Home கட்டுரைகள் தாவரத்துக்கும் உயிருண்டு… எனில்… அதை உண்டால் அசைவமா?!

தாவரத்துக்கும் உயிருண்டு… எனில்… அதை உண்டால் அசைவமா?!

தாவரத்துக்கும் உயிருண்டு… எனில்… அதை சாப்பிட்டால் அசைவமா?! வாரியார் சொன்ன பதில்!

புலால் உண்ணாமை ஓர் உயர்ந்த அறமாகச் சொல்லப் படுகிறது. புலால் மறுப்புக்கு அடிப்படையாக அமைவது உயிர் நேயம்.

மன்னன் பிம்பிசாரன் சபைக்குச் சென்று யாகத்தில் பலியிடவிருந்த ஆடுகளைப் பலியிடாமல் காப்பாற்றினார் புத்தர்.

மனிதர்கள் கடவுளின் வாயுள்ள பிள்ளைகள் என்றும் விலங்குகள் கடவுளின் வாயில்லாத பிள்ளைகள் என்றும், வாயில்லாத பிள்ளையை வாயுள்ள பிள்ளை வெட்டிக் கறிசமைத்தால் தந்தையான கடவுள் அதை எப்படி உண்பார் என்றும் புத்தர் வாதாடி பிம்பிசாரனின் மனத்தை மாற்றியதாக கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை `ஆசிய ஜோதி` என்ற கவிதை நூலில் எழுதுகிறார்.

தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பதற்கு மாற்றாக பூசணிக்காயை வெட்டிப் பலியிடலாம் என்ற வழக்கம் பின்னர் தோற்றுவிக்கப்பட்டது. அமாவாசையன்று பூசணிக்காயை வெட்டி திருஷ்டி கழிப்பதெல்லாம் உயிர்ப் பலிக்கு மாற்றாக வந்த ஏற்பாடுதான்.

`நான்கு கால் உயிர்களையும் இரண்டு கால் உயிர்களையும் தவிர்த்துவிட்டு ஒருகால் உயிரை மட்டும் உண்ணுங்களேன்` என்கிறது ஒரு வெளிதேசப் பழமொழி.

நான்கு கால் உயிர் என்பது விலங்கினம். இரண்டு கால் உயிர் என்பது பறவையினம். ஒருகால் உயிர் எது தெரியுமா? தாவரம் தான்! உலகில் மரம் செடி கொடி முதலிய எல்லாத் தாவரங்களும் ஒற்றைக் காலில்தான் நிற்கின்றன என்ற உண்மையைக் கண்டுணர்ந்து எழுந்த பழமொழி இது.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னவர் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ். விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதை, ஜகதீஷ் சந்திரபோஸின் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தார். அவரது நூல் வெளிவரவும் சகோதரி நிவேதிதைதான் உதவி புரிந்தார். நிவேதிதை மேல் ஜகதீஷ் சந்திர போஸுக்கு அளவற்ற மரியாதை இருந்தது.

நிவேதிதை காலமான பின்னர் ஜகதீஷ் சந்திரபோஸ் கொல்கத்தாவில் `போஸ் நிறுவனம்` என்ற ஆய்வுக் கூடத்தை நிறுவி, அதில் நிவேதிதையின் அஸ்தியை பக்தியுடன் கொண்டுவைத்தார். கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கையில் விளக்கை ஏந்தியவாறிருக்கும் நிவேதிதையின் புடைப்புச் சிற்பம் ஒன்றையும் அங்கு அமைத்தார்.

ஆண்டுகள் பல கடந்த பின்னர் ஒருநாள் மாலை. தமிழகத்தில் வாரியார் சுவாமிகள் வள்ளலார் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். புலால் உண்ணாமையை வள்ளலார் முக்கியமான அறமாக வலியுறுத்துகிறார் எனத் தம் சொற்பொழிவின் இடையே குறிப்பிட்டார் வாரியார்.

அப்போது, `தாவரங்களுக்கும் உயிர் உண்டு!` என்பது கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதால், தாவரங்களையும் சாப்பிடக் கூடாதுதானே?` என்று வாரியாரிடம் விதண்டாவாதமாகக் கேள்வி எழுப்பினார் ஓர் இளைஞர். அதற்கு நகைத்தவாறே பதில் சொன்னார் வாரியார்:

அவரைக்காயைப் பறித்தாலோ கீரையைக் கிள்ளினாலோ அந்தச் செடி மறுபடி வளர்கிறது, அதுபோல் ஆட்டின் கழுத்தை வெட்டினாலும் கோழியின் கழுத்தைத் திருகினாலும் அவை மறுபடி முளைத்தால் நீ அசைவம் சாப்பிடலாம்!

  • திருப்பூர் கிருஷ்ணன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version