்காசிக்கு அருகில் திருமலைபுரம் மலையில் குகைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் பாண்டியர் காலத்து வண்ண ஓவியங்கள் உள்ளன. அதே போல் குற்றாலத்தில் சித்திர சபையும் உள்ளது. இதற்கான காலக்கட்டம் அறியமுடியவில்லை.
தென்காசிப் பாண்டியர்கள் சைவம், வைணவம் என்ற இரண்டையும் சம நோக்குடனே பார்த்தார்கள். இவர்களிடம் அபரீதமான வீரம் இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களைச் சந்திக்கும்பொழுது மிகுந்த அன்பு செலுத்தினார்கள்.
தென்காசிப் பாண்டியர்கள் யாரையும் குறைவாக மதித்ததில்லை. அன்பு கொண்டே எல்லோரையும் அழைத்தார்கள். வரகுண ராம குலசேகரன் வேதமுறைப்படி வேள்வி செய்திருக்கிறார். தென்காசிப் பாண்டியர்கள் நாணயமும் வெளியிட்டு இருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.
இப்பொழுது தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஒரு மாவட்டம் தமிழகத்தில் உருவாகி உள்ளது. இந்த தென்காசி மாவட்டத்தில்தான் என்னுடைய சொந்த ஊரான கீழாம்பூர் கிராமம் இடம்பெறுகிறது. திருநெல்வேலிக்கும் தென்காசிக்கும் எல்லையாக என்னுடைய கிராமம் அமைகிறது.
திருநெல்வேலியில் இருந்து தென்காசி தூத்துக்குடி பிரிந்தாலும் நிர்வாக ரீதியாக மாவட்டம் பிரிக்கப்பட்டு இருக்கிறதே தவிர மக்கள் மனதில் என்றுமே தாங்கள் ஒரு நெல்லைக்காரர் என்கிற எண்ணமே மேல் எழும்.
கலைமகள் டிசம்பர் மாதம் 2019 இக்கட்டுரையை காணலாம்.
- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
(ஆசிரியர், கலைமகள் / மஞ்சரி மாத இதழ்)