September 28, 2021, 12:15 pm
More

  ARTICLE - SECTIONS

  இன்னும் ஆறே மாதங்கள்தான்…

  மக்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்பது சசிகலாவுக்கு தெரியும். 32 ஆண்டுகள் ஜெயலலிதாவுடம் இருந்தவருக்கு இது நிச்சயமாகத் தெரியும். அதனால்தான் அவர் பொதுச்செயலர் பதவியோடு நின்றார். ஜெயலலிதா இறந்தவுடனே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கலாம்.. வழக்குத் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது என்றால், ஜெயலலிதாவின் மீதும் இதே வழக்குதானே.

  திடீரென்று முதல்வராகும் முடிவுக்குக் காரணம், பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிடம் காட்சிய அதே விசுவாசத்தை சசிகலாவிடம் காட்டவில்லை. கடந்த காலங்களில் இடைக்கால முதல்வராக இருந்தபோது காணப்படாத புதுவழக்கமாக அவர் மத்திய அரசுடன் நெருங்கத் தொடங்கினார். சிக்கல் அங்கேதான் தொடங்கியது.

  அதிகாரத்தின் மூலம்தான் தன் வழக்குகளின் தீவிரத்தைக் குறைக்க வேண்டும், சொத்துகளைப் பாதுகாத்தாக வேண்டும் என்றில்லை.. அவருக்கு அனைத்து வழிகளும் தெரியும். ஆனால் பன்னீர்செல்வம் தன்னைவிட்டு விலகிச்செல்வது கட்சியின் மற்ற அமைச்சர்கள், மாவட்டத் தலைவர்களுக்கும் தொற்றினால், கட்சியை நடத்த முடியாது. ஆகவேதான் தானே முதல்வராவது என்று முடிவு செய்தார். மக்களிடம் எத்தகைய வெறுப்பு இருந்தாலும் பரவாயில்லை என்று இறங்கிவிட்டார்.

  இந்த ஆட்டத்தில் முதல்வர் பதவி ஆயுள் ஆறு மாதஙகள் மட்டுமே என்று இருவருக்குமே தெரியும் மத்திய அரசுக்கும் தெரியும். ஆளுநருக்கும் தெரியும்.

  தில்லி காய்நகர்த்தலைத் தெரிந்துகொண்டுதான், முந்தியது டாக்டர் பீலே பேட்டி. அதாவது ‘ஜெயல்லிதா மரணத்தில் விசாரணைக் கமிஷன்’, ‘நானே அம்மாவை பார்க்கவில்லை’ என்பதெல்லாம் பேசப்படும் முன்பே அந்த பேட்டி அவசரமாக நடத்தப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம்.

  சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தாலும் ஆறு மாதங்கள்தான் பதவி வகிக்க முடியும். அவர் தேர்தலை சந்தித்தாக வேண்டும். தற்போதுள்ள வெறுப்பு அலையில் தேர்தலில் நிச்சயமாக தோல்வி அடைவார். ஆனால் தமிழகத்தில் மேலவையைக் கொண்டு வந்து, அவர் மேலவை உறுப்பினராக மாறிவிட முடியும் என்று ஒரு ஊடகச்சாமி அருள்வாக்கு தந்திருக்கிறது என்கிறார்கள். அத்தகைய வாய்ப்பு உருவாக திமுக விடாது. மற்ற எதிர்க்கட்சிகளும் எதிர்க்கும். நீதிமன்றத்தின் வாயிலாக 6 மாதங்களுக்கும் மேலாக இழுத்தடித்து, சசிகலா தேர்லைச் சந்திக்கும்படி செய்யும்.

  அப்படியானால், சசிகலா தோற்ற பிறகு, அனைத்து எம்எல்ஏ-க்களும் மீண்டும் பன்னீர்செல்வத்தை ஆதரித்தால், அடுத்த நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்த முடியுமே என்று கேட்கலாம். அல்லது ஆறுமாதங்களில் தேர்தல் நடந்தால் அதில் பன்னீர்செல்வத்தின் அணி வெற்றி பெறாதா என்றும் கேட்கலாம்.

  பன்னீர்செல்வம் எளிமையானவர், தூய அரசியலுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறார் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவரிடம் மனத்துணிவு இல்லை. பதவி விலகல் கடிதம் மற்றும் சசிகலாவை முதல்வராக ஏற்கும் கடிதம் எல்லாவற்றிலும் போட்டுவிட்டு, “கட்டாயப்படுத்தினார்கள் கையழுத்துப்போட்டேன்” என்று சொல்வது அவரது ஆளுமையைக் குறைத்துவிடுகிறது. கட்டாயப்படுத்தினால் பணிந்துபோவார் என்றால் அவர் பொதுவாழ்வில் நீடிக்க முடியாது.

  காந்தி எந்த கட்டாயத்துக்காகவும், உலகம் முழுதும் எதிர்த்தாலும், ஆதரித்தாலும்,, தனக்கு சரி என்று உள்மனதில் படவில்லையென்றால் ஏற்கமாட்டார். அந்த மனத்துணிவு ஒரு தலைவனுக்குத் தேவை. அந்த உறுதி உள்ளவன் பின்னால்தான் உலகம் கண்ணை மூடிக்கொண்டு வரும். வண்ணநிலவன் நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்லும்,… “இரக்கம்தான் என்னைச் சீரழிக்கிறது” என்று. பன்னீர்செல்வம் மட்டுமல்ல, அரசியலில் எடுபடாமல் போன எல்லா எளிய, நேர்மையாளர்களின் குணக்கேடும் அதுதான்.

  ஆறுமாதங்களில் தமிழகத்தில் இரண்டு அரசியல் மாற்றங்கள் நிகழும்.
  1 அதிமுக இருக்கும். ஆனால் வெற்றிபெறாது
  2 திமுக அல்லது காங்கிரஸ் அணி ஆட்சியைப் பிடிக்கும். பாஜக இருக்கும் – செல்வாக்கையும் தமிழகத்தில் இழந்து நிற்கும்.

  • கட்டுரை: ஆர். சோமசுந்தரம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,481FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-