Home கட்டுரைகள் தனித்துப் போகும் இந்திய இஸ்லாமியர்கள்: காரணம் என்ன?

தனித்துப் போகும் இந்திய இஸ்லாமியர்கள்: காரணம் என்ன?

தனித்துப் போய்க் கொண்டிருக்கும் இந்திய இஸ்லாமியர்கள்: ஒரு தமிழனின் பார்வையில்!

கட்டுரை: – ஆர். கோபிநாத்

நம்முடைய பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பல இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. முன்பெல்லாம் பலரின் வீடுகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் செல்வோம். அந்த நண்பர்கள் எங்களுடன் முழு நேரமும் சுற்றுவார்கள். கிரிக்கெட் விளையாடுவோம். பல மணி நேரங்கள் அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். இன்று மெல்ல அவர்களில் பலர் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விட்டார்கள். சிலர் வெறும் ஹலோ நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

என்னை விட வயது முதிர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் கூட என்னிடம் நல்ல உறவு கொண்டிருந்தார்கள். இன்று அவர்களே சிறிது தள்ளி தான் இருக்கிறார்கள்.

பொதுவாகவே இஸ்லாமியர்கள் ஹிந்துக்களிடம் இருந்து விலகி போக ஆரம்பித்து விட்டார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் இது நடக்கும் என்று நாம் கற்பனை கூட செய்திருக்க முடியாது.
என்னுடன் பள்ளியில் படித்த இஸ்லாமிய நண்பன் இன்று பிரான்சில் இருக்கிறான். அவன் குடும்பத்துடன். அவன் மனைவி காரைக்காலை சேர்ந்தவர். அதனால் பிரெஞ்சு குடியுரிமை பெற்று விட்டான். சென்ற மாதம் ஒரு விடுமுறைக்கு வந்திருந்தான். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது, ”என்னடா பிரான்சில் அங்கங்கே ஆப்பிரிக்காவின் முன்னாள் பிரெஞ்சு காலனிகளான அல்ஜீரியா, மொராக்கோ,துனிசியா போன்ற நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் வன்முறையிலும், குண்டு வைப்பது, துப்பாக்கியால் சுடுவது, பெட்ரோல் குண்டு வீசுவது, பெண்களை மானபங்கம் செய்வது போன்ற எல்லா அடிப்படைவாத தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகிறார்களே” என்றேன்.
பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான். ”அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் நாளை இஸ்லாமிய பெயர் தாங்கிய உனக்கும் பிரச்சனை ஏற்படும். பார்த்து ஜாக்கிரதையாக இரு” என்று கூறினேன்.

அதற்கு அவன், ”இதை எல்லாம் இஸ்லாமியர்கள் செய்யவில்லை. யூதர்கள் தான் செய்கிறார்கள். இங்கிலாந்திலும் செய்யப் பார்த்தார்கள். ஆனால் அங்கு முடியவில்லை. இன்று பிரிட்டன் இஸ்லாமிய நாடாக ஆகிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் பார், பிரான்சும் ஆகிவிடும்” என்று அலட்சியமாக கூறினான்.
பிரான்ஸ் இஸ்லாமிய நாடாகிவிடும் என்று அவன் சொன்னதில் வியப்பில்லை. நான் அதற்குள்ளும் செல்லவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளிலும் பின்பு இப்போது பிரான்சிலும் இருக்கும் அவன், அவ்வப்போது விடுமுறைக்கு 15 நாளோ ஒரு மாதமோ மட்டும் வரும்போது இங்கு பெரிதாக எவ்வித மதம் சார்ந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அவன், 4.5 லட்சம் மக்கள் மட்டுமே இருக்கும் ஒரு மிகச் சிறுபான்மை குழுவான பிரான்சு நாட்டு யூதர்களின் மேல் குற்றம் சாட்டுகிறான். இது அவன் தானாக பேசும் பேச்சல்ல. வாட்ஸப் முகநூல் போன்றவற்றில் வெகு சாதாரணமாக வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இது.

பெரும்பான்மை இஸ்லாமியர்களால் தங்கள் மேல் எவ்விதமான குற்றமும் இல்லை என்பதற்காக வைக்கப்படும் வாதம்.

அல்ஜீரியாவிலும் துனிசியாவிலும் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்காக, தான் என்றும் பார்த்திராத ஒரு இனக்குழுவின் மேல் ஒரு கடுமையான ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைப்பது – இதை எப்படி செய்ய முடிகிறது என்று தெரியவில்லை. அவர்களை ஏன் காக்க வேண்டும்? அவர்களுடன் என்ன உறவு மத ரீதியிலானதை தவிர?
இன்னொரு முஸ்லீம் நண்பர். என்னை விட வயதில் பெரியவர். அவரின் மகளுக்கு பொடுகு தொல்லை என்று என் நண்பரான ஒரு நாட்டு வைத்தியரிடம் மருந்து வாங்க வந்தார். நானும் அப்போது அங்கு இருந்தேன். அந்த பெண் மூன்றாவது படிக்கிறாள்.
என் நண்பர், ”என்ன பாப்பா தலைக்கெல்லாம் குளிப்பதில்லையா? அம்மா குளிப்பாட்டி விட மாட்டார்களா? வாரம் ஒரு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். இந்த எண்ணையை தேய்த்து குளி” என்று ஒரு பாட்டிலை கொடுத்தார்.

அதற்கு அந்தக் குழந்தை, ”தலைக்கெல்லாம் குளிக்கிறேன். நன்றாகத் தான் இருக்கிறேன். இந்த அங்கியை அணிந்தால்தான் தலை வேர்த்து கசகசவென்று ஆகி இப்படி நடக்கிறது. தலை வேறு வலிக்கிறது” என்று அழாக்குறையாக தன் ஹிஜாப் என்னும் அந்த தலையை சுற்றி அணியப்படும் அங்கியை காட்டி சொன்னது எனக்கு சுருக்கென்று தைத்தது.
ஆனால் பெண்ணின் தந்தையோ கண்டும் காணாமல் இருந்தார்.
7 வயது குழந்தைக்கு அதை அணிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன? யார் இவர்களுக்கு அப்படிச் சொன்னது? எந்த மதநூலில் இருக்கிறது?
முன்பெல்லாம் இஸ்லாமியர் வீட்டுப் பெண்கள் புடவையை தலைப்பாகச் சுற்றியிருப்பார்கள். இல்லை வெள்ளையாக ஒரு அங்கி இருக்கும், அதை மேலே சுற்றிக்கொண்டு இருப்பார்கள். இளம் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள். அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள்.

அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள்.

பாரதவிலாஸ் என்ற ஒரு சிவாஜி படம் நினைவிருக்கும். அதில் வி.கே.ராமசாமி மற்றும் ராஜசுலோச்சனா ஒரு கேரளா மாப்பிளா முஸ்லீம் ஜோடியாக நடித்திருப்பார்கள். அதில் கூட ராஜசுலோச்சனா பாவாடை சட்டை போன்ற ஒரு உடை தான் அணிந்திருப்பார். பின்னந் தலையில் ஒரு அங்கி தொங்கும். அவ்வளவு தான். இன்று கேரள முஸ்லிம்கள் முழு கருப்பு உடையில் தான் தங்கள் வீட்டு பெண்களை வைத்திருக்கிறார்கள்.

பல வருடங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இஸ்லாமிய இளைஞர்கள் நீண்ட ஜிப்பாவும் மார்பு வரை புரளும் தாடியும் முக்கால் காலிற்கு கைலியும் அணிந்தெல்லாம் பார்த்தது கிடையாது. இன்று 20 வயது பையன்கள் கூட அதை போல் திரிகிறார்கள். கல்லூரி படிக்கும் பையன்கள் கூட லேசாக தாடி வைத்துக்கொள்கிறார்கள். கேட்டால் மார்க்கம் என்கிறார்கள். திடீரென்று இவர்கள் இப்படி மாற காரணம் என்ன?

மௌல்விகளும் முல்லாக்களும் இருக்கும் தோரணையில் சாதாரண மக்கள் இருக்க என்ன காரணம்? இவர்கள் நமக்கு எதை உணர்த்துகிறார்கள்?
ஈரான் ஈராக் சண்டை நடந்த போதும், அமெரிக்காவின் டெல்டா போர்ஸ் படை ஈரானில் தன்னுடைய தூதரகத்தில் மாட்டிக் கொண்டிருந்தவர்களை மீட்க தாக்குதல் நடத்தியபோதும், சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்ரமித்தபோதும், சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் எந்த சலனமும் காட்டாதவர்கள் இவர்கள். ஆனால் இன்று இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனையில் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். அமெரிக்கா ஆப்கானை ஆக்ரமித்துவிட்டது என்று புலம்புகிறார்கள். இவர்கள் எப்படி சர்வதேசமயமானார்கள்?

இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் எப்படி தன்னை மற்றவர்கள் வஞ்சிக்கிறார்கள் என்று குற்றம் சொல்லி தன்னை பாதிக்கப்பட்டவனாக ஆக்குகிறது? சோவியத் ரஷ்யா ஆப்கானை ஆக்ரமித்தபோது வாளாவிருந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், இன்று இஸ்ரேல் பாலஸ்தீனில் குண்டு போடுகிறது என்று பாராளுமன்றத்தை முடக்குகிறார்கள். என்ன நடக்கிறது இங்கே?
இஸ்ரேலில் 20% அரேபிய முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் ஈரானிலோ ஈராக்கிலோ சவுதியிலோ ஒரு சதவீதம் யூதர்கள் கூட கிடையாது. ஆனால் இந்த நிலங்களில் அவர்கள் வரலாற்று காலம் தொட்டே பல்கி பெருகி வாழ்ந்தவர்கள். துருக்கிய ஆட்டமன் அரசு காலத்தில் வாழ்ந்த அவர்களால் இந்த நவநாகரீக உலகில் இதே இடங்களில் வாழமுடியாமல் போன காரணம் என்ன? சவுதியின் வாஹாபி இஸ்லாமின் நீட்சியா இது?

இன்று பாரூக் என்ற இஸ்லாமியர் கோவையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் பெரியார் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர், கடுமையான நாத்திகம் பேசினார் என்று சொல்கிறார்கள். அதற்காக அவரின் நண்பர்களே அவரை கொலை செய்யும் வரை சென்றிருக்கிறார்கள்.
ஹிந்து கடவுள்களைப் பற்றி இந்த பெரியார் திராவிட கும்பல் பேசாத பேச்சா? அதற்காக அவர்கள் படுகொலையா செய்யப்பட்டார்கள்? என்னிடமே சண்டைக்கு வந்த திராவிட கழக நண்பர்கள் இருக்கிறார்கள். கைகலப்பு கூட நடந்திருக்கிறது. அதற்காக யாரும் இந்த எல்லைக்கு போனதில்லையே.

கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை பற்றி வைக்காத விமர்சனமா? அவர்களின் சீர்திருத்தவாதிகள் அவர்களில் இருந்தே எழுந்தல்லவா வந்தார்கள்? இஸ்லாம் மட்டும் மீண்டும் மீண்டும் தன்னை ஒரு கூட்டுக்குள் அடைத்துக்கொள்ளும் காரணம் என்ன? மற்றவர்களிடம் நேசக்கரம் நீட்டாமல் மறுப்பதன் நோக்கம் என்ன? 1000 வருடங்கள் பழமைக்கு செல்வேன் என்று இந்த நவீன யுகத்தில் அடம்பிடிப்பதன் காரணம் தான் என்ன?
முன்பெல்லாம் தஞ்சாவூர் போன்ற பெரு நகரங்களிலேயே புர்கா விற்கும் கடைகள் கிடையாது. இன்று சிறு டவுன்களில் கூட அப்படிப்பட்ட கடைகள் பல்கி பெருகிவிட்டன. கைபேசியிலேயே முத்தலாக் என்கிறார்கள். பல தார மணம் என்று புதிது புதிதாக ஏதேதோ கிளம்பி வருகிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையை காக்கும் அதே வேளையில் இதன் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்கும் பொறுப்பும் இஸ்லாமியர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் இந்த நாட்டில் இதன் வரலாற்றில் ஒரு அங்கம் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

அவர்கள் உற்றார்கள் நண்பர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஏமனிலும் மொராக்கோவிலும் இல்லை. மாறாக இந்த மண்ணில் காலம் காலமாக பல்கி பெருகி வாழ்ந்தவர்கள், இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள், இங்கே தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

அவர்கள் மதம் வேண்டுமானால் மெக்காவில் இருந்து வந்திருக்கலாம். மனிதர்கள் இங்கு இருந்து தான் சென்றார்கள் என்பதை மறக்கலாகாது.
இன்று உலகம் முழுக்க தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களாகவும், பலரின் பயத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளானவர்களாகவும் அவர்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இது அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. இன்று அமெரிக்கா ஐரோப்பாவில் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை வந்திருக்கிறது. இது அவர்களுக்கு நல்லதல்ல.

இன்று நம் அறிவுஜீவிகள் கடைபிடிக்கும் கள்ள மௌனத்தின் மூலம் இதை கண்டும் காணாமலும் இருந்துவிட்டால் மறுமையில் கூட இதற்கு மன்னிப்பு கிடையாது என்பதே நிதர்சனம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version